Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஜி.என். – Touring Talkies https://touringtalkies.co Sat, 17 Oct 2020 10:48:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஜி.என். – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் https://touringtalkies.co/cinema-varalaaru-17-panchu-arunachalam-mgr-msv-ksg/ Sat, 17 Oct 2020 10:46:31 +0000 https://touringtalkies.co/?p=8939 கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று திரையுலகில் பல துறைகளில் சாதனை படைத்த பஞ்சு அருணாச்சலம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளராகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார். கண்ணதாசன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை -நிரந்தர நண்பரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எவரோடும் அவர் எப்போது நெருக்கமாக இருப்பார்… எப்போது விலகி இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. சிவாஜி கணேசனைப் பகைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவில் ஒரு […]

The post சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் appeared first on Touring Talkies.

]]>

கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று திரையுலகில் பல துறைகளில் சாதனை படைத்த பஞ்சு அருணாச்சலம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளராகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார்.

கண்ணதாசன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை -நிரந்தர நண்பரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எவரோடும் அவர் எப்போது நெருக்கமாக இருப்பார்… எப்போது விலகி இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது.

சிவாஜி கணேசனைப் பகைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவில் ஒரு கால கட்டத்தில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து “என்னுடைய படங்களுக்கு வசனம் எழுதவோ,  பாடல் எழுதவோ கண்ணதாசனை அழைக்காதீர்கள்…” என்று தனது தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் கண்டிப்பாகக் கூறினார் எம்.ஜி.ஆர்.

அப்படி கண்ணதாசனிடமிருந்து எம்.ஜி.ஆர். விலகி இருந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் பாடல் எழுதக் கூடிய வாய்ப்பு அப்போது கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலத்துக்குக் கிடைத்தது.

அந்த வாய்ப்பை பஞ்சு அருணாச்சலத்துக்கு வழங்கியவர் பஞ்சுவின் நெருங்கிய நண்பராக இருந்த  ‘கலங்கரை விளக்கம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அவர்கள்.

‘கலங்கரை விளக்கம்’ படத்திற்காக ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ என்ற பாடலையும், ‘என்னை மறந்ததேன்’ என்ற பாடலையும் எழுதியிருந்தார் பஞ்சு.

எம்.ஜி.ஆர். படத்துக்காக தான் எழுதிய பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்  பதிவானவுடன் அவருக்கு ஆனந்தம் என்றால் அப்படி ஒரு ஆனந்தம். ஏனெனில், அப்போது எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு அரிதான ஒரு விஷயம்.

பாடல் பதிவான மறு தினமே மிகப் பெரிய வில்லங்கத்தை அந்தப் பாடல் சந்திக்கப் போகிறது என்று அப்போது பஞ்சு  அருணாச்சலத்துக்குத்  தெரியாது.

பதிவு செய்யப்பட்ட பாடலை மறுநாள் எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காண்பித்தார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். “இன்னொரு தடவை போடுங்க” என்றதும் வேலுமணிக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. எம்.ஜி.ஆரே., இன்னொரு தடவை கேட்க விரும்புகிறார் என்றால் பாட்டு நிச்சயமாக பெரிய ஹிட்டாகி விடும் என்ற நினைப்புடன், இன்னொரு முறை அந்தப் பாட்டைப் போட்டார் வேலுமணி.

இரண்டவது முறை கேட்டுவிட்டு ‘இன்னொரு முறை’ என்ற எம்.ஜி.ஆர். மூன்றாவது முறையாகப் பாடலைக் கேட்டு முடித்தவுடன் ஜி.என்.வேலுமணியைப் பார்த்து, “இந்தப் பாட்டை யார் எழுதினதுன்னு சொன்னீங்க…?” என்றார்.

அதுவரை ஆனந்தமாக இருந்த ஜி.என்.வேலுமணியின் முகம் எம்.ஜி.ஆர்., இந்த கேள்வியைக் கேட்டதும் லேசாக மாறியது.

“ஏன் கேட்கறீங்க..? பஞ்சு அருணாச்சலம்தான் எழுதினார்” என்று ஜி. என். வேலுமணி சொல்லி முடிப்பதற்கு முன்னாலேயே, “நிச்சயமாக இருக்காது” என்ற எம்.ஜி.ஆர்.,  “இந்தப் பாட்டை நிச்சயமாக பஞ்சு அருணாச்சலம் எழுதியிருக்க முடியாது. இப்படிப்பட்ட பாடலை கண்ணதாசனால் மட்டும்தான் எழுத முடியும். அதனால என்கிட்டே  பொய் சொல்லாதிங்க. முதல்ல இந்தப் பாட்டை தூக்கிப் போட்டுட்டு வேற ஏதாவது ஒரு கவிஞர்கிட்ட பாட்டை எழுதி ரிக்கார்ட் பண்ணுங்க” என்று  திட்டவட்டமாகச்  சொன்னார்.

