Friday, April 12, 2024

தமிழ்ச் சினிமா வரலாறு-47 – தமிழ் நாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரை அறிமுகம் செய்த இயக்குநர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘தமிழ்ப்பட உலகின்  பிதாமகன்’ என்று திரை உலகினரால் இன்றுவரை  போற்றப்படுகின்ற இயக்குநர்.கே.சுப்ரமணியம். எண்ணற்ற புதுமுகங்களை திரை உலகிற்கு  அறிமுகம் செய்த அவர்தான் தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர்.

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த ஆரம்ப கால கட்டத்தில் மைலாப்பூரில் இருந்த சுப்ரமணியத்தின்  அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் பல முறை நடந்திருக்கிறார். அவருக்கு  வாய்ப்பு தரவில்லை என்ற போதிலும் கே.சுப்ரமணியம் மீது அளவில்லாத மரியாதை வைத்திருந்தார் எம்ஜிஆர்.

‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்க முடிவெடுத்த  எம்.ஜி.ஆர். அந்தப் படத்திலே  டைரக்ஷன்  மேற்பார்வை செய்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்லி  கே.சுப்ரமணியத்தைக் கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ஆரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக முதல் இரண்டு நாட்கள் ‘நாடோடி மன்னன்’ படத்தின் படப்பிடிப்பிற்கு போனார் கே.சுப்ரமணியம்.

மூன்றாவது நாள் எம்ஜிஆரை தனியாக அழைத்த அவர் “ஒரு டைரக்டர் செய்ய வேண்டிய வேலையை நீ ரொம்பவும் சரியாக செய்து கொண்டிருக்கிறாய். உனக்கு என் மேற்பார்வையெல்லாம் தேவைப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால் நாளை முதல் நான் படப்பிடிப்பிற்கு வரப் போவதில்லை. பட வெளியீட்டின்போது உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னைக் கூப்பிடு. நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு  படப்பிடிப்பிற்கு போவதை நிறுத்திக் கொண்டார்.

வேறு யாராக இருந்தாலும் பேரும் புகழும் சும்மாதானே வருகிறது என்ற எண்ணத்தில்  எம்.ஜி.ஆர்.  சொன்னதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால், அப்படி பெயருக்கு  ஒரு பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்த சுப்ரமணியம் அவர்களின் நேர்மையான போக்கு… சுப்ரமணியம் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மரியாதையை  பல மடங்கு அதிகரிக்கச் செய்தது.

கே.சுப்ரமணியம் அடிப்படையில் ஒரு வக்கீல். பிரபல இயக்குநரான ராஜா சாண்டோவின் ஊமைப் படங்களுக்கு பண உதவி செய்து கொண்டிருந்த அவரை சினிமா உலகிற்குள் இழுத்ததில் இயக்குநரும், நடிகருமான ராஜா சண்டோவிற்குப் பெரும் பங்கு உண்டு. வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்த  சுப்ரமணியத்தை  சினிமாவைக் கற்றுக் கொள்ளச் சொல்லித் தூண்டியவர் அவர்தான்.

அவரது தூண்டுதலைத் தொடர்ந்து சுப்ரமணியம் எழுதிய முதல் கதையான  ‘ராஜேஸ்வரி’ பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைச் சித்தரிக்கும் கதையாக அமைந்தது.

எம்ஜிஆர் நடித்த ‘மதுரை வீரன்’, சிவாஜி கணேசன் நடித்த ‘காவேரி’ போன்ற படங்களை  பின்னாளில் தயாரித்த கிருஷ்ணா பிக்சர்ஸ் அதிபர் லேனா செட்டியார் கே.சுப்ரமணியத்தின் இயக்கத்திலே ஒரு படம் எடுக்க விரும்பினார்.

