Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சினிமா வரலாறு-63 – Touring Talkies https://touringtalkies.co Sat, 07 Aug 2021 13:38:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சினிமா வரலாறு-63 – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-63 – கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வித்தியாசமாக விருந்து கொடுத்த நடிகை https://touringtalkies.co/cinema-history-63-actress-who-gave-a-different-party-to-ks-gopalakrishnan/ Sat, 07 Aug 2021 13:37:25 +0000 https://touringtalkies.co/?p=16859 ‘படிக்காத மேதை’ படத்தின் நாயகனான ரங்கனின் மனைவி கதாப்பாத்திரத்தில் சாவித்திரியோ, சரோஜா தேவியோ, பத்மினியோ நடித்தால் நிச்சயம் அந்தப் பாத்திரம் எடுபடாது என்றும், அந்தப் பாத்திரம் எடுபடாமல் போனால் படத்தின் வெற்றியை  அது பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எண்ணி பயந்த அப்படத்தின் வசனகர்த்தாவான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அந்தப் பாத்திரத்துக்காக தேர்ந்தெடுத்து வைத்திருந்த நடிகை, சவுகார் ஜானகி. அவர்  நடித்தால் மட்டுமே அந்தப் பாத்திரம் உயிரோட்டத்தோடு அமையும் என்று திடமாக எண்ணினார். ஆனால், அவரது அந்த முடிவை அந்தப் பட […]

The post சினிமா வரலாறு-63 – கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வித்தியாசமாக விருந்து கொடுத்த நடிகை appeared first on Touring Talkies.

]]>
‘படிக்காத மேதை’ படத்தின் நாயகனான ரங்கனின் மனைவி கதாப்பாத்திரத்தில் சாவித்திரியோ, சரோஜா தேவியோ, பத்மினியோ நடித்தால் நிச்சயம் அந்தப் பாத்திரம் எடுபடாது என்றும், அந்தப் பாத்திரம் எடுபடாமல் போனால் படத்தின் வெற்றியை  அது பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எண்ணி பயந்த அப்படத்தின் வசனகர்த்தாவான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அந்தப் பாத்திரத்துக்காக தேர்ந்தெடுத்து வைத்திருந்த நடிகை, சவுகார் ஜானகி.

அவர்  நடித்தால் மட்டுமே அந்தப் பாத்திரம் உயிரோட்டத்தோடு அமையும் என்று திடமாக எண்ணினார். ஆனால், அவரது அந்த முடிவை அந்தப் பட யூனிட்டில் இருந்த எவரும் ஆதரிக்கவில்லை.

ஆகவே, ‘படிக்காத மேதை’ படத்தில் சவுகார் ஜானகியைக் கதாநாயகியாக நடிக்க வைக்கவில்லை என்றால் அந்தப்  படத்திற்கு வசனம் எழுதுகின்ற பொறுப்பிலிருந்து  விலகி விடுவது என்ற தீர்மானமான ஒரு முடிவினை எடுத்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தன்னை அந்த படத்துக்கு பரிந்துரை செய்தவர் சிவாஜி என்பதால் அவரிடம் தன்னுடைய முடிவைத் தெரிவிக்கச் சென்றார்.

அப்போது “சவுகார் ஜானகியைப் படத்தில் போடவே கூடாது என்று நீ ஒற்றைக் காலில் நிற்கிறாயாமே? என்ன காரணம்?” என்று அவரைப் பார்த்து சிவாஜி கேட்டவுடன்  கோபாலகிருஷ்ணன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சிவாஜிக்கும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்த  சமயத்தில் சவுகார் ஜானகியும் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த அதே ஸ்டுடியோவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். கோபாலகிருஷ்ணன் வந்திருப்பதைத் தெரிந்து கொண்ட அவர் வேகமாக அவரை நோக்கி நடந்து வந்தார்.

சவுகார் ஜானகி  அப்படி வேகமாக வருவதைப் பார்த்தவுடன் சிவாஜியிடம் சொன்னது மாதிரி அவரிடமும் யாரோ தவறாக சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் நம்மோடு சண்டை போடத்தான் அவர் வருகிறார் என்று கோபாலகிருஷ்ணன் நினைத்துக்கொண்டிருந்தபோது அவர் அருகில் வந்த சவுகார் “இன்று எங்கள் வீட்டில் ஒரு விசேஷம். அதனால் முக்கியமானவர்களை  எல்லாம் விருந்துக்கு அழைத்திருக்கிறேன். நீங்களும் கட்டாயம் அந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டும்” என்று அவரிடம் கூறினார்.

