Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
apoorva raagangal movie – Touring Talkies https://touringtalkies.co Thu, 22 Oct 2020 10:40:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png apoorva raagangal movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-21 – ரஜினிக்கு கே.பாலசந்தர் சொன்ன அறிவுரை https://touringtalkies.co/cinema-history-21-k-balachander-advise-to-rajini/ Thu, 22 Oct 2020 10:40:03 +0000 https://touringtalkies.co/?p=9122 ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கான ஆரம்ப வேலைகளில் பாலச்சந்தர் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஒரு நடிப்புப் பயிற்சி பள்ளியை நடத்திக் கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் பெங்களூரிலிருந்து வந்த ஒரு மாணவர் பயின்று கொண்டிருந்தார்.  அவர் பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட். இரண்டாண்டு பயிற்சி முடிந்ததும் அந்த பள்ளி மாணவர்களின் திறமையை எடை போட இரண்டு திரைப்பட இயக்குநர்கள் அந்த பயிற்சிப் பள்ளிக்கு வந்தார்கள். ஒருவர் சித்தலிங்கையா என்ற கன்னடப் பட இயக்குனர். அற்புதமான பல கன்னடத் […]

The post சினிமா வரலாறு-21 – ரஜினிக்கு கே.பாலசந்தர் சொன்ன அறிவுரை appeared first on Touring Talkies.

]]>

‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கான ஆரம்ப வேலைகளில் பாலச்சந்தர் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஒரு நடிப்புப் பயிற்சி பள்ளியை நடத்திக் கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் பெங்களூரிலிருந்து வந்த ஒரு மாணவர் பயின்று கொண்டிருந்தார்.  அவர் பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட்.

இரண்டாண்டு பயிற்சி முடிந்ததும் அந்த பள்ளி மாணவர்களின் திறமையை எடை போட இரண்டு திரைப்பட இயக்குநர்கள் அந்த பயிற்சிப் பள்ளிக்கு வந்தார்கள். ஒருவர் சித்தலிங்கையா என்ற கன்னடப் பட இயக்குனர். அற்புதமான பல கன்னடத் திரைப்படங்களைத் தந்த அவருடைய மகன்தான்  நடிகர் முரளி.

இன்னொருவர் எணணற்ற வித்தியாசமான படைப்புகளால் தமிழ்ப் படங்களின் போக்கையே மாற்றிய இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்.

பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’, ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகிய இரண்டு படங்களும் சிவாஜிராவ் மனதிற்குள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படங்கள்.

பாலச்சந்தரை எப்படியாவது ஒருமுறை சந்தித்துவிட வேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டிருந்தபோதுதான் அவரே தனது நடிப்புப் பள்ளிக்கு வரப் போகிறார் என்ற செய்தி சிவாஜிராவை எட்டியது.

பாலச்சந்தர் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், “பாலச்சந்தர் சார் இருபது நிமிடம்தான் உங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். நேரம் குறைவாக இருப்பதால் உருப்படியான கேள்விகளை மட்டும் அவரிடம் கேளுங்கள்…” என்றார் கல்லூரி முதல்வர் ராஜாராம்.

அந்தக் கேள்வி நேரத்தின்போது  தன்னிடம் கேள்வி கேட்ட சிவாஜிராவோடு கை குலுக்க கையை நீட்டினார் கே.பாலச்சந்தர்.

அவர் கை நீட்டியது அவரோடு  கை குலுக்க அல்ல – கை பிடித்து அவரைத் திரையுலகத்தில் வழி நடத்திச் செல்ல என்பது அன்று சிவாஜிராவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாலச்சந்தரும், சிவாஜிராவும் கை குலுக்கிக் கொண்டிருக்கும்போது அந்த நடிப்புப் பயிற்சி பள்ளியின் ஆசிரியரும், சிவாஜிராவின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்ககறை கொண்டவருமான  கோபாலி அங்கே வந்தார்.

“உங்களுடைய படம்னா இவன் உயிரை விடுவான் சார்” என்று  பாலச்சந்தரிடம் சிவாஜிராவ் பற்றி அவர் சொன்னபோது “தமிழ் தெரியுமா..?” என்று சிவாஜிராவைப் பார்த்து கேட்டார் பாலச்சந்தர்.

“கொஞ்சம், கொஞ்சம் தெரியும்” என்று சிவாஜிராவ் சொல்ல “அது நீ தமிழ் பேசற அழகிலேயே  தெரியுது…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் பாலச்சந்தர்.

அப்போது ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடிக்க ஒரு நடிகரைத் தேடிக் கொண்டிருந்தார் பாலசந்தர்.

அந்த நடிகர் தெரிந்த முகமாக இருந்தால் எடுபடாது. அதே சமயம் ஒரு சாதாரண நடிகரை ஸ்ரீவித்யாவிற்கு ஜோடியாகவும் போட முடியாது. அதனால் ஒரு புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று பாலச்சந்தர் சிந்தித்துக் கொண்டிருந்தபோது பிலிம் சேம்பர் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் பார்த்த சிவாஜிராவ் மின்னல் மாதிரி அவரது நினைவுக்கு வந்தார்.

