Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் – Touring Talkies https://touringtalkies.co Sat, 17 Oct 2020 10:48:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் https://touringtalkies.co/cinema-varalaaru-17-panchu-arunachalam-mgr-msv-ksg/ Sat, 17 Oct 2020 10:46:31 +0000 https://touringtalkies.co/?p=8939 கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று திரையுலகில் பல துறைகளில் சாதனை படைத்த பஞ்சு அருணாச்சலம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளராகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார். கண்ணதாசன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை -நிரந்தர நண்பரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எவரோடும் அவர் எப்போது நெருக்கமாக இருப்பார்… எப்போது விலகி இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. சிவாஜி கணேசனைப் பகைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவில் ஒரு […]

The post சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் appeared first on Touring Talkies.

]]>

கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று திரையுலகில் பல துறைகளில் சாதனை படைத்த பஞ்சு அருணாச்சலம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளராகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார்.

கண்ணதாசன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை -நிரந்தர நண்பரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எவரோடும் அவர் எப்போது நெருக்கமாக இருப்பார்… எப்போது விலகி இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது.

சிவாஜி கணேசனைப் பகைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவில் ஒரு கால கட்டத்தில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து “என்னுடைய படங்களுக்கு வசனம் எழுதவோ,  பாடல் எழுதவோ கண்ணதாசனை அழைக்காதீர்கள்…” என்று தனது தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் கண்டிப்பாகக் கூறினார் எம்.ஜி.ஆர்.

அப்படி கண்ணதாசனிடமிருந்து எம்.ஜி.ஆர். விலகி இருந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் பாடல் எழுதக் கூடிய வாய்ப்பு அப்போது கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலத்துக்குக் கிடைத்தது.

அந்த வாய்ப்பை பஞ்சு அருணாச்சலத்துக்கு வழங்கியவர் பஞ்சுவின் நெருங்கிய நண்பராக இருந்த  ‘கலங்கரை விளக்கம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அவர்கள்.

‘கலங்கரை விளக்கம்’ படத்திற்காக ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ என்ற பாடலையும், ‘என்னை மறந்ததேன்’ என்ற பாடலையும் எழுதியிருந்தார் பஞ்சு.

எம்.ஜி.ஆர். படத்துக்காக தான் எழுதிய பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்  பதிவானவுடன் அவருக்கு ஆனந்தம் என்றால் அப்படி ஒரு ஆனந்தம். ஏனெனில், அப்போது எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு அரிதான ஒரு விஷயம்.

பாடல் பதிவான மறு தினமே மிகப் பெரிய வில்லங்கத்தை அந்தப் பாடல் சந்திக்கப் போகிறது என்று அப்போது பஞ்சு  அருணாச்சலத்துக்குத்  தெரியாது.

பதிவு செய்யப்பட்ட பாடலை மறுநாள் எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காண்பித்தார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். “இன்னொரு தடவை போடுங்க” என்றதும் வேலுமணிக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. எம்.ஜி.ஆரே., இன்னொரு தடவை கேட்க விரும்புகிறார் என்றால் பாட்டு நிச்சயமாக பெரிய ஹிட்டாகி விடும் என்ற நினைப்புடன், இன்னொரு முறை அந்தப் பாட்டைப் போட்டார் வேலுமணி.

இரண்டவது முறை கேட்டுவிட்டு ‘இன்னொரு முறை’ என்ற எம்.ஜி.ஆர். மூன்றாவது முறையாகப் பாடலைக் கேட்டு முடித்தவுடன் ஜி.என்.வேலுமணியைப் பார்த்து, “இந்தப் பாட்டை யார் எழுதினதுன்னு சொன்னீங்க…?” என்றார்.

அதுவரை ஆனந்தமாக இருந்த ஜி.என்.வேலுமணியின் முகம் எம்.ஜி.ஆர்., இந்த கேள்வியைக் கேட்டதும் லேசாக மாறியது.

“ஏன் கேட்கறீங்க..? பஞ்சு அருணாச்சலம்தான் எழுதினார்” என்று ஜி. என். வேலுமணி சொல்லி முடிப்பதற்கு முன்னாலேயே, “நிச்சயமாக இருக்காது” என்ற எம்.ஜி.ஆர்.,  “இந்தப் பாட்டை நிச்சயமாக பஞ்சு அருணாச்சலம் எழுதியிருக்க முடியாது. இப்படிப்பட்ட பாடலை கண்ணதாசனால் மட்டும்தான் எழுத முடியும். அதனால என்கிட்டே  பொய் சொல்லாதிங்க. முதல்ல இந்தப் பாட்டை தூக்கிப் போட்டுட்டு வேற ஏதாவது ஒரு கவிஞர்கிட்ட பாட்டை எழுதி ரிக்கார்ட் பண்ணுங்க” என்று  திட்டவட்டமாகச்  சொன்னார்.

“இல்லேண்ணே. நான்தான் பஞ்சுவை அழைத்துக் கொண்டு வந்து பாட்டெழுத வைத்தேன். என் முன்னாடிதான் பஞ்சு இந்தப் பாட்டை எழுதினார்…” என்றார் வேலுமணி.

“கண்ணதாசன் எழுத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா. அதனால திரும்பத் திரும்ப நீங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காம… நான் சொன்னதை செய்யுங்க…” என்று இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். சொன்னபோது அவர் குரலில் கொஞ்சம் கடுமை இருந்தது.

அதற்குப் பிறகு எம்.ஜி.ஆரிடம் தான் ஒரு வார்த்தை பேசினாலும் அதன் விளைவு வேறு மாதிரி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஜி.என்.வேலுமணி அடுத்து நேராக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து நடந்த விஷயம் முழுவதையும் கூறினார்.