அதைப் பற்றி பேசுவதற்காக காரைக்குடிக்கு கே.சுப்ரமணியம் சென்றபோது அங்கே எம்.கே,தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி ஆகிய இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த ‘பவளக் கொடி’ நாடகத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

எம்ஜிஆர்-சரோஜாதேவி, சிவாஜி பத்மினி ஜோடிகள் சினிமாவில் ஜொலித்ததைப்போல அந்த நாட்களில்   மேடை நாடகங்களில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக இருந்த அவர்களை மேடையிலே பார்த்தவுடன் ரசிகர்கள் மத்தியில் இனம் புரியாத ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்வதை  கண் கூடாகப் பார்த்த கே.சுப்ரமணியம் அந்த ‘பவளக்கொடி’ நாடகத்தையே படமாக்கலாம் என்றும், அந்த நாடகத்தில் நடித்த எம்.கே.தியாராஜ பாகவதர்-எஸ்.டி.சுப்புலட்சுமி ஜோடியையே படத்திலும் நடிக்க  வைக்கலாம் என்றும் லேனா செட்டியாரிடம் கூறினார்.

‘பவளக் கொடி’யில் நடிக்க தியாகராஜ பாகவதருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் என்றும் முடிவு செய்யப்பட்டது. படத்தை இயக்கிய கே.சுப்ரமணியத்துக்கு எழுநூறு ரூபாய் சம்பளம்.

1934-ம் ஆண்டு வெளிவந்த ‘பவளக்கொடி’ படத்தில் மொத்தம் 55 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அந்தப் படம் நூறு வாரங்கள் ஓடி வசூலில் புதிய சாதனையைப் படைத்தது.

‘பவளக்கொடி’ படத்தில் பணியாற்றியபோது நல்ல குணங்கள் பலவற்றிற்கு சொந்தக்காரராக இருந்த கே.சுப்ரமணியம் மீது காதல் வசப்பட்டார் அந்தப் படத்தின் நாயகியான எஸ்.டி.சுப்புலட்சுமி.  ஏற்கனவே மீனாட்சி என்பவரை மணந்து கொண்டிருந்த கே.சுப்ரமணியம், சுப்புலட்சுமியை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

தியாகராஜ பாகவதர் – எஸ்.டி.சுப்புலட்சுமி ஜோடியுடன் அவர் பணியாற்றிய இரண்டாவது படமான ‘நவீன சாரங்கதாரா’வும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்திற்கும் பிறகு நாடகத்திலும் திரையிலும் புகழ் பெற்ற ஜோடிகளாக விளங்கிய தியாகராஜ பாகவதர்-எஸ்.டி.சுப்புலட்சுமி ஜோடி பிரிந்தது. அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவேயில்லை.

அந்தப் பிரிவு கே.சுப்ரமணியம் அவர்களை மணந்து கொண்ட சுப்புலட்சுமியை பாதிக்கவில்லை என்றாலும் தியாகராஜ பாகவதரை பெரிதும் கலங்க வைத்தது. தனக்கேற்ற சரியான ஜோடி அமையாமல் சில காலம் நாடக மேடையிலும்  திரையுலகிலும்  அவர் தடுமாறினார்.

அப்போதெல்லாம் கும்பகோணத்தில்  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகத்தை ஒட்டி ஒரு பொருட்காட்சியும் நடப்பது வழக்கம். அந்த பொருட்காட்சியின் கலை நிகழ்ச்சிகளுக்கு பொறுபேற்று இருந்தவர் இயக்குநர்.கே.சுப்ரமணியம். 

‘இசைக் குயில்’ எம்.எஸ்.சுப்புலட்சுமியை சுப்ரமணியத்துக்கு எஸ்.டி.சுப்புலட்சுமி அறிமுகம் செய்து வைத்ததைத் தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகப் போருட்காட்சியில் அவரைப் பாட வைத்தார் சுப்ரமணியம்.

கும்பகோணத்தைச் சேர்ந்த இசை ரசிகர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரப் பரவசப்படுத்தியது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல். சாதாரணமாக இசை ரசிகர்கள்  பாடல்களுக்கு ஒன்ஸ் மோர் கேட்பார்கள். ஆனால், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டுக் கச்சேரிக்கே ஒன்ஸ் மோர் கேட்டார்கள் கும்பகோணம் ரசிகர்கள்.