உடனே தயாரிப்பு நிர்வாகி ராமுடுவை அழைத்து “அன்னிக்கு அந்த பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பார்த்த அந்த பையன் எங்கே இருக்கான்னு பாரு. அவனை தேடிப் பிடிச்சி உடனே கூட்டிக்கிட்டு வா..” என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் சிவாஜிராவைக் கண்டு பிடித்து பாலச்சந்தர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார் ராமுடு.

“வாப்பா” என்று சிவாஜிராவை வரவேற்ற பாலச்சந்தர் “நான் இப்போ ‘அபூர்வ ராகங்கள்’ன்னு ஒரு படம் பண்ணப் போறேன். அதில் ஒரு ரோல் இருக்கு. நீ பண்றியா..?” என்று சிவாஜி ராவைப் பார்த்து கேட்டார். “பண்றேன் சார்” என்று அடுத்த நிமிடமே சொன்ன சிவாஜி ராவ் அத்தோடு நிற்கவில்லை. “கொஞ்சம் நடிச்சிக் காட்டவா?” என்று கேட்டார். சிவாஜிராவின் ஆர்வத்திற்குத் தடை போட விரும்பாமல், ”சரி.. நடித்துக் காட்டு” என்றார் பாலச்சந்தர்.

“வரி வட்டி, கிஸ்தி..

யாரைக் கேட்கிறாய் வரி..

எதற்கு கேட்கிறாய் வரி..

வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.

உனக்கேன் கட்ட வேண்டும் வரி”

“வீரபாண்டிய கட்டபொம்மன்” படத்தில் சிவாஜி பேசிய வசனங்களை சிவாஜிராவ் முழங்கத் தொடங்கியபோது “போதும்” என்று கை காட்டினார் பாலச்சந்தர்.

“ஏன் அவர் மாதிரி நீ நடிக்கறே…? உனக்குன்னு ஒரு தனி பாணி இருக்கணும். அதுதான் உனக்கு அடையாளமா இருக்கணும்…” என்று அழுத்தம்திருத்தமாக சொல்லிவிட்டு “உன் பேர் என்னன்னு சொன்னே..?” என்று  கேட்டார்.

“சிவாஜி, சிவாஜிராவ்” என்று வர்தா புயலைப்போல நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பதில் பறந்து வந்தது அவரிடமிருந்து.

“நீ வேகமாகப் பேசறது.. வேகமாக நடக்கிறது.. வேகமாக திரும்பறது எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால், உன் தமிழ் உச்சரிப்புதான் கொஞ்சம் தடுமாறுது. அதில நீ கவனம் செலுத்தணும். நல்லா தமிழ் பேச கத்துக்க..” என்று சொன்ன அவர் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அவருடைய பாத்திரம் பற்றி விளக்கமாக சொன்னார்.

“இந்தப் படத்தில உன் ரோல் சின்ன ரோலாக இருந்தாலும் ரொம்ப முக்கியமான ரோல். படத்தில் நீதான் ஸ்ரீவித்யாவோட புருஷன். பொண்டாட்டியைக் கைவிட்டுட்டு ஓடிப் போய் அப்புறம் திரும்பி வருகின்ற ஒரு கணவனின் பாத்திரம். படத்தோட கிளைமாக்சே இந்தக் கேரக்டராலதான். சின்ன ரோல்ன்னு நினைக்காதே. என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் நல்ல ரோலாக  தர்றேன். இதை அதுக்கு ஆரம்பமாக  நினைச்சுக்க…” என்று பாலச்சந்தர் சொல்லச் சொல்ல சிவாஜி ராவின் முகத்திலே  அப்படி ஒரு ஆனந்தம்.

அவருடைய படத்தில் ஒரே ஒரு காட்சி என்றாலும்கூட சிவாஜிராவுக்கு சம்மதம்தான். அப்படியிருக்க பாலச்சந்தர் ஒரு புதுமுகமான தன்னிடம் அப்படிப் பேசியதும், அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சிவாஜி ராவ்.

தொடர்ந்து மூன்று படங்களுக்கு சிவாஜி ராவை ஒப்பந்தம் செய்தார்  பாலச்சந்தர். ஒரே ஒரு சந்திப்பிலேயே சிவாஜி ராவின்  திறமை மேல் பாலச்சந்தர் எந்த அளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம். 

முதல் நாள் படப்பிடிப்பிற்காக சிவாஜி ராவை ஏற்றிக்கொண்டு சென்ற கார் நேராக கலாகேந்திரா நிறுவனத்துக்குச் சென்றது. இவர் அங்கே போன அடுத்த ஓரு  மணி நேரத்தில் கமல்ஹாசன் அங்கே வந்தார்.

“எவ்வளவு அழகாக இருக்கிறார்” என்று கமல்ஹாசனைப் பார்த்து வியந்த சிவாஜி ராவ் “ஐயாம். சிவாஜி ராவ் பிரம் பெங்களூர் உங்களுடைய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பார்த்தேன். பிரமாதம் அசத்திட்டீங்க…” என்று கமலஹாசனைப் பாராட்டினார். புன்னகையோடு சிவாஜி ராவின் பாராட்டை ஏற்றுக் கொண்டார் கமல்ஹாசன்.

