Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director a.p.nagarajan – Touring Talkies https://touringtalkies.co Sat, 22 May 2021 13:24:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director a.p.nagarajan – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-54 – வி.கே.ராமசாமியை கதாசிரியராக்கிய ஏ.பி.நாகராஜன் https://touringtalkies.co/history-of-cinema-54-ap-nagarajan-make-vk-ramasamy-to-be-a-story-writer/ Sat, 22 May 2021 13:22:16 +0000 https://touringtalkies.co/?p=15233 ‘நாம் இருவர்’ படத்தில் வி.கே.ராமசாமி ஏற்றிருந்த ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம்  பாத்திரம் மிகச் சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தாலும் அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை. ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் அவரது ‘நல்ல தம்பி’ திரைப்படத்தில் வாய்ப்பு தந்ததற்குப் பிறகுதான் வி.கே.ராமசாமியின் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ‘கிருஷ்ணபக்தி’, ‘வன சுந்தரி’, ’லைலா மஜ்னு’ ஆகிய படங்களில் நடித்த வி.கே.ராமசாமிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான ‘திகம்பர சாமியார்’ […]

The post சினிமா வரலாறு-54 – வி.கே.ராமசாமியை கதாசிரியராக்கிய ஏ.பி.நாகராஜன் appeared first on Touring Talkies.

]]>
‘நாம் இருவர்’ படத்தில் வி.கே.ராமசாமி ஏற்றிருந்த ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம்  பாத்திரம் மிகச் சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தாலும் அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை.

‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் அவரது ‘நல்ல தம்பி’ திரைப்படத்தில் வாய்ப்பு தந்ததற்குப் பிறகுதான் வி.கே.ராமசாமியின் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து ‘கிருஷ்ணபக்தி’, ‘வன சுந்தரி’, ’லைலா மஜ்னு’ ஆகிய படங்களில் நடித்த வி.கே.ராமசாமிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான ‘திகம்பர சாமியார்’ படத்திலும் ‘சர்வாதிகாரி’ படத்திலும் நல்ல வேடங்கள் அமைந்தன. அதற்குப் பிறகு அவரது திரையுலக வாழ்க்கை ஏறுமுகமாகவே அமைந்தது.

1947-ம் ஆண்டில் நடிகராக தமிழ்த் திரையுலகில் கால் பதித்த  வி.கே.ராமசாமி 1957-ம் ஆண்டிலேயே திரைப்படத் தயாரிப்பாளராக உயர்ந்தார். யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவிலே இருந்தபோது விகே.ராமசாமிக்கும், ஏ.பி.நாகராஜனுக்கும் இடையே உருவான நட்பு அவர்  தயாரிப்பாளராக உதவியது.   

நாடக வாழ்க்கைக்குப் பிறகு ‘நால்வர்’ படத்தின் மூலம்  திரை உலகில் கதாசியராக அறிமுகமாகி ‘நல்ல தங்காள்’, ‘பெண்ணரசி’, ‘டவுன் பஸ்’ ஆகிய  பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும், சேர்ந்து ஸ்ரீலஷ்மி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

ஏ.பி.நாகராஜனின் கதை வசனத்தில் ‘மக்களைப் பெற்ற மகராசி’ என்ற படத்தை எடுக்க முடிவு செய்த அவர்கள் படத்தின் இயக்குநராக கே.சோமுவை ஒப்பந்தம் செய்தார்கள்.

ஏ.பி.நாகராஜன் கதை, வசனம் எழுதிய பல படங்களை இயக்கியவர் என்பதால் கே.சோமு, அவர்களது முதல் படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்.

கதாநாயகனாக யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்றெல்லாம் அவர்கள் இருவரும் யோசிக்கவே இல்லை.அவர்களுடைய ஒரே தேர்வாக இருந்தவர் சிவாஜி கணேசன்.

‘பராசக்தி’ படத்தில் நடித்தபோது வி.கே.ராமசாமிக்கு,  சிவாஜி கணேசனுடன் நல்ல பழக்கம் இருந்ததால் அவர்கள் கேட்ட மறு நிமிடமே எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்களது படத்திலே நடிக்க ஒப்புக் கொண்டார் சிவாஜி. 