அதைத் தொடர்ந்து  எம்.ஜி.ஆரை சந்தித்த எம்.எஸ்.விஸ்வநாதன், “நான் சொன்னாகூட நீங்க நம்ப மாட்டீங்களா..? அந்த இரண்டு பாட்டையும் எழுதினது பஞ்சுதான்…” என்று அவரிடம் சொன்னது மட்டுமின்றி, “அதில் ஒரு பாட்டு என் டியூனுக்கு அவன் எழுதினது. இன்னொரு பாட்டு  அவன் எழுதின பல்லவிக்கு நான் டியூன் போட்டது” என்று நடந்ததை அப்படியே விளக்கமாக எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.

அதுவரை “இது பஞ்சுவின் பாட்டே இல்லை; கண்ணதாசனின் பாட்டுதான்” என்று அழுத்தந்திருத்தமாக சொல்லிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்ன  விளக்கத்திற்குப் பிறகு “பஞ்சு ரொம்ப நல்லா எழுதறாரே..” என்று பஞ்சு அருணாச்சலத்தைப் பாராட்டியது மட்டுமின்றி வேலுமணியை அழைத்து ”இனிமே நம்ம படத்தில்  எல்லாம் அவரைத்  தொடர்ந்து எழுதச் சொல்லலாம் என்றிருக்கிறேன். அதனால பஞ்சுவை  நாளைக்கு  என்னை வந்து  பார்க்க சொல்லுங்க…” என்றார்.

காலையில் புயல் வீசிய பஞ்சு அருணாச்சலத்தின் வாழ்க்கையில் மாலையில் தென்றல் விசியது. இருந்தாலும் அவரால் நிம்மதியாகத்  தூங்க முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கும், கவிஞருக்கும் இடையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத தன்னை அழைக்கிறார் என்று பஞ்சு சொன்னால் “தாராளமாக போய் வா” என்று ஆசி கூறி கவிஞர் தன்னை அனுப்பி வைப்பார் என்று பஞ்சுவிற்கு நன்றாகத்  தெரியும்.

ஆனாலும், அவரைப் பகைத்துக் கொண்டு இருப்பவரை சந்தித்து அவர் படங்களில் பாட்டெழுத வாய்ப்பு பெறுவதை பஞ்சு அருணாச்சலம் விரும்பாததால் மறுநாள் எம்.ஜி.ஆரை சந்திக்க அவர் போகவில்லை.

எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமின்றி கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத வந்த வாய்ப்பையும், இதே காரணத்திற்காகத்தான் ஏற்க மறுத்தார் பஞ்சு அருணாச்சலம்.

கண்ணதாசனைப் பொறுத்தவரையில் ஒரு பாடலுக்கு இவ்வளவு தந்தால்தான் பாட்டு எழுதுவேன் என்று யாரிடமும் அவர் சொன்னதில்லை. இரண்டாயிரம், மூவாயிரம்  ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். வசதியில்லாத தயாரிப்பாளர் ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்.

அப்படி அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சூழ்நிலையில் ஒருநாள் கவிஞரின் நெருங்கிய நண்பரான பீம்சிங் அவரிடம் ”ஏன்  இப்படி ஒரு பாடலுக்கு  இரண்டாயிரம், மூவாயிரம் என்று வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு படத்துக்கு இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று என்று உங்களது தயாரிப்பாளர்களிடம் கூறிவிட வேண்டியதுதானே…” என்றார்.

அவர் சொன்ன திட்டம்  கவிஞருக்கும் சரியெனத்  தோன்றியதால் உடனே பஞ்சு அருணாச்சலத்தை அழைத்த அவர் “இனிமேல் படத்துக்கு சம்பளம் பேசும்போது பெரிய படங்களுக்கெல்லாம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று சொல்லிவிடு. அது எத்தனை பாடலாக இருந்தாலும் பரவாயில்லை. சிறிய நட்சத்திரங்கள் நடிக்கிற படத்துக்கு நாம்ப கொஞ்சம் குறைத்து வாங்கிக் கொள்ளலாம்…“  என்றார். 

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அத்தனை சிக்கல்கள் தோன்றும் என்று இதைப் பற்றி இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் செல்லும்வரை  பஞ்சு அருணாச்சலத்துக்கு தெரியாது. 

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பொறுத்தவரை அவரே பாடல்களை எழுதக் கூடிய ஒரு கவிஞர் என்ற போதிலும் கண்ணதாசன் பாடல்கள் என்றால் அவருக்கு உயிர். அப்படிப்பட்ட அவர் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்தபோது அவரைப் பார்த்து பேசிய பஞ்சு, “கவிஞர் இனி ஒரு படத்துக்கு தனது சம்பளம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளார்…” என்ற செய்தியை அவரிடம் சொன்னார்.

அதைக் கேட்டவுடன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவ்வளவு ஆத்திரப்படுவார் என்று பஞ்சு அருணாச்சலம் கனவிலும் நினைக்கவில்லை.

“கவிஞர் ஒரு பாட்டுக்கு இருபத்தி ஐயாயிரம் கேட்டால்கூட நான் தரத் தயாராக இருக்கேன். அது வேற விஷயம். ஆனால், என் படத்தில்  எல்லா பாட்டையும் அவரே எழுதணும்னு  என்று அவர் முடிவு செய்வது எந்த வகையில் நியாயம்…?

நான் என்னுடைய படத்திலே அவருக்கு ஒரு பாட்டு கொடுப்பேன். இல்லே.. இரண்டு பாட்டு கொடுப்பேன். மீதி உள்ள பாடல்களை வேறு யாரையாவது விட்டு எழுதச்  சொல்வேன். இல்லே… நானே  எழுதுவேன். அதனால எங்கிட்ட இது மாதிரி கேட்கறதை எல்லாம் விட்டுவிட்டு அவரை வழக்கம்போல பாட்டுக்கு  இரண்டாயிரமோ, மூவாயிரமோ வாங்கிக் கொண்டு எழுதச் சொல்…” என்றார் அவர்.