அவர் சண்டை போட வரவில்லை என்பது தெரிந்ததும்  மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன்  தவறாமல் விருந்தி ற்கு வருவதாக அவரிடம் ஒப்புக் கொண்டார்.

சரியாக ஏழு மணிக்கு சவுகார் வீட்டுக்கு  கோபாலகிருஷ்ணன் சென்றபோது  அவரது கார் சத்தத்தைக் கேட்டு வாசலுக்கு ஓடி வந்த சவுகார் ஜானகி அவரை மிகுந்த மரியாதையோடு வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

விருந்தினர்களை உபசரிப்பதில் சவுகாருக்கு நிகர் சவுகார்தான் என்று பெயர் வாங்கியவர் அவர்  என்பதால் அவரது உபசரிப்பு கோபாலகிருஷ்ணனை ஆச்சர்யப்படுத்தவில்லை.

உபசரிப்புக் கலையைப் போலவே, சமையல் கலையிலும் சவுகார் வல்லவர் என்பதால் வீட்டுக்குள் வந்தமர்ந்த கோபாலகிருஷ்ணன் பசியை இன்னும் கொஞ்சம் அதிகமாகத்  தூண்டியது சமையல் அறையில் இருந்து வந்த வாசனை.

ஆனால், சவுகார் யாரையெல்லாம் விருந்துக்கு அழைத்திருக்கிறார் என்பது தெரியாததால் அவர் அழைத்திருப்பவர்கள் அனை வரும் வந்த பிறகுதானே விருந்து ஆரம்பமாகும் என்ற எண்ணியபடியே  பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

மணி எட்டை நெருங்கிய பிறகும் விருந்தினர்கள் யாரும் வரவில்லை. பசியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோபாலகிருஷ்ணன் தவித்துக் கொண்டிருந்தபோது சவுகார் சமையலை முடித்துவிட்டு ஹாலுக்கு வந்தார் சவுகார் ஜானகி.

“நான்தான் முதல் விருந்தாளி போல இருக்கிறது” என்று பேச்சை ஆரம்பித்த கோபாலகிருஷ்ணன் “எல்லோரையும்  எத்தனை மணிக்கு வரச் சொல்லியிருக்கிறீர்கள்..? மற்றவர்கள் யாரையும்  இன்னும் காணோமே” என்று சவுகாரிடம்  கேட்டார்.

“அழைத்திருந்தால்தானே வருவார்கள்” என்று அவருக்கு  பதில் சொல்லி விட்டு  பக்கத்து  அறைக்குச்  சென்ற சவுகார் திரும்பி வந்தபோது, அவர் கையில் ஆளுயர மாலை ஒன்று இருந்தது.

“இன்றைய விருந்து உங்களுக்கு மட்டும்தான். வேறு யாரையும் நான் அழைக்கவில்லை” என்று கூறியபடியே  கையில் கொண்டு வந்திருந்த  மாலையை கோபாலகிருஷ்ணன் கழுத்தில் அணிவித்துவிட்டு அவர் காலில் விழுந்து வணங்கினார் சவுகார் ஜானகி.

கோபாலகிருஷ்ணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “எனக்கு மட்டும்  விருந்தா? அப்படி எனக்கு நீங்கள் விசேஷமாக விருந்து வைக்கும் அளவிற்கு நான் உங்களுக்கு என்ன செய்து விட்டேன்?” என்று கேட்டார் அவர்.

“என்னுடைய நடிப்புத் திறனைப் புரிந்து கொண்டு எனக்குத் தகுந்த ஒரு பாத்திரத்தை உருவாக்கியது மட்டுமின்றி மூன்று கண்டங்களிலும் புகழ் பெற்று விளங்கும் சிறந்த நடிகரான சிவாஜிக்கு ஜோடியாக என்னை ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டும் என்று சொன்னது நீங்கள்தானே..? அது மட்டும் இல்லாமல் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய பலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, எனக்காகப்  போராடியதும் நீங்கள்தானே. அதற்காகத்தான்  உங்களுக்கு  இந்த விருந்து” என்று சவுகார் சொன்னவுடன் சிவாஜிக்குக் கூடத் தெரியாத விஷயம் இவருக்கு எப்படி தெரிந்தது என்று யோசிக்க ஆரம்பித்தார் கோபாலகிருஷ்ணன்.