ஏபி.நாகராஜன் கதை வசனம் எழுதிய அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக பானுமதி நடித்தார். கேவி.மகாதேவனின் இசையில் அருமையான பாடல்களைக் கொண்ட மக்களைப் பெற்ற மகராசி’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப்  படத்தின் வெற்றியைத்  தொடர்ந்து சிவாஜி கணேசன்-சாவித்திரி ஜோடியாக நடிக்க ‘வடிவுக்கு வளைகாப்பு’ என்ற படத்தை அவர்கள் தொடங்கினார்கள். அந்தப் படம்தான்  ஏ.பி.நாகராஜன் இயக்கிய முதல் படம். .அந்தப் படம் ஐந்தாயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் ஜெமினி கணேசனை மணம் முடித்திருந்த ‘வடிவுக்கு வளைகாப்பு’  படத்தின் நாயகி  சாவித்திரிக்கு நிஜ வாழ்க்கையிலேயே வளைகாப்பு நடந்தது.

சாவித்திரியின் கர்ப்பம் காரணமாக  அந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த  முடியாத சூழ்நிலை உருவாயிற்று.  மீண்டும் அந்த படத்தின் படப்பிடிப்பில் சாவித்திரி கலந்து கொள்ள குறைந்தது எட்டு மாதங்களாவது ஆகும் என்பதால் அதற்கிடையில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல் ஒரு படத்தைத் தயாரிக்கலாம் என்று ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் முடிவெடுத்தனர்.

“அதற்கு ஏற்றார்போல ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா?” என்று ஏ.பி.நாகராஜனிடம், வி.கே.ராமசாமி கேட்ட போது “நம்முடைய அடுத்த படத்திற்கு கதை எழுதப் போவது.. நான் இல்லை.. நீங்கள்” என்றார் ஏ.பி.நாகராஜன். 

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வி.கே.ராமசாமி. “என்ன விளையாடுகிறீர்களா? நானாவது கதை எழுதுவதாவது…” என்று நீட்டி முழக்கியபோது “கதை எழுதத் தேவையான எல்லா தகுதிகளும் உங்களிடம் இருக்கிறது.  நாடகத்தில் நடிக்கும்போது காட்சிக்கு ஏற்ற மாதிரி நீங்க வசனம் பேசி நடித்ததை நான் பல முறை ரசித்திருக்கிறேன். அதே போன்று நான் கதை சொல்லும்போது அந்தக் கதையில் எந்த இடம்  தொய்வாக இருக்கிற தென்று மிகச் சரியாக கண்டு பிடித்து சொல்லக் கூடிய ஆற்றல் உங்களிடம் இருப்பதையும் நான் என் அனுபவத்தில் தெரிந்து வைத்திருக்கிறேன்.

அவ்வளவு திறமையும், கற்பனை சக்தியும் உள்ள நீங்கள் கதை எழுத ஆரம்பித்தீர்கள் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஒரு எழுத்தாளனுக்கு முக்கியமான தேவை அனுபவம். அது உங்களிடம் நிறைய இருக்கு. அதனால் இன்றைக்கே பிள்ளையார் சுழி போட்டு கதையை எழுத ஆரம்பியுங்கள்” என்றார் ஏ.பி.நாகராஜன்.

அவர் அப்படி சொல்லிவிட்டுப் போனவுடன் ஒரு கதையை எழுதித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் இரவு பத்து மணிக்கு கதை எழுத உட்கார்ந்த  ராமசாமி முதலில் அந்தக் கதைக்கு ‘நல்ல இடத்து சம்பந்தம்’ என்று மங்களகரமான பெயரை சூட்டினார்.

அறிஞர் அண்ணா ‘ஓர் இரவு’ கதைக்கு ஒரே இரவில் வசனம் எழுதி முடித்ததைப்போல விடியற்காலை ஐந்து மணிக்குள் கதையை முழுவதுமாக எழுதி முடித்த வி.கே.ராமசாமி அடுத்து  அவரது அலுவலகத்துக்கு பக்கத்திலே இருந்த பாண்டி பஜாருக்குப் போய் கீதா ஹோட்டலில் காபியை குடித்து விட்டு வந்து படுத்து விட்டார்.

காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் வந்த ஏ.பி.நாகராஜன் வி.கே.ராமசாமி எழுதி வைத்திருந்த கதையைப் படித்துப் பார்த்துவிட்டு அசந்து போனார்.

வி.கே.ராமசாமியை நடிகனாக ஆக்கியதில் மொத்த பங்கும் அவரது அண்ணனான மாரியப்பனையும், டி.கே.ராமச்சந்திரனையும் மட்டுமே சாரும். தன்னை நடிகனாக்கிய டி.கே.ராமச்சந்திரன் மீது விகே.ராமசாமிக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு என்பதால் அவரது கதாபாத்திரத்தைச் சுற்றியே ‘நல்ல இடத்து சம்பந்தம்’ கதையை எழுதியிருந்தார் அவர்.

காலையில் வி.கே.ராமசாமி எழுந்தவுடன் “கதை ரொம்பவும் பிரமாதமாக இருக்கு. அதனால் உடனே ஷூட்டிங்கிற்கு போய் விடலாம் என்று நினைக்கிறேன். நாளைக்கு நல்ல நாள் என்பதால் எல்லோரிடமும் பேசி அட்வான்ஸ் கொடுத்துவிட்டால் ஒரு மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம்…” என்றார் ஏ.பி.நாகராஜன்.

கதையின் முக்கிய பாத்திரம் டி.கே.ராமச்சந்திரனின் பாத்திரம்தான் என்பதால் முதலில் அவரது தேதிகளை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்த வி.கே.ராமசாமி அவர் பெயருக்கு ஒரு செக் எழுதி தயாரிப்பு நிர்வாகியிடம் கொடுத்து “டி.கே.ராமச்சந்திரனைப் பார்த்து இந்த செக்கைக் கொடுத்து  விட்டு அவருடைய தேதியை எழுதி வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.

அந்தத் தயாரிப்பு நிர்வாகியின் கார் வெளியே போன தருணத்தில் இன்னொரு கார் அந்த காம்பவுண்டிற்குள் நுழைந்தது.அதிலிருந்து இறங்கினார் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா.

அந்த அலுவலகத்துக்கு உள்ளே எம்.ஆர்.ராதா காலடி எடுத்து வைத்த அந்தக் காலக்கட்டத்தில் அவர் நடித்து ‘ரத்தக் கண்ணீர்’ உட்பட  நான்கு படங்கள் வெளியாகியிருந்தன.

அவர் நடித்த முதல் மூன்று படங்களில் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயர்  கிடைத்ததே தவிர அந்தப் படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. அதனால் “படமே ஓடாதபோது தன்னை யார் சினிமாவில்  நடிக்கக் கூப்பிடுவார்கள்” என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார் எம்.ஆர்.ராதா.

அதற்குப் பிறகு சிவாஜி கணேசனை “பராசக்தி” படத்தில் அறிமுகப்படுத்திய நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார் எம்.ஆர்.ராதாவிற்கு தனி அடையாளத்தைத் தந்த ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தை திரைப்படமாக எடுக்க முன் வந்தார்.  

‘ரத்தக் கண்ணீர்’  படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், அதற்குப் பின்னாலேயும் எம்.ஆர்.ராதாவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை .அந்தச் சூழ்நிலையில்தான் வி.கே.ராமசாமியைச்  சந்திக்க அவரது அலுலகத்துக்கு வந்தார் M.R.ராதா.

“என் நாடகம் எல்லாத்தையும் பட்டி தொட்டி எல்லாவற்றிலும் நான் போட்டுவிட்டேன். எல்லா ஜனங்களும் என் நாடகத்தைப் பல முறை திரும்பத் திரும்பப் பார்த்துட்டாங்க. அதனால் முன்பு மாதிரி இப்போது நாடகங்களுக்கு வசூல் ஆக மாட்டேங்குது. வருமானம் இல்லாம நாடகக் குழுவில் இருக்கிற ஐம்பது பேருக்கும் சோறு போட்டு என்னால் சமாளிக்க முடியலே. அதனால கொஞ்ச நாளைக்கு நாடகத்தை நிறுத்திடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அது மட்டுமில்லாமல் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாடகம் ஆடிக்கிட்டு இருக்கிறது…?