லொகேஷனுக்குப் போனதும் “சார் நான் சிகரெட்டைத் தூக்கிப் போட்டு அப்படியே வாயில் கவ்விப் பிடிப்பேன். என் நண்பர்கள் எல்லோரும் அதை ரொம்ப ரசிப்பாங்க. அதைப் படத்தில் செய்யட்டுமா?” என்று பாலச்சந்தரிடம் கேட்ட சிவாஜி ராவ் அவரது  பதிலுக்காகக் காத்திருக்கவில்லை.

ஒரு சிகரெட்டைத் தூக்கிப் போட்டார். ஸ்டைலாக அதை வாயில் கவ்வினார். அதைப் பார்த்துவிட்டு மொத்த யூனிட்டும் கை தட்டிப் பாராட்டியது. பாலச்சந்தரும் ரசித்தார்.

“இதில நீ நடிக்கப் போறது கேன்சர் பேஷன்ட் வேடம். அதுக்கு சிகரெட் பிடிப்பது எல்லாம் சரியா வராது. அதனால அடுத்த படத்தில் அதையெல்லாம் வைச்சிக்கலாம்…”என்றார்அவர்.

சிவாஜிராவுக்கு பாலசந்தர் யூனிட்டின் நிரந்தர ஒப்பனையாளரான சுந்தரமூர்த்தி மேக்கப் போட்டார். முகத்தில் தாடி ஒட்டப்பட்டது. ஒரு நைந்த கோட்டை மாட்டிவிட்டார்கள்.

‘சிவாஜி’ என்னும் பெயர் தமிழ் ரசிகர்கள் எல்லோரது உள்ளங்களிலும் ஏற்கனவே குடி கொண்டிருக்கும் பெயர் என்பதால் ‘சிவாஜி’ என்ற பெயரோ ‘சிவாஜி ராவ்’ என்ற பெயரோ அவருக்கு சரியாக அமையாது என்று முடிவெடுத்த பாலச்சந்தர், ‘ரஜினிகாந்த்’ என்று கம்பிரமான ஒரு பெயரை சிவாஜி ராவுக்கு சூட்டினார்.

அடுத்து ஸ்ரீவித்யாவின் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு ரஜினிகாந்த், அந்த வீட்டுக்கு உள்ளே வரும் காட்சி அவர் நடித்த  முதல் காட்சியாகப் படமாக்கப்பட்டது.

அன்று படமாக்கப்பட்ட அந்தக் காட்சி அந்தத் திரைப்படத்திற்கான காட்சியாக மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு ரஜினிகாந்த் என்னும் மாபெரும் கலைஞன் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் காட்சியாகவும்அமைந்தது.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது இந்தப் படத்துடன் முடிந்துவிடவில்லை. உன்னைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று ரஜினிகாந்தின் கைகளைப் பற்றியபடி உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார் பாலச்சந்தர்.

‘பேசும் படம்’ பத்திரிகை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தைப்  பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. அதற்காகத் தன் கைப்பட சில குறிப்புகளை எழுதித் தந்தார் பாலச்சந்தர்.

அந்த வரிகள் பாலச்சந்தர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை எடுத்துச் சொல்கின்ற வரிகள்.

ரஜினிகாந்த் ‘அபூர்வ ராகங்கள்” படத்தில் நடித்தக் காட்சிகள் மொத்தமாகச் சேர்த்து பத்து நிமிடம்கூட இருக்காது. அப்படி அந்தப் பத்து நிமிட காட்சிகளில் ‘பாண்டியன்’ என்ற பாத்திரத்தில் நடித்த ரஜினியைப்  பற்றி ‘அவரிடம் நல்ல நடிப்பைப் பார்க்கலாம்’ என்று பாலசந்தர் எழுதியிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், ‘நல்ல எதிர்காலத்தைப் பார்க்கலாம்’ என்று அவர் எழுதினார் என்றால் அவர் மனதிற்குள் ‘ரஜனிகாந்த்’ என்ற நடிகரின் ஆற்றல் மீது எந்த அளவு நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும்…?

ஆலமரமாக விரிந்து திரையுலகில் தழைக்கப் போகும் ‘ரஜினிகாந்த்’ என்ற மாமனிதருக்கு வித்தாக ‘அபூர்வ ராகங்கள்’ அமையப் போகிறது என்பது   தெரிந்துதான் அவர் கதவுகளைத் திறந்து கொண்டு வரும் முதல் காட்சியை பின்னால் பிரம்மாண்டமாக இருந்த ஆலமரத்துடன் சேர்த்து  படமாக்கியிருந்தார் பாலச்சந்தர். அதுதான் அவரது தனித் திறன்.

The post சினிமா வரலாறு-21 – ரஜினிக்கு கே.பாலசந்தர் சொன்ன அறிவுரை appeared first on Touring Talkies.

]]>