அவர்களின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் அந்த பொருட்காட்சியில் மீண்டும் ஒரு நாள் எம்.எஸ். கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார் கே.சுப்ரமணியம். அதற்கு முன்னால் ஒரு  இசைக் கலைஞரின் நிகழ்ச்சி இரண்டாவது முறையாக அந்த பொருட்காட்சியில் நடந்ததே இல்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி பின்னாளில் படைத்திட்ட எத்தனயோ சரித்திர சாதனைகளுக்கு ஆரம்பமாக அந்த கும்பகோண இசை நிகழ்ச்சி அமைந்தது.

கும்பகோணம் பொருட்காட்சியில் இரண்டு முறை பாட வாய்ப்புத் தந்த கே.சுப்ரமணியம்தான் ‘இசைக்குயில்’ எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு  முதல் முறையாக திரையில் பாடவும் வாய்ப்பு தந்தார்.

கும்பகோணத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சியைக் கேட்டு பரவசப்பட்ட பல்லாயிரக் கணக்கான ரசிகர்களில் அவரும் ஒருவராக இருந்ததுதான் அதற்குக் காரணம்.

அப்போது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் பிரேம் சந்த் எழுதிய நாவல் ஒன்றை தமிழிலே மொழி பெயர்த்து எழுதிக் கொண்டிருந்தார் அம்புஜம் அம்மாள் என்ற கதாசிரியை. அந்தக் கதையை திரைப்படமாக்க விரும்பிய கே.சுப்ரமணியம்  நான்காயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் கதையை திரைப்படமாக்கும் உரிமையை வாங்கினார். அந்த நாளில் கதைக்காக கொடுக்கப்பட்ட அதிகமான தொகை அதுதான்.

‘சேவா சதனம்’ என்ற பெயரிலே அந்தக் கதையைப் படமாக்கிய அவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அந்தப் படத்தில்தான் முதல் முறையாக திரையில் அறிமுகப்படுத்தினார்.

1938-ல் வெளியான ‘சேவா சதனம்’ அன்றைய சமூகப் பிரச்னைகளை எதிரொலிக்கின்ற படமாக அமைந்தது. வயதானவராக  ஜி.நடேச அய்யர் என்ற அமெச்சூர் நடிகரும், வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள் காரணமாக அவரை மணந்து கொள்கின்ற இளம் பெண்ணாக எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அந்தப் படத்தில் நடித்தனர். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ‘சேவா சதனம்’ படம் ஏற்படுத்தியது.

ஒரு பிராமணராக இருந்தபோதிலும் துணிந்து பிராமணக் குடும்பங்களில் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த மூடத்தனங்களை அந்தப் படத்தில் தோலுரித்துக் காட்டினார் கே.சுப்ரமணியம்.

வரதட்சணைக் கொடுமையால் சின்னஞ்சிறு பெண்கள் இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்படுகின்ற துயரமான சூழ்நிலையை ஆவேசத்துடன் சாடிய படமாக ‘சேவா சதனம்’ அமைந்தது.

அந்தப் படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியிருந்த பல பாடல்கள் சமூகக் கொடுமைக்கு ஆளான ஒரு பெண் கடவுளை நோக்கி விண்ணப்பிப்பது போல அமைந்து இருந்தன.

“கூச்ச சுபாவமும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத தன்மையும் கொண்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்கக் கஷ்டப்பட்டது உண்மைதான். ஆனால் பாட்டுச் சிறகை விரித்தபோது அவர் பல வண்ணப் பட்டாம்பூச்சியானார்” என்று தனது “திரை இசை அலைகள்” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார் வாமணன்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, சரோஜாதேவி, வி.என்.ஜானகி, லலிதா, பத்மினி என்று பல நட்சத்திரங்களைத் திரையில் அறிமுகம்செய்த கே.சுப்ரமணியம் மேல் மிகுந்த பக்தி கொண்டவர்களாக எம்.ஜி.ஆர், சந்திரபாபு ஆகிய இருவரும்   இருந்தனர்.

அவர்களது சொந்த வாழ்க்கையில் ஏதாவது பிரச்னை என்றால்  அவர்கள் முதலில் அணுகுகின்ற நபராக கே.சுப்ரமணியம்தான் இருந்தார்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News