இதை எப்படி கவிஞரிடம் சொல்வது என்று யோசித்த பஞ்சு அருணாச்சலம் இறுதிவரை இதைப் பற்றி அவரிடம்  சொல்லவேயில்லை. இதற்கிடையில் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத வேண்டிய நாள் நெருங்கியது.

அப்போது பஞ்சு அருணாச்சலத்தை தொடர்பு கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சகோதரர் சபரிநாதன் “கவிஞர் வரலேன்னா பரவாயில்லை. அண்ணன் இந்த படத்துக்கு உன்னையே பாட்டு எழுதச் சொல்லிட்டாரு. அதனால நாளைக்குக் காலையிலே ஸ்டுடியோவிற்கு வந்துவிடு” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டவுடன் பஞ்சுவிற்கு தூக்கிவாரிப் போட்டது. “கவிஞரோட சம்பளத்தைப் பேச வந்த நான், இப்போது உங்களுடைய படத்துக்குப் பாட்டு எழுதினால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நான் கவிஞருடைய வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டேன்னுதான் எல்லோரும் தப்பா எடுத்துக்குவாங்க. அதனால் என்னை மன்னிச்சிக்கங்க. என்னால வர முடியாது…” என்று உடனடியாக அவருக்கு பதில் கூறினார் பஞ்சு.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ‘கற்பகம்’ படத்தில் எல்லா பாடல்களையும் எழுதினார் வாலி.

The post சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-15 – நடிகை சாவித்திரியின் பெருந்தன்மை… https://touringtalkies.co/cinema-history-15-panama-paasama-movie-news/ Thu, 15 Oct 2020 07:44:00 +0000 https://touringtalkies.co/?p=8845 ஜி.பாலசுப்ரமணியம் என்பவர் மிகச் சிறந்த கதாசிரியர்.  சிவாஜி நடித்த ‘அன்னை இல்லம்’, ‘ஆலயமணி’, ‘பாலும் பழமும்’, எம்.ஜி.ஆர்.நடித்த ‘கலங்கரை  விளக்கம்’, ‘ரகசிய போலிஸ் 115’, ‘தாழம்பூ’, உட்பட பல படங்களுக்கு கதை எழுதிய அவர், ஒரு நாள் பிரபல இயக்குநரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களைச் சந்திக்க வந்தார். தனக்கு மிகவும் அவசரமாக மூவாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறிய அவர் அதற்குப் பதிலாக தான் ஒரு கதை எழுதித்  தருவதாகக் கூறினார். அவருக்குப் பணம் கொடுத்துவிட்டு அவரோடு  பேசிக் […]

The post சினிமா வரலாறு-15 – நடிகை சாவித்திரியின் பெருந்தன்மை… appeared first on Touring Talkies.

]]>

ஜி.பாலசுப்ரமணியம் என்பவர் மிகச் சிறந்த கதாசிரியர்.  சிவாஜி நடித்த ‘அன்னை இல்லம்’, ‘ஆலயமணி’, ‘பாலும் பழமும்’, எம்.ஜி.ஆர்.நடித்த ‘கலங்கரை  விளக்கம்’, ‘ரகசிய போலிஸ் 115’, ‘தாழம்பூ’, உட்பட பல படங்களுக்கு கதை எழுதிய அவர், ஒரு நாள் பிரபல இயக்குநரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களைச் சந்திக்க வந்தார்.

தனக்கு மிகவும் அவசரமாக மூவாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறிய அவர் அதற்குப் பதிலாக தான் ஒரு கதை எழுதித்  தருவதாகக் கூறினார்.

அவருக்குப் பணம் கொடுத்துவிட்டு அவரோடு  பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கதைக் கருவை கூறிய அவர் ஏழைகள் முகத்தில் விழிப்பதே பாவம் என்கின்ற அளவிற்கு ஏழைகளை வெறுக்கக் கூடிய ஒரு பணக்காரியை மையமாக வைத்து  சில காட்சிகளையும்  சொன்னார்.

அவர் சொன்ன அந்த திமிர் பிடித்த பணக்காரியின் பாத்திரம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை மிகவும் கவர்ந்தது. ஆகவே “நீங்கள் எனக்கு புதிதாக வேறு கதை எழுதித் தர வேண்டாம்.. இப்போது சொன்னீர்கள் அல்லவா.. அந்த பாத்திரத்தை மையமாக வைத்து நான் ஒரு கதையைத் தயார் செய்து கொள்கிறேன்…” என்று அவரிடம் சொன்ன கோபாலகிருஷ்ணன் அந்த பணக்காரியின்  பாத்திரத்தைப் பற்றியே அடுத்த பத்து நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தார்.

அந்தக் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி ஒரு கதையை உருவாக்கிய பிறகு அந்தக் கதைக்கான கருவைத் தந்த ஜி.பாலசுப்ரமணியத்தை அழைத்து அந்தக் கதையைச் சொன்னார்.

கதையைக் கேட்ட அவர் கதை மிகச் சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டினார். அதைத் தொடர்ந்து அவருடன் இடைவிடாமல் ஒரு  மாதம் விவாதித்து திரைக்கதை வசனம் ஆகியவைகளை எழுதி முடித்த கோபாலகிருஷ்ணன் அடுத்து தனது காரியாலயத்திற்கு ஒரு நாள் தற்செயலாக வந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் அந்தக் கதையைச் சொன்னார்.

கதையைக் கேட்ட கண்ணதாசன் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று சொன்னவுடன் நம்பிக்கையோடு நடிகர்கள் தேர்வில் இறங்கினார் கே.எஸ்.ஜி.