அவர் மனதில் என்ன ஓடியதோ அதை அப்படியே படித்தவர் போல “இந்த ரகசியம் எனக்கு எப்படி தெரிந்தது என்றுதானே யோசிக்கிறீர்கள்?” என்று கேட்ட சவுகார் அவருக்கு அந்த விஷயம் எப்படி தெரிந்தது என்பதை விவரமாக சொன்னார்.

“இன்று நெப்டியூன் ஸ்டுடியோவில் எனக்கு படப்பிடிப்பு இருந்தது.  அங்கே தயாரிப்பாளர் கிருஷ்ணசாமி, சிவாஜி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததை என்னுடைய பணிப்பெண் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறாள்

“உங்களுக்கு ஜோடியாக சரோஜாதேவி, பத்மினி, சாவித்திரி ஆகிய மூவரில் யாரையாவது ஒருவரைப் போட வேண்டும் என்று யூனிட்டில் உள்ள எல்லோரும்  சொல்கிறார்கள். ஆனால் கதாசிரியரான கோபாலகிருஷ்ணன் மட்டும் அந்த பாத்திரத்துக்கு சவுகார் ஜானகியைத்தான் போட வேண்டும் என்று ஒத்தைக் காலில் நிற்கிறார் இதில் உங்கள் அபிப்ராயம் என்ன…?” என்று சிவாஜியைப் பார்த்து கிருஷ்ணசாமி கேட்ட போது “கே.எஸ்.ஜி. சொல்வதுதான் சரி. சவுகார்தான் அந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்..” என்று சிவாஜி சொன்னாராம்.

அங்கே நடந்த உரையாடலைக் கேட்ட எனது பணிப்பெண் அதை அப்படியே என்னிடம் சொன்னாள். அதைக் கேட்டவுடனே உங்களுக்கு என் நன்றியைத்  தெரிவிக்க ஒரு விருந்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்றார் சவுகார்.

சிவாஜிக்கு உண்மை தெரிந்தும் சவுகாரை வேண்டாம் என்று தான் சொன்னதாக  தன்னிடம்  அவர்  கிண்டல் செய்திருக்கிறார்  என்ற விஷயம் அப்போதுதான் கோபாலகிருஷ்ணனுக்குப் புரிந்தது.

கோபாலகிருஷ்ணன் சவுகாருக்காக வாதாடியது எவ்வளவு சரியானது  என்பதை படிக்காத மேதை’  படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் நிருபித்திருந்தார் சவுகார்.

சிவாஜி, ரங்காராவ், சவுகார் ஜானகி ஆகிய மூவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருந்த அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது

‘படிக்காத மேதை’ படத்தின் ஒரிஜினல் படமான வங்காளப் படத்தைப் பார்த்து விட்டு அந்தக் கதையை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றுவதோ தமிழில்  வெற்றி பெற வைப்பதோ கடினம் என்ற முடிவில் அந்த படத்துக்கு வசனம் எழுத மறுத்த ஸ்ரீதரிடம்,   கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, வசனத்தில் ஒரு படம் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருப்பதாக அவரது உதவியாளர்கள் சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு அந்தப் படத்தைப் பார்த்தபோதுதான் பலவீனமான கதை என்று தான் வசனம் எழுத மறுத்த கதைதான் அது என்ற விஷயம் ஸ்ரீதருக்குப் புரிந்தது.

“எந்தக் கதையை பலவீனமானது. அதை வைத்துக் கொண்டு பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது என்று நினைத்து நான் ஒதுக்கினேனோ… அந்தக் கதையை  நானே பார்த்து அதிசயிக்கும் அளவிற்கு சுவையான உணர்ச்சிமிக்க கதையாக அமைத்து பெரும் வெற்றி கண்டிருந்தார் என் அருமை நண்பர் கோபால கிருஷ்ணன். அவர் எத்தகைய கற்பனை வளம் மிக்கவர் என்பதற்கு ‘படிக்காத மேதை’ கதையை அவர் கையாண்டிருந்தவிதம் ஒரு உதாரணம்…” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீதர்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-63 – கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வித்தியாசமாக விருந்து கொடுத்த நடிகை appeared first on Touring Talkies.

]]>