Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் ஆர்.மாதவன் – Touring Talkies https://touringtalkies.co Mon, 04 Jul 2022 07:39:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் ஆர்.மாதவன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/rocketry-movie-review/ Mon, 04 Jul 2022 07:38:52 +0000 https://touringtalkies.co/?p=23023 ‘இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்’ என்ற இஸ்ரோ நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன், 1994-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று  விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ உதவும் ‘கிரையோஜெனிக் என்ஜின்’ பற்றிய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற தேசத் துரோகக் குற்றச்சாட்டில் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தக் கைதின் பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. நம்பி நாராயணன் 1970-களில் இஸ்ரோ அமைப்பில் பணியில் சேர்கிறார். அதன் நிறுவனரான விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் […]

The post ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்’ என்ற இஸ்ரோ நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன், 1994-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று  விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ உதவும் ‘கிரையோஜெனிக் என்ஜின்’ பற்றிய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற தேசத் துரோகக் குற்றச்சாட்டில் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தக் கைதின் பின்னணியில் உள்ள, உண்மையை வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

நம்பி நாராயணன் 1970-களில் இஸ்ரோ அமைப்பில் பணியில் சேர்கிறார். அதன் நிறுவனரான விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் சிஷ்யர்களில் ஒருவராக மாறிப் போகிறார்.

மிகச் சிறந்த அறிவாற்றல் கொண்ட நம்பி நாராயணன் “திட நிலையில் உள்ள என்ஜின்களையவிடவும் Liquid Fuel எஞ்சின் தயாரிப்பை முன்னெடுத்தால் நாம் மிக விரைவில் விண்வெளித் துறையில் சாதிக்கலாம்…” என்கிறார்.

இவருக்கு நாசா அமைப்பில் இருந்து Fellowship வாய்ப்பும் கிடைக்கிறது. இதனால் அமெரிக்கா சென்றவர் அங்கே புகழ் பெற்ற விண்வெளி விஞ்ஞானியான Luigi Crocco-விடம் பயிற்சி பெறுகிறார். தொடர்ந்து நம்பி நாராயணனுக்கு நாசாவில் பெரும் சம்பளத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், தாய் நாட்டிற்கு சேவை செய்ய நினைத்து மீண்டும் இந்தியா திரும்பி இஸ்ரோ’வில் சேர்கிறார் நம்பி.

அப்போது இந்தியா சார்பில் விண்ணுக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களை வெளிநாட்டுக்கு அனுப்பி, அங்கேயிருக்கும் ராக்கெட்டுகள் மூலமாகத்தான் விண்ணில் செலுத்த முடியும்.

“இதற்குப் பதிலாக நாமே ராக்கெட்டை விண்ணுக்குத் தள்ளிச் செல்லும் என்ஜினை கண்டறிந்தால் என்ன..?” என்ற ஆராய்ச்சியில் இறங்கும் நம்பி, இதற்காக பிரான்ஸூக்கு தனது குழுவினருடன் செல்கிறார்.

அங்கே சில ஆண்டுகள் தங்கியிருந்து மிகவும் கஷ்டப்பட்டு விகாஸ்’ என்ற என்ஜினை உருவாக்கிக் காண்பிக்கிறார்.  

மீண்டும் இந்தியா திரும்பும் நம்பி மிகக் குறைந்த செலவில் நாமளே சொந்தமாக திரவ வடிவிலான என்ஜினை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான செயல்பாடுகளில் இறங்குகிறார்.

இதற்காக ரஷ்யாவிடமிருந்து கிரையோஜெனிக் என்ஜினின் தொழில் நுட்பத்தை வாங்க இந்திய அரசிடம் அனுமதி பெறுகிறது இஸ்ரோ. அதை வாங்கி வருவதற்காக நம்பியின் தலைமையில் ஒரு டீம் ரஷ்யாவுக்கு சென்று படாதபாடுபட்டு அந்த என்ஜினின் சில பகுதிகளை விமானத்தில் கொண்டு வருகிறார்கள்.

இந்தியா வந்த அந்த விமானம் பாகிஸ்தான் வழியாக வருகிறது. அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவ நம்பி செய்த வேலை இது. ஆனால், இதுவே அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.