“இல்லேண்ணே. நான்தான் பஞ்சுவை அழைத்துக் கொண்டு வந்து பாட்டெழுத வைத்தேன். என் முன்னாடிதான் பஞ்சு இந்தப் பாட்டை எழுதினார்…” என்றார் வேலுமணி.

“கண்ணதாசன் எழுத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா. அதனால திரும்பத் திரும்ப நீங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காம… நான் சொன்னதை செய்யுங்க…” என்று இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். சொன்னபோது அவர் குரலில் கொஞ்சம் கடுமை இருந்தது.

அதற்குப் பிறகு எம்.ஜி.ஆரிடம் தான் ஒரு வார்த்தை பேசினாலும் அதன் விளைவு வேறு மாதிரி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஜி.என்.வேலுமணி அடுத்து நேராக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து நடந்த விஷயம் முழுவதையும் கூறினார்.

அதைத் தொடர்ந்து  எம்.ஜி.ஆரை சந்தித்த எம்.எஸ்.விஸ்வநாதன், “நான் சொன்னாகூட நீங்க நம்ப மாட்டீங்களா..? அந்த இரண்டு பாட்டையும் எழுதினது பஞ்சுதான்…” என்று அவரிடம் சொன்னது மட்டுமின்றி, “அதில் ஒரு பாட்டு என் டியூனுக்கு அவன் எழுதினது. இன்னொரு பாட்டு  அவன் எழுதின பல்லவிக்கு நான் டியூன் போட்டது” என்று நடந்ததை அப்படியே விளக்கமாக எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.

அதுவரை “இது பஞ்சுவின் பாட்டே இல்லை; கண்ணதாசனின் பாட்டுதான்” என்று அழுத்தந்திருத்தமாக சொல்லிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்ன  விளக்கத்திற்குப் பிறகு “பஞ்சு ரொம்ப நல்லா எழுதறாரே..” என்று பஞ்சு அருணாச்சலத்தைப் பாராட்டியது மட்டுமின்றி வேலுமணியை அழைத்து ”இனிமே நம்ம படத்தில்  எல்லாம் அவரைத்  தொடர்ந்து எழுதச் சொல்லலாம் என்றிருக்கிறேன். அதனால பஞ்சுவை  நாளைக்கு  என்னை வந்து  பார்க்க சொல்லுங்க…” என்றார்.

காலையில் புயல் வீசிய பஞ்சு அருணாச்சலத்தின் வாழ்க்கையில் மாலையில் தென்றல் விசியது. இருந்தாலும் அவரால் நிம்மதியாகத்  தூங்க முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கும், கவிஞருக்கும் இடையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத தன்னை அழைக்கிறார் என்று பஞ்சு சொன்னால் “தாராளமாக போய் வா” என்று ஆசி கூறி கவிஞர் தன்னை அனுப்பி வைப்பார் என்று பஞ்சுவிற்கு நன்றாகத்  தெரியும்.

ஆனாலும், அவரைப் பகைத்துக் கொண்டு இருப்பவரை சந்தித்து அவர் படங்களில் பாட்டெழுத வாய்ப்பு பெறுவதை பஞ்சு அருணாச்சலம் விரும்பாததால் மறுநாள் எம்.ஜி.ஆரை சந்திக்க அவர் போகவில்லை.

எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமின்றி கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத வந்த வாய்ப்பையும், இதே காரணத்திற்காகத்தான் ஏற்க மறுத்தார் பஞ்சு அருணாச்சலம்.

கண்ணதாசனைப் பொறுத்தவரையில் ஒரு பாடலுக்கு இவ்வளவு தந்தால்தான் பாட்டு எழுதுவேன் என்று யாரிடமும் அவர் சொன்னதில்லை. இரண்டாயிரம், மூவாயிரம்  ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். வசதியில்லாத தயாரிப்பாளர் ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்.

