Friday, April 12, 2024

தமிழ்ச் சினிமா வரலாறு-45 – கலைஞருக்கும் கவிஞருக்கும் இடையே இருந்த பிரிக்க முடியாத நட்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்படத் துறையில் தங்களுக்குள்ள செல்வாக்கை அரசியல் வாழ்க்கைக்கு தங்களை அழைத்துச் செல்லக்கூடிய வாகனமாக பல கலைஞர்கள் பயன்படுத்துகின்ற நிலையை இன்று தமிழ் நாட்டில் பரவலாகப் பார்க்கிறோம்.

ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக “என்னுடைய கட்சிப் பணிகளுக்கு இடையூறாக இல்லாமலிருந்தால் திரைப்படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்ற நிபந்தனையுடன் தன்னுடைய முதல் பட வாய்ப்பை ஒப்புக் கொண்டவர்தான் கலைஞர் மு.கருணாநிதி.

இத்தனைக்கும் வருமானம் வரக் கூடிய எந்த வாய்ப்பாக இருந்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக் கொள்ள வேண்டிய வறுமை சூழ்ந்த நிலையில் அவர் இருந்த நேரம் அது.

தனது பதினான்காவது வயதில் அரசியலின்பால் ஈர்க்கப்பட்ட கலைஞர் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட போராட்டங்களும், சந்தித்த சவால்களும் எண்ணிலடங்காதவை.

1957 ஆம் ஆண்டு குளித்தலையில் முதல் தேர்தலைச் சந்தித்த கலைஞர் அந்த நாள் முதல் தனது வாழ்வின் கடைசிவரையிலும் தான் சந்தித்தத் தேர்தல்கள் எதிலும் வெற்றியைத் தவிர வேறெதையும் பார்த்திராதவர். வைர விழா கண்ட தமிழக சட்டமன்றத்தின் ஒரே கதாநாயகர் அவர் மட்டுமே.

தன் வாழ்வில் எண்பதாண்டுகளாக பொது வாழ்க்கையிலே ஈடுபட்டிருந்த கலைஞர். மு.கருணாநிதி அவர்களின் நண்பர்கள் பட்டியல் மிகவும் நீளமானது. அந்த நண்பர்கள் பட்டியலில் தனியிடம் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன்.

அவரோடு கலைஞருக்கு பல சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. பல நாட்கள் அவர்கள் இருவரும்  பேசாமல்கூட இருந்தது உண்டு. ஆனால், அவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஒருவரை ஒருவர் உளமார நேசித்தனர்.

பத்திரிகைகளில் பத்து கவிதைகளும், சினிமாவில் ஐந்து பாடல்களும் மட்டுமே எழுதியிருந்த நிலையில் கண்ணதாசனை ‘கவிஞர்’ என்ற அடை மொழியுடன் அழைத்து பெருமைப்படுத்தியவர் கலைஞர். அவரோடு கடுமையான கருத்து வேறுபாடு இருந்த காலக்கட்டத்தில்கூட அதை மறக்காமல் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.

“கலைஞர் கருணாநிதியும் நானும் எழுதத் தொடங்கியது ஏறக்குறைய ஒரே காலக்கட்டத்தில்தான். அவரது எழுத்தைத்தான் நான் முதலில் காதலித்தேன். அவருடைய எழுத்துக்களில் எனக்குள்ள ஈடுபாடு போல என்னுடைய எழுத்துக்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு.

எழுத்துத் துறையில் கலைஞரை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. பதவிகள் போய்விட்டாலும் அவரது எழுத்துக்களில் அவர் எப்போதும் நிலைத்து நிற்பார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்முதலாக பேச வைத்து என்னை ஒரு பேச்சாளனாக கருணாநிதி அறிமுகப்படுத்தினார். பேசவே தெரியாத நான் பேசப் பழகிக் கொண்டேன். அவரோடு பல சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நான் பேச மாட்டேன். அப்படி நான் மிகக் குறைந்த நேரம் பேசுவதைப் பற்றி கேலி செய்தாலும் அதற்கடுத்த கூட்டத்திலும் என்னைக் கட்டாயமாக அவர் பேச வைப்பார்.