நாயகன், நாயகி பாத்திரத்திற்கு ஜெமினி கணேசன், சரோஜா தேவி ஆகியோரை ஒப்பந்தம் செய்த கே.எஸ்.ஜி., படத்தின் அச்சாணி போன்ற  திமிர் பிடித்த பணக்காரியின் பாத்திரத்திற்கு எடுப்பான தோற்றமும், எடுத்தெறிந்து பேசும் குணமும் கொண்ட எஸ்.வரலட்சுமியை தேர்வு செய்தார்.

அடுத்தது அவரது கணவனின் பாத்திரம். கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பொறுத்தவரை அப்பா வேடம் என்றால்  அவர் கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யக் கூடிய ஒரே நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள்தான். ஆனால் இந்தப் படத்தில் வரலட்சுமிக்கு ஜோடியாக ரங்காராவ் அவர்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வரலட்சுமிக்கு அப்பா மாதிரிதான் அவர் தெரிந்தாரே தவிர, கணவன் மாதிரி தெரியவில்லை. ஆகவே, டி.கே.பகவதி அவர்களை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்தார் கோபாலகிருஷ்ணன்.

ஜெமினி, சரோஜாதேவி, எஸ்.வரலட்சுமி டி.கே.பகவதி, நாகேஷ் ஆகியோரின் புகைப்படங்களைப் போட்டு ‘பணமா பாசமா’ என்ற பெயரில் புதிய படத்தின் விளம்பரத்தை பத்திரிகையில் வெளியிட்டார் கே.எஸ்.ஜி.

அந்த விளம்பரம் வந்த அன்று காலை முதலே  கோபாலகிருஷ்ணனின் அலுவலகத்தில் டெலிபோன் மணி ஓயாமல் அடிக்க ஆரம்பித்தது.

போனில் பேசிய ஒருவர், “உனக்கென்ன மூளைக் கோளாறு ஏதாவது ஏற்பட்டுவிட்டதா..? சரோஜாதேவிக்கு கல்யாணம் ஆன உடனேயே அவரது மார்க்கெட் போய்விட்டது. அவரைப் போய் கதாநாயகியாகப் போட்டு படம் எடுக்கிறாயே…” என்றார்.

இன்னொருவரோ “முதல் வேலையாக இந்த நடிகர்களையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு வேற நடிகர்களை போட்டு படம் எடு…” என்றார்.

அடுத்து போனில் பேசிய ஒரு விநியோகஸ்தர், “வரலட்சுமி பகவதி இவங்களை எல்லாம் யாருக்குத் தெரியும்..? ‘சித்தி’ படம் ஓடிவிட்டதால் நீ யாரைப் போட்டு படம் எடுத்தாலும் மக்கள் படம் பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேள்வி கேட்டதோடு நிற்காமல் “நிச்சயம் இந்தப் படம்  படுதோல்விதான்” என்று ஆசீர்வாதமும் செய்தார். 

ஆனால், இந்த விமர்சனங்களால் எந்த பாதிப்பும் அடையாமல் யாரை ஒப்பந்தம் செய்திருந்தாரோ அவர்களை வைத்தே நம்பிக்கையோடு படப்பிடிப்பைத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன்.

ஆனால், அவரது நம்பிக்கையை குலைக்கின்ற மாதிரி ஒரு நிகழ்ச்சி முதல் நாள் படப்பிடிப்பில் நடைபெற்றது.

அப்படி ஒரு சோதனையை கோபாலகிருஷ்ணன் அதுவரை சந்தித்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘பணமா பாசமா’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு எந்தக் கதாபாத்திரம் காரணமாக அமையப் போகிறது என்று கோபாலகிருஷ்ணன் எண்ணிக் கொண்டிருந்தாரோ… அந்த திமிர் பிடித்த பணக்காரியின் பாத்திரத்தில் நடித்த எஸ்.வரலட்சுமி எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரக்கட்டை போல நடித்துக் கொண்டிருந்தார்.

பல படங்களில் நல்ல நல்ல பாத்திரங்களில் எல்லாம் நடித்த அவர் அப்படி நடித்தது கோபாலகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல… அவருடன் நடித்துக் கொண்டிருந்த நடிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது.

அவர் படங்களில் நடித்து சில வருடங்கள் ஆகியிருந்ததால் தொடர்பு விட்டிருக்க வேண்டும் என்று எண்ணிய கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து நடித்தால் தான் எதிர்பார்க்கும் அளவிற்கு நடித்து விடுவாரென எதிர்பார்த்து அவரால் முடிந்த அளவு வரலட்சுமி எப்படி நடிக்க வேண்டுமென்று நடித்துக் காண்பித்தார்.

ஆனால், வரலட்சுமியால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நடித்துக் காட்டியதில் பத்து சதவிகிதம்கூட நடிக்க முடியவில்லை. அந்தக் கதாப்பாத்திரம் தோல்வி அடைந்தால் மொத்த படமும் தோல்வியடையும் என்பதை அறிந்திருந்த மற்ற நட்சத்திரங்கள் நன்றாக யோசித்து ஒரு முடிவெடுங்கள் என்று கோபாலகிருஷ்ணனிடம் நாசுக்காக சொன்னார்கள்.

இனியும் வரலட்சுமியோடு போராடி அவரை நடிக்க வைக்க முடியாது  என்ற முடிவுக்கு கோபாலகிருஷ்ணனும் வந்துவிட்டிருந்ததால் அந்த  பாத்திரத்திற்கு வேறு நடிகையைப் போடுவது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

ஆனால், ஆணவமும் அழுத்தமும் கொண்ட அந்த பாத்திரப்படைப்பில் நடிக்கக் கூடிய இன்னொரு நடிகை யார் என்பதைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப யோசித்ததில் சாவித்திரி அந்த பாத்திரத்தை ஏற்று நடித்தால் அந்தப் பாத்திரம் தான் எதிர்பார்க்கின்ற வெற்றியை நிச்சயம் அடையும் என்ற முடிவுக்கு வந்த கோபாலகிருஷ்ணன் நேராக சாவித்திரியின் வீட்டுக்கு சென்றார்.