நீங்க என்கூட பாய்ஸ் கம்பெனியில் இருந்த பிள்ளைங்க. சிவாஜியை வைச்சி ஒரு படத்தை எடுத்து அதை வெற்றிப் படமாக ஆக்கி இருக்கீங்க. நாடகத்திலே இருந்தது மாதிரியே சினிமாவிலும் உங்களுக்கு நல்ல பேர் இருக்கு.

“ராமசாமியும், நாகராஜனும் பொன்னுசாமி பிள்ளை கம்பெனியிலே உங்ககூட இருந்தவங்களாமே” அப்படீன்னு என்கூட இருக்கிறவனுங்க எல்லோரும்  என்கிட்டே உங்களைப் பற்றி கேட்காத நாளே இல்லை.

என்னைப் பற்றி உங்களுக்கு நல்லா தெரியும் என்பதால் உங்ககிட்ட வேஷம் கேட்கிறதிலே எந்தத் தப்பும் இல்லேன்னுதான் உங்களைத் தேடி இங்கே வந்தேன். என்னைப் பற்றி உங்களுக்குத்தான் நல்லா தெரியும். அதனால எனக்கு ஏற்ற மாதிரி நல்ல வேஷமா நீங்க கொடுத்தீங்கன்னா கொஞ்ச நாளைக்கு படங்களில் நடிச்சிக்கிட்டு இங்கேயே இருக்கலாம்னு இருக்கேன்…” என்று  அவர்களைத் தேடி தான் வந்த நோக்கத்தைச்  சொல்லி முடித்தார் எம்.ஆர்.ராதா.

வி.கே.ராமசாமி, ஏ.பி.நாகராஜன் ஆகிய இருவருமே எம்.ஆர்.ராதா மீது மிகுந்த பாசமும் ,அன்பும் கொண்டவர்கள். மேடையிலே அவரது அசாத்தியமான நடிப்பாற்றலைக் கண்டு   அவரை வியந்து  பார்த்த வி.கே.ராமசாமியும், ஏ.பி.நாகராஜனும் எம்.ஆர்.ராதா அப்படி சொல்லி முடித்தவுடன் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தார்கள்.

எம்.ஆர்.ராதாவே தங்களைத் தேடி வந்து வாய்ப்பு கேட்கும்போது அவருக்கு வாய்ப்பு தர வேண்டியது தங்களுடைய கடமை என்பதிலே அவர்கள் இருவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வந்து குறிப்பட்ட நேரத்திலே  அவர்  படத்தை முடித்துக் கொடுப்பாரா என்ற சந்தேகம் அவர்கள் இருவருக்குமே இருந்தது.

முதல் நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு திரும்பவும் நாடகத்திற்கு போகிறேன் என்று அவர் கிளம்பிவிட்டார் என்றால் யார் அவரைக் கேள்வி கேட்க முடியும்? அப்படி ஏதாவது நடந்துவிட்டால் முதல் படத்திலே சம்பாதித்து வைத்துள்ள நல்ல பெயர் அனைத்தும் ஒரே நாளில் போய் விடுமே என்று அவர்கள் அஞ்சினார்கள் .

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு ராமசாமியை தனியாக அழைத்த  ஏ.பி.நாகராஜன். “நான் ராதா அண்ணனிடம் பழகியதற்கும் நீங்கள் பழகியதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால் அவருடைய சம்பளம் உட்பட எல்லா விஷயங்களைப் பற்றியும் நீங்கள் அவரிடம் தெளிவாகப் பேசி விடுங்கள். அண்ணன் என்ன சொல்கிறார் என்பதை வைத்து அடுத்து நாம் என்ன செய்வது என்ற முடிவுக்கு வரலாம்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார். 

சிங்கத்தின் கூண்டுக்குள் தன்னைத் தள்ளிவிட்டுப் போகிறாரே என்று அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார் வி.கே.ராமசாமி.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-54 – வி.கே.ராமசாமியை கதாசிரியராக்கிய ஏ.பி.நாகராஜன் appeared first on Touring Talkies.

]]>