அப்படி வற்புறுத்தி பேச வைத்து ஒரு மணி நேரம் தயங்காமல் பேசக் கூடிய கழகப் பேச்சாளனாக என்னை வளர்த்தவர் அவர்தான். நான் அரசியலுக்கு வந்தது, பேச்சாளரானது இதெல்லாம் பாவமோ புண்ணியமோ – அது எதுவாக இருந்தாலும் அது கலைஞரைத்தான் சேரும் “என்று பல காலக்கட்டங்களில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசனின் அந்த திறந்த மனதை கலைஞரும் பலமுறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

“எனக்கும் அவருக்கும் ஆயிரம் மன வேறுபாடுகள் இருந்த காலக்கட்டத்தில்கூட அவரை முதன்முறையாக ‘கவிஞர்’ என்ற அடைமொழியிட்டு  நான்தான் அழைத்தேன் என்பதைச் சொல்ல அவர் மறந்ததேயில்லை. பல பேர் நன்றியை மறந்து விடுவார்கள். அதுவும் என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான நன்றி மறந்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அந்த அனைவரிடமிருந்தும் மாறுபட்டவர்” என்று சொல்லி பல முறை கலைஞர் பரவசப்பட்டிருக்கிறார்.

நட்புக்கு இலக்கணமாக இருந்த கலைஞருக்கும், கவிஞருக்கும் இடையே முதல் முறையாக பிரிவு ஏற்பட்டது மாடர்ன் தியேட்டர்சின் ‘இல்லற ஜோதி’ படத்திற்கு கண்ணதாசன் வசனம் எழுதியபோதுதான்.

எதை எழுதினாலும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று கவிஞரும் கலைஞரும் வைத்துக் கொண்டிருந்த எழுதப்படாத ஓப்பந்தத்தின்படி “இல்லற ஜோதி”யின் கதை, வசனப் பிரதியை எடுத்துக் கொண்டு திருச்சிக்குப் போனார் கண்ணதாசன்.

அப்போது ‘டால்மியாபுரம்’ என்ற பெயரை ‘கல்லக்குடி’ என்று மாற்ற வேண்டும் என்பதற்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட கலைஞர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தனக்குத் தெரிந்த ஒரு ஜெயில் வார்டன் மூலம் ‘இல்லற ஜோதி’ வசனப் பிரதியை சிறைச் சாலைக்கு கொடுத்தனுப்பினார் கண்ணதாசன். அதற்கு முன்னதாகவே “நீங்கள் சிறையில் இருப்பதால் கண்ணதாசன் வசனம் எழுத ஆரம்பித்துவிட்டார்” என்று சில ‘நல்ல’ நண்பர்கள் கலைஞரின் மனதிலே விஷ விதையை விதைத்திருந்ததால் கண்ணதாசன் கொடுத்து அனுப்பியிருந்த வசனங்களைப் படிக்காமல் மறுநாளே திருப்பி அனுப்பி விட்டார் கலைஞர்.

அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தொடர்ந்து கலைஞரை மிகக் கடுமையாக கண்ணதாசன் விமர்சிக்கவே, அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் கலைஞர்.

“உண்மையில் கருணாநிதி அந்தப் பிரச்னையில் இருந்து ஒதுங்கி விடத்தான் விரும்பினார். அந்த நேரத்தில் நான்தான் தவறு செய்தேன். அதனால்தான் பதிலுக்கு பதில் அவரும் எழுத வேண்டியதாயிற்று” என்று தனக்கும் கலைஞருக்குமிடையே தோன்றிய முதல் வேறுபாடு பற்றி குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.

கலைஞர் மட்டுமின்றி பெருந்ததலைவர் காமராஜர், இந்திரா காந்தி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று பலரும் கவிஞரால் போற்றப்பட்டும், தாக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்றாலும் கவிஞரால் அதிகமாகத் தாக்கப்பட்டவர்கள் பட்டியலில் கலைஞருக்கே முதலிடம்.

ஆனால், அப்படி அவர் திட்டியபோதிலும் கவிஞரின் தமிழ் நடையின் மீது தீராத காதல் கொண்டிருந்தார் கலைஞர். அதைப் பற்றி கவிஞரிடமே அவர் வெளிப்படையாக சொன்ன ஒரு சம்பவம் திரைப்படங்களில் இடம் பெறுகின்ற சம்பவத்தைவிட பல மடங்கு சுவையானது.