‘பணமா பாசமா’ படத்தில் வரலட்சுமியின் பாத்திரம் என்ன என்பதை விளக்கி விட்டு வரலட்சுமியால் ஒரு பத்து சதவிகிதம்கூட தான்  எதிர்பார்த்த மாதிரி நடிக்க முடியவில்லை என்பதை  சாவித்திரியிடம் சொன்ன கோபாலகிருஷ்ணன் “எப்படியாவது நீ அந்தப் பாத்திரத்தில் நடித்து என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று சாவித்திரியிடம் வேண்டி கேட்டுக் கொண்டார்.

கோபாலகிருஷ்ணன் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட சாவித்திரி “நீங்க சொல்றது எல்லாம் சரிதான் வாத்யாரே. ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டிங்களே..” என்றார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை  எப்போதும் ‘வாத்தியாரே’ என்றுதான் கூப்பிடுவார் சாவித்திரி.

எதை மறந்து விட்டேன் என்பது போல கோபாலகிருஷ்ணன் சாவித்திரி முகத்தைப் பார்க்க “உங்க படத்தில் வரலட்சுமியின் மகளான சரோஜாதேவிக்கு ஜோடியா நடிக்கிறது யாரு..? என் கணவரான ஜெமினி கணேசன்.. இப்ப சொல்லுங்க. நிஜ வாழ்க்கையில் அவருக்கு மனைவியாக உள்ள நான் படத்தில் அவருக்கு மாமியாராக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா..?” என்று நியாயமான ஒரு கேள்வியை சாவித்திரி எழுப்பியபோதுதான் உணர்ச்சி வேகத்தில் எப்படிப்பட்ட தவறை செய்ய இருந்தோம் என்பது  கோபாலகிருஷ்ணனுக்கு புரிந்தது.

இனி அந்த பாத்திரத்திற்கு யாரை ஒப்பந்தம் செய்வது எப்படி படத்தை முடிப்பது என்று எண்ணியபோது அவர் தலை கிர்ர்ரென்று  சுற்றியது

அப்போது சாவித்திரி அவரிடம்  “எஸ்.வரலட்சுமி மிகச் சிறந்த நடிகை. எந்தக் கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதை ஏற்கனவே பல படங்களில் அவர் நிரூபித்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவர் பாடகி என்பதால் முக பாவங்கள்  மிக எளிதாக மாறும். அவர் ஏதாவது பிரச்னையில் இருக்காரோ என்னவோ… அதனால்கூட அவரால் இன்று நடிக்க முடியாமல் போயிருக்கலாம். அதனால நீங்க விட்டுக்கு போய் இன்னிக்கு  நிம்மதியா தூங்குங்க. நாளை காலையிலும் வரலட்சுமி நீங்க எதிர்பார்க்கிறபடி நடிக்கலேன்னா  அவரை மாற்றி விடுங்கள். அவரை மாற்றுவதோடு ஜெமினியையும் மாற்றிவிடுங்கள்; வரலட்சுமி பாத்திரத்தில் நான் நடிக்கிறேன்..” என்றார்.

ஜெமினியின் கதாப்பாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பை ஜெமினியிடமே விட்டு விடுவோம் என்று சாவித்திரி சொன்னதில் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டதால் விட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தார் கோபாலகிருஷ்ணன்.

படுத்தாரே தவிர தூக்கம் வந்ததா என்றால் இல்லை. இரவு பதினோரு மணிவரை படுக்கையில் புரண்டு கொண்டிருந்த அவர் எதற்கும் வரலட்சுமியைப் போய்ப் பார்த்து பேசி அவரை அந்தப் பாத்திரத்திற்கு மீண்டும் தயார் செய்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் எஸ்.வரலட்சுமி விட்டுக்கு காரை எடுத்துக் கொண்டு போனார்.

இவர் அவரது வீட்டு வாசலுக்குப் போகும்போது எஸ்.வரலட்சுமியின் வீட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் சாவித்திரி. கோபாலகிருஷ்ணனைப் பார்த்ததும் “வாத்தியாரே, நெருப்பு மாதிரி வரலட்சுமியைத் தயார் பண்ணிவிட்டு வந்திருக்கிறேன். நாளைக்கு படப்பிடிப்பில் அவர் எப்படி தூள் கிளப்புகிறார் என்று பாருங்கள். கவலைப்படாமல் வீட்டுக்கு போய் தூங்குங்க..” என்றார்.

மறுநாள் காலையில் படப்படிப்பிற்கு வந்த வரலட்சுமி உண்மையாகவே நெருப்பு மாதரிதான் இருந்தார். கோபாலகிருஷ்ணன் என்ன எதிர்பார்த்தாரோ அதைவிட பல மடங்கு சிறப்பாக நடித்து அந்த அந்த செட்டிலிருந்த அனைவரது பாராட்டையும் பெற்றார் அவர்.

அவர் நடிக்க, நடிக்க சாவித்திரியின் பெருந்தன்மையை நினைத்து மனம் உருகிப் போனார்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

தான் நடிக்காத ஒரு படத்திலே, ஒரு நடிகை சிறப்பாக நடிக்கவில்லை என்பதற்காக அவரது வீட்டுக்கு போய் ஏறக்குறைய நான்கு மணி நேரம் அவரோடு இருந்து அவரை அந்தப் பாத்திரத்துக்கு தயார் செய்வது என்றால் அதற்கு எப்படிப்பட்ட பெரிய மனது வேண்டும்..?

கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாவித்திரிக்குப் பிறகு அப்படி ஒரு பெருந்தன்மையான நடிகையை இன்றுவரை தமிழ்த் திரையுலகம் சந்தித்திருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்பதைத் தவிர வேறு என்ன பதில் சொல்ல முடியும்…?