அப்படி அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சூழ்நிலையில் ஒருநாள் கவிஞரின் நெருங்கிய நண்பரான பீம்சிங் அவரிடம் ”ஏன்  இப்படி ஒரு பாடலுக்கு  இரண்டாயிரம், மூவாயிரம் என்று வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு படத்துக்கு இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று என்று உங்களது தயாரிப்பாளர்களிடம் கூறிவிட வேண்டியதுதானே…” என்றார்.

அவர் சொன்ன திட்டம்  கவிஞருக்கும் சரியெனத்  தோன்றியதால் உடனே பஞ்சு அருணாச்சலத்தை அழைத்த அவர் “இனிமேல் படத்துக்கு சம்பளம் பேசும்போது பெரிய படங்களுக்கெல்லாம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று சொல்லிவிடு. அது எத்தனை பாடலாக இருந்தாலும் பரவாயில்லை. சிறிய நட்சத்திரங்கள் நடிக்கிற படத்துக்கு நாம்ப கொஞ்சம் குறைத்து வாங்கிக் கொள்ளலாம்…“  என்றார். 

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அத்தனை சிக்கல்கள் தோன்றும் என்று இதைப் பற்றி இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் செல்லும்வரை  பஞ்சு அருணாச்சலத்துக்கு தெரியாது. 

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பொறுத்தவரை அவரே பாடல்களை எழுதக் கூடிய ஒரு கவிஞர் என்ற போதிலும் கண்ணதாசன் பாடல்கள் என்றால் அவருக்கு உயிர். அப்படிப்பட்ட அவர் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்தபோது அவரைப் பார்த்து பேசிய பஞ்சு, “கவிஞர் இனி ஒரு படத்துக்கு தனது சம்பளம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளார்…” என்ற செய்தியை அவரிடம் சொன்னார்.

அதைக் கேட்டவுடன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவ்வளவு ஆத்திரப்படுவார் என்று பஞ்சு அருணாச்சலம் கனவிலும் நினைக்கவில்லை.

“கவிஞர் ஒரு பாட்டுக்கு இருபத்தி ஐயாயிரம் கேட்டால்கூட நான் தரத் தயாராக இருக்கேன். அது வேற விஷயம். ஆனால், என் படத்தில்  எல்லா பாட்டையும் அவரே எழுதணும்னு  என்று அவர் முடிவு செய்வது எந்த வகையில் நியாயம்…?

நான் என்னுடைய படத்திலே அவருக்கு ஒரு பாட்டு கொடுப்பேன். இல்லே.. இரண்டு பாட்டு கொடுப்பேன். மீதி உள்ள பாடல்களை வேறு யாரையாவது விட்டு எழுதச்  சொல்வேன். இல்லே… நானே  எழுதுவேன். அதனால எங்கிட்ட இது மாதிரி கேட்கறதை எல்லாம் விட்டுவிட்டு அவரை வழக்கம்போல பாட்டுக்கு  இரண்டாயிரமோ, மூவாயிரமோ வாங்கிக் கொண்டு எழுதச் சொல்…” என்றார் அவர்.

இதை எப்படி கவிஞரிடம் சொல்வது என்று யோசித்த பஞ்சு அருணாச்சலம் இறுதிவரை இதைப் பற்றி அவரிடம்  சொல்லவேயில்லை. இதற்கிடையில் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத வேண்டிய நாள் நெருங்கியது.

அப்போது பஞ்சு அருணாச்சலத்தை தொடர்பு கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சகோதரர் சபரிநாதன் “கவிஞர் வரலேன்னா பரவாயில்லை. அண்ணன் இந்த படத்துக்கு உன்னையே பாட்டு எழுதச் சொல்லிட்டாரு. அதனால நாளைக்குக் காலையிலே ஸ்டுடியோவிற்கு வந்துவிடு” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டவுடன் பஞ்சுவிற்கு தூக்கிவாரிப் போட்டது. “கவிஞரோட சம்பளத்தைப் பேச வந்த நான், இப்போது உங்களுடைய படத்துக்குப் பாட்டு எழுதினால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நான் கவிஞருடைய வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டேன்னுதான் எல்லோரும் தப்பா எடுத்துக்குவாங்க. அதனால் என்னை மன்னிச்சிக்கங்க. என்னால வர முடியாது…” என்று உடனடியாக அவருக்கு பதில் கூறினார் பஞ்சு.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ‘கற்பகம்’ படத்தில் எல்லா பாடல்களையும் எழுதினார் வாலி.

The post சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் appeared first on Touring Talkies.

]]>