அந்த சம்பவம் பற்றி ஒரு கட்டுரையில் கலைஞரே பகிர்ந்து கொண்டுள்ளார்.

“சென்னையில் ஒரு ஓட்டலில் அமர்ந்து ஒரு திரைப்படத்திற்கான வசனங்களை எழுதிக் கொண்டிருந்தேன். மேடை ஏறினால் என்னைப் பற்றி தாக்கிப் பேசாமல் இறங்குவதில்லை என்கிற அளவிற்கு கண்ணதாசன் என்னைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது.

நேரில் சந்தித்தால் பேசிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்கின்ற அளவிற்கு எங்களுக்கிடையே அப்போது பகை வளர்ந்திருந்தது.

தகவல் ஒன்றைச் சொல்வதற்காக எனது பட நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஓட்டலில் இருந்து நான் போன் செய்தபோது என்னோடு பேசிய அந்த நண்பரின் குரலோடு இன்னொரு பழக்கமான குரலும் இடையில் எனக்குக் கேட்டது.

உடனே அந்த நபருடன் பேசுவதை நிறுத்திவிட்டு குறுக்கே இடம் பெற்ற அந்தக் குரலை உன்னிப்பாகக் கேட்டேன். அது கண்ணதாசனின் குரல். நான் போன் பேசிய நேரத்தில் அவர் யாருடனோ பேச முயல இரண்டு இணைப்பும் ஒன்றாகக் கலந்துவிட்டது.

அதற்குள்ளே என்னுடைய குரலைக் கண்டு பிடித்துவிட்ட அவர் ”என்னய்யா” என்று என்னைக் கேட்க ”யாரையா கண்ணதாசனா? நீர் எப்படி இந்த போனுக்கு வந்தீர்?” என்று நான் கேட்க “நான் யாருக்கோ போன் செய்தேன்” என்று அவர் சொல்ல “பரவாயில்லை போனிலாவது பேசிக் கொள்வோம்” என்று நான் சொன்னேன்.

பகை உணர்ச்சியின் உச்சத்தில் இருந்த நாங்கள் இருவரும் அதையெல்லாம் மறந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது ”நான் உன்னைத் தாக்கிப் பேசுகிற பேச்சை எல்லாம் பத்திரிகையில் படிக்கிறாயே.. என்ன உணர்கிறாய்?” என்று அவர் என்னைக் கேட்டார். “என்னை நன்றாகத் திட்டுகின்றீர். நீர் தமிழிலே திட்டுகின்ற காரணத்தால், அதுவும் இனிமையான தமிழிலே திட்டுகின்ற காரணத்தால், அதை நான் ரசித்துக் கொண்டிருக்கிறேனே அல்லாமல் அதற்காக நான் வருத்தப்படவில்லை…” என்று கண்ணதாசனிடம் கூறினேன்” என்று கலைஞர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“கண்ணதாசா,

என் எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா

 கவிதை மலர் தோட்டம் நீ – உன்னைக்

காலமென்னும் பூகம்பம் தகர்த்துத்

தரை மட்டம் ஆக்கிவிட்டதே

கை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்

 கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ

கல்லறைப் பெண்ணின் மடியினிலும்

அப்படித்தான் தாவி விட்டாயோ

அமைதிப்பால் அருந்தித் தூங்கிவிட

இயக்க இசைபாடி களித்த குயில் உன்னை

மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை

தாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்

தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை

திட்டுவதும் தமிழில் நீ திட்டுவதால்

சுவைப்பிட்டு என்று ஏற்றுக் கொண்ட என்னை

தித்திக்கும் கவித் தமிழா, பிரிவின்

மத்தியிலே என் விட்டுச் சென்றுவிட்டாய் “

என்று கவிஞர் கண்ணதாசன் மறைந்தபோது கலங்கிய கண்களுடன் கலைஞர் எழுதிய இரங்கற்பா அவர்கள் இருவருக்குமிடையே இடையே இருந்த நட்புக்கு இன்றும் சாட்சியாக விளங்குகிறது.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News