The post சினிமா வரலாறு-15 – நடிகை சாவித்திரியின் பெருந்தன்மை… appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-10 – எம்.ஜி.ஆரை கண் கலங்க வைத்த கதை https://touringtalkies.co/cinema-history-10-karpagam-movie-story/ Sat, 10 Oct 2020 07:12:57 +0000 https://touringtalkies.co/?p=8571 பிரபல பாடலாசிரியரான  மருதகாசி  ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற பெயரில்  தயாரித்த  சொந்தப் படம் தோல்வியடைந்ததால் , பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார். மருதகாசிக்கு உதவுவதற்காக  அவருக்குத்  தன்னுடைய கதை ஒன்றை படமாக்கக்  கொடுத்தார்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கே.எஸ்.ஜி. கொடுத்த கதையின் பெயர் ‘தூண்டாமணி விளக்கு.’  கே.எஸ்.ஜி.யின் கதையை வாங்கிப் படித்த மருதகாசி,  அந்தக் கதையை திரைப்படமாக ஆக்கினால் நிச்சயமாக அது வெற்றி பெறும் என்று திடமாக எண்ணினார். அந்த படத்தின் கதை வசனத்தையும்  கே.எஸ்.ஜி.யே  எழுத வேண்டும் என்று மருதகாசி கேட்டுக் கொள்ள அதற்கும் கே.எஸ். ஜி. சம்மதித்ததைத் […]

The post சினிமா வரலாறு-10 – எம்.ஜி.ஆரை கண் கலங்க வைத்த கதை appeared first on Touring Talkies.

]]>

பிரபல பாடலாசிரியரான  மருதகாசி  ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற பெயரில்  தயாரித்த  சொந்தப் படம் தோல்வியடைந்ததால் , பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார்.

மருதகாசிக்கு உதவுவதற்காக  அவருக்குத்  தன்னுடைய கதை ஒன்றை படமாக்கக்  கொடுத்தார்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கே.எஸ்.ஜி. கொடுத்த கதையின் பெயர் ‘தூண்டாமணி விளக்கு.’ 

கே.எஸ்.ஜி.யின் கதையை வாங்கிப் படித்த மருதகாசி,  அந்தக் கதையை 
திரைப்படமாக ஆக்கினால் நிச்சயமாக அது வெற்றி பெறும் என்று திடமாக எண்ணினார்.

அந்த படத்தின் கதை வசனத்தையும்  கே.எஸ்.ஜி.யே  எழுத வேண்டும் என்று மருதகாசி கேட்டுக் கொள்ள அதற்கும் கே.எஸ். ஜி. சம்மதித்ததைத் தொடர்ந்து அந்த படத்துக்கு  பூஜை போடப்பட்டது.

சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.ஏ.அசோகன் ஆகிய பிரபலமான நட்சத்திரங்கள் அந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர் என்றாலும் மருதகாசி பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததால்  அந்தப் படத்தை அவரால் தொடர முடியவில்லை.

அந்த  சந்தர்ப்பத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்  நெருங்கிய நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர், தனக்கு ஒரு படம் நடித்துத் தர சம்மதித்திருப்பதாகவும் அதற்கு ஒரு கதையைத் தர முடியுமா என்றும் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டார்.

“எம் ஜி ஆர் எப்போது கதை கேட்கிறார் என்று கேட்டுக் கொண்டு வாருங்கள். நான் வந்து கதை சொல்கிறேன்” என்று அவருக்கு பதிலளித்தார்  கோபாலகிருஷ்ணன்.

“உங்களை உடனே எம்.ஜி.ஆர். அழைத்து வரச் சொன்னார்..” என்று அன்று மாலையே அந்த நண்பர் வந்து நிற்க இருவரும் எம் ஜி ஆரின் வீட்டுக்கு புறப்பட்டனர்.

எம்.ஜி.ஆரோடு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நாடக காலத்திலேயே நல்ல பழக்கம் இருந்ததால் காரைவிட்டு இறங்கிய கோபாலகிருஷ்ணனை சிரித்தபடியே அவர்  வரவேற்றார்.

சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்து நின்று போன ‘தூண்டாமணி விளக்கு’ கதையை சிறு, சிறு மாற்றங்களுடன் எம். ஜி. ஆருக்கு சொன்னார் கோபாலகிருஷ்ணன். எம்.ஜி.ஆருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துப் போனதைத் தொடந்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு உடனே  தொடங்கியது.

சிவாஜி நடிப்பதாக இருந்து படப்பிடிப்பிற்கு முன்னரே நின்று போன அந்தப் படம், எம்.ஜி. ஆர். நடித்து இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்த பிறகு நின்று போனது.

அந்தக் கதையை சில மாதங்களுக்குப் பிறகு ‘கற்பகம்’ என்ற பெயரில் சொந்தமாக எடுத்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அப்போது அதில் கதாநாயகனாக நடித்தவர் ஜெமினி கணேசன்.

எம். ஜி.ஆர். நடிப்பதாக இருந்த அந்தப் படம் நின்றதற்கான காரணம் என்ன..?

‘கற்பகம்’ படத்தின் கதையை காட்சிவாரியாக எம்.ஜி.ஆரு.க்கு விளக்கினார் கோபாலகிருஷ்ணன். கதாநாயகனின் முதல் மனைவியான கற்பகத்தின் குடும்பப் பாங்கு, தான் பெறாத குழந்தையிடம் அவள் காட்டும் எல்லையற்ற பாசம், பின்னர் அவள் காலமான பிறகு இரண்டாம் தாரமாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி மாமனாரே வற்புறுத்தும்போது முதல் மனைவியை மறக்க முடியாமல் கணவன் படும் வேதனை ஆகியவற்றை கோபாலகிருஷ்ணன் விவரித்தபோது எம்.ஜி.ஆரின் கண்கள் அவரையும் அறியாமல் கலங்கின.

தனது உள்ளத்து உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு முன்னால் வெளிக்காட்ட விரும்பாமல் அடுத்த அறைக்கு சென்று விட்டார் அவர்.

“உங்கள் கதையைக் கேட்டவுடன் அவருக்கு காலம் சென்ற அவரது முதல் மனைவியின் நினைவு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்” என்று கோபாலகிருஷ்ணனிடம் தயாரிப்பாளரான அந்த  நண்பர் கூறிக் கொண்டிருக்கும்போது அதைக் கேட்டபடியே அறையில் இருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர். “அவர் சொல்வது உண்மைதான்” என்று சொல்லிவிட்டு ”படத்தின் பிற்பகுதியை நான் பின்னால் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு முன் மாமனாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி கதாநாயகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டானா இல்லையா அதை மட்டும் சொல்” என்று கோபாலகிருஷ்ணனிடம் கேட்டார்.

“தன்னைப் பெற்ற தாயாகவே தனது முதல் மனைவியை நினைத்து வந்த கதாநாயகன் குழந்தையின் ஏக்கத்தை போக்குவதற்காக இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறான். இரண்டாவது மனைவியும் கற்பகம் காட்டிய தாய் அன்பிற்கு தான் சளைத்தவள் அல்ல என்கின்ற அளவிற்கு அந்தக் குழந்தையின் மீது அன்பு காட்டுகிறாள். அதைப் பார்த்தபிறகே அவளை நாயகன் திருமணம் செய்து கொள்கிறான்” என்று கோபாலகிருஷ்ணன் சொல்லி முடித்ததும் “அருமையான கதை” என்று பாராட்டிய எம் ஜி ஆர் “உடனே இதற்கு வசனம் எழுதி விடு” என்றார்.

அப்போது  அடுத்த வாரமே படப்பிடிப்பை ஆரம்பித்தால்தான் தனக்கு பைனான்ஸ் கிடைப்பது எளிதாக இருக்கும் என்று அந்தத் தயாரிப்பாளர் கூற சிறிது  நேரம் யோசித்த எம்.ஜி.ஆர். பின்னர்  கோபாலகிருஷ்ணனைப் பார்த்து “கதையின் தொடக்கத்தில், அதாவது முதல் மனைவியை மணப்பதற்கு முன் பண்ணையாரும் ஹீரோவும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுக்கு வசனம் எழுதிக் கொண்டு வா.. அந்தக் காட்சிகளுக்கான படப்பிடிப்பை முதலில் நடத்துவோம். பின்னர் இரு கதாநாயகிகளையும் தேர்ந்தெடுத்த பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பை  நடத்திக் கொள்ளலாம்” என்றார்.

எம்.ஜி.ஆர். படங்களைப் பொறுத்தவரையில் நடிகர், நடிகைகள், தொழில் நுணுக்கக் கலைஞர்கள் ஆகிய அனைவரையும் அவரேதான் தேர்ந்தெடுப்பார் என்பதை கோபாலகிருஷ்ணன் அறிந்திருந்த காரணத்தால்… வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர் சொன்ன இரண்டு காட்சிகளுக்கும்  வசனம் எழுதினார்  அவர்.  

அதையடுத்து படப்பிடிப்பு தேதியையும் படப்பிடிப்பு நடைபெற உள்ள ஸ்டுடியோ பற்றியும் கோபாலகிருஷ்ணனுக்கு தெரிவித்த பட அதிபர் படப்பிடிப்பு அன்று அதிகாலையிலேயே வந்து விடும்படி அவரைக் கேட்டுக் கொண்டார்.

‘கற்பகம்’ படத்திலே கதாநாயகன், கதாநாயகி அளவிற்கு முக்கியத்துவம் உள்ள  பாத்திரம் அந்த  மாமனார் கதாப்பாத்திரம், ஆகவே, அந்த பாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய கோபாலகிருஷ்ணன் அது பற்றி தயாரிப்பாளரிடம் கேட்டபோது அதையெல்லாம் எம்.ஜி.ஆர்.தான் முடிவெடுத்து இருக்கிறார் என்றும் படப்பிடிப்பு நாள் அன்றுதான் யார் நடிக்கப் போகிறார் என்ற விவரம் தெரியும் என்றும் தயாரிப்பாளரிடமிருந்து பதில் வந்தது.

படப்பிடிப்பு நாள் அன்று அந்த மாமனார் பாத்திரத்தில் நடிக்க வந்திருந்தவரைப் பார்த்ததும் கோபாலகிருஷ்ணன் அடைந்த ஏமாற்றத்துக்கு அளவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

எம் ஜி ஆர் தேர்ந்தெடுத்திருந்த நடிகர் நல்ல பண்பட்ட நடிகர்தான். ஆனால் உருவ அமைப்பைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு மாமனாராக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது சிரமம் என்று கோபாலகிருஷ்ணன் மனதிற்குப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்திற்கு கே.எஸ். ஜி. யின் ஒரே தேர்வு எஸ்.வி.ரங்காராவ் மட்டுமே.

நடிகர் தேர்வு சரியாக அமையவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த கோபாலகிருஷ்ணனை இன்னும் மிகப் பெரிய வேதனைக்குள்ளாக்கியது..  எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்திருந்த இயக்குநர் அன்று அந்தக்  காட்சியை படமாக்கிய விதம்.

ஒரு நல்ல கதை சிதைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர் மனதிற்குள் தோன்றியது. ஆனால் அதை எம்.ஜி.ஆரிடம் எப்படி எடுத்து சொல்வது..? அதனால் மனக் குமைச்சலுடன் செட்டின் ஓரத்தில் ஒதுங்கிவிட்டார் கோபாலகிருஷ்ணன்.

அன்று முழுவதும் அவர் படப்பிடிப்பில்  ஈடுபாடு இல்லாமல் இருந்ததை  அந்த பரப்பரப்பான படப்பிடிப்புக்கு இடையேயும் எம். ஜி. ஆர். கவனித்திருக்கிறார் என்பது அந்த இரண்டு நாள் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு எம். ஜி. ஆரின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்கச் சென்றபோதுதான் கோபாலகிருஷ்ணனுக்குத்  தெரிந்தது.

“என்ன தம்பி..  நீ எப்போதும் படப்பிடிப்பில் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது, நடிப்பு சொல்லிக் கொடுப்பது என்று ஒரு வினாடி கூட உட்காராமல் துரு துறுவென்று இருப்பாயாமே. அப்படிப்பட்ட நீ நம்ம படப்பிடிப்பில் பேசாமல் ஒதுங்கி நின்று விட்டாயே.. என்ன காரணம்..?” என்று கேட்டார் எம். ஜி. ஆர்.

மாமனார் பாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்திருந்த நடிகரை எனக்குப் பிடிக்கவில்லை.. அதேபோல் அந்த இயக்குநர் காட்சியைப் படமாக்கியவிதத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றும்  எம்.ஜி.ஆரிடம் கூற முடியுமா..?

ஆகவே, அதை எல்லாம் அப்படியே மனதுக்குள் புதைத்துக் கொண்டு “நான் சொல்லித் தருகின்ற அளவிற்கு அங்கு நடிகர்கள் யாருமில்லையே…” என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன்.

எம்.ஜி.ஆர். எப்படிப்பட்டவர்…? கோபாலகிருஷ்ணன் மனதில் உள்ளது என்னவென்பதை வரவழைக்க அவருக்கு  வழி தெரியாதா என்ன..?

“அன்று படப்பிடிப்பில் நடந்தது எதுவுமே உனக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்துதான் உன்னை வரவழைத்தேன். அதனால், இப்போது உண்மையான காரணம் என்ன என்பதை  சொல்”  என்றார் எம்.ஜி.ஆர்.

அவர் பரிவோடு கேட்டவிதம் தனது  மனக் குறையை அவரிடம் சொல்லலாம் என்ற தைரியத்தை கோபாலகிருஷ்ணனுக்குக் கொடுத்ததால் “மாமனார் கதாப்பாத்திரத்தை ஏற்றவரின் உருவ அமைப்பு.. இயக்குநரின் திறமை ஆகிய இரண்டுமே எனக்கு திருப்தியாக இல்லை..” என்றார் கே. எஸ். ஜி.

சிறிது நேரம் மவுனமாக இருந்த எம்.ஜி.ஆர்., “உன் மனதுக்குப்பட்ட இரண்டு குறைகளுமே நியாயமானதுதான். இயக்குநரைப் பற்றி நாம் எப்போது வேண்டுமானால் முடிவெடுத்துக் கொள்ளலாம். மாமனார் கதாப்பாத்திரத்திற்கு எந்த  நடிகரைப் போட்டால் சரியாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்..?” என்று கேட்டார்.

“உங்களுக்கு மாமனாராக நடிப்பவர் ரங்காராவ் போல இருக்க வேண்டும்” என்று  கே.எஸ்.ஜி., சொன்வுடன் “அதென்ன ரங்காராவைப் போல..? ரங்காராவைப் போட்டால் சரியாக இருக்கும் என்று நேராக சொல்ல வேண்டியதுதானே..” என்றார் எம்.ஜி.ஆர்.

“இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் கதை வசனகர்த்தாதானே” என்று கோபாலகிருஷ்ணன் சொன்னவுடன் வாய்விட்டு சிரித்த எம்.ஜி.ஆர்.,  “சரி..  ரங்காராவையே ஒப்பந்தம் செய்யச் சொல்கிறேன். இப்போது திருப்திதானே…” என்று கேட்க “பூரண திருப்தி” என்று கூறிவிட்டு அவரது இல்லத்தை விட்டு புறப்பட்டார் கோபாலகிருஷ்ணன்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. அந்த  இடைப்பட்ட காலத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், கே.எஸ்.ஜி.யைச்  சந்திக்கவேயில்லை. 

ஒரு நல்ல கதை இப்படி முடங்கிப் போவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்தத் தயாரிப்பாளரைத் தேடி கோபாலகிருஷ்ணன் சென்றபோதுதான் படம் தயாரிக்கும் சூழ்நிலையில் அந்தத் தயாரிப்பாளர்  இல்லை என்பது அவருக்குத்  தெரிய வந்தது.

அந்தப் படத்திற்காக அந்தப் படத் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களிடம்  வாங்கியிருந்த பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு அந்தக் கதையின் உரிமையை திரும்பப் பெற்று அந்தப் படத்தை எடுத்தார் கோபாலகிருஷ்ணன்.

சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்து பின்னர் எம். ஜி. ஆர்.  கதாநாயகனாக இரண்டு நாட்கள் நடித்த அந்தக் கதை இறுதியில் ஜெமினி கணேசன் நாயகனாக  நடிக்க ‘கற்பகம்’ என்ற பெயரில் வெளியானது மட்டுமின்றி வசூலில் மிகப் பெரிய சாதனை புரிந்தது.  

அந்தக் ‘கற்பகம்’ படத்தில்தான் ‘புன்னகை அரசி’ என்று ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் கே.ஆர்.விஜயா கதாநாயகியாக அறிமுகமானார்.

அதுவரை கதாசிரியராகவும், இயக்குநராகவும் இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை, ஸ்டுடியோ அதிபராக ஆக்கியதும் அந்தக் ‘கற்பகம்’ படம்தான்.

The post சினிமா வரலாறு-10 – எம்.ஜி.ஆரை கண் கலங்க வைத்த கதை appeared first on Touring Talkies.

]]>