இங்கே வந்து சேர்ந்த சில மாதங்களில் அந்த கிரையோஜெனிக் என்ஜின் உருவாக்கத் துறையின் தலைவராகவும் நம்பியே நியமிக்கப்படுகிறார். ஆனால் காலப்போக்கில் இஸ்ரோவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலில் வருத்தமடைந்த நம்பி நாராயணன் தான் வேலையில் இருந்து விலகிக் கொள்வதாக இஸ்ரோவுக்கு கடிதம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்தச் சூழலில்தான் அவர் திடீரென காவல் துறையால் கைது செய்யப்படுகிறார். மாலத் தீவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு அந்த என்ஜினின் ரகசியங்களை நம்பி நாராயணன் விற்றதாக கேரள போலீஸ் சொல்கிறது.  இதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் இந்த ‘ராக்கெட்ரி’ படத்தின் மீதி கதை.

ஒரு புகழ் பெற்ற தேச பக்தியுடைய இந்தியன் நொடிப் பொழுதில் தேசத் துரோகி’ குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு 50 நாட்கள் கழித்து ஜாமீனில் வெளிவரும்போது வேறொரு உலகத்தைப் பார்க்கிறார்.

அவரது குடும்பத்தினர் ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவரது மருமகனுக்கும், மகளுக்கும் வேலை போய்விட்டது. ஊரார் யாரும் இவர்களுடன் பேசுவதில்லை. மனைவி சித்தப் பிரமை பிடித்தாற்போல் இருக்கிறார். உதவிக்கு ஒருவரும் இல்லை. ஊருக்குள்ளேயே இருந்தாலும் அனாதைகளாக இருக்கிறது நம்பியின் குடும்பம்.

இந்தச் சூழலில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க அடுத்த 4 ஆண்டுகள் சுப்ரீம் கோர்ட்வரையிலும் சென்று போராடி 1998-ம் ஆண்டு தான் நிரபராதி என்பதை நிரூபித்திருக்கிறார் விஞ்ஞானி நம்பி நாராயணன்.

இந்த வாழ்க்கைக் கதையை படமாக்க நினைத்த மாதவனுக்கு முதல் பாராட்டுக்கள்.

மாதவன் இதுவரையிலும் திரையில் தோன்றியிருக்காத புதிய தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படம் நெடுகிலும் மாதவனை மறந்து நம்பியையே நினைக்க வைத்திருக்கிறார்.

ஒரு ஆராய்ச்சி மாணவராக பிரான்ஸின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் தொடங்கும் அவரது ராக்கெட் பயணக் கதைகளில் ஒரு மாதவன்.. VIKAS இன்ஜின் உருவாக்கத்தில் ஒரு இளம் விஞ்ஞானி, ரஷ்யாவின் சைபீரியாவில் இருந்து கிரையோஜெனிக் என்ஜின் பாகங்களை கடத்தி வரும் துணிச்சல்மிக்க நடுத்தர வயது விஞ்ஞானி.. காவல்துறையால் கைது செய்யப்பட்டு மிதிபட்டு, அடிபட்டு, சித்ரவதைப்பட்ட வயதான மாதவன் என்று பல காலக்கட்டத்திற்கேற்ப தனது உடல் மற்றும் முகம் வடிவமைப்புக்காக காத்திருந்து இதன் படப்பிடிப்பை நடத்தி, நடித்திருக்கிறார் மாதவன்.

நம்பி நாராயணனை அச்சு அசலாக அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார் மாதவன். இளமைப் பருவ கேரக்டரில் பழைய மாதவன் நமக்குத் தெரிந்தாலும், நடுத்தர வயது மற்றும், வயதான தோற்றத்திலெல்லாம் நம்பி நாராயணனே நம் கண்களுக்குத் தெரிகிறார்.

அதேபோல் அந்தந்த வயதுக்கேற்றவாறு வசன உச்சரிப்பு, உடல் அசைவுகள், பார்வை, நடை, உடை, பாவனை என்று அத்தனையிலும் ஒரு துளிகூட தான் தெரியக் கூடாது என்று நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் மாதவன்.

நம்பி நாராயணனின் மனைவியாக சிம்ரன் தனக்குக் கிடைத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நம்பி ஜாமீனில் வீடு திரும்பும்போது அவர் காட்டும் நடிப்பில் கண்கள் கலங்குகின்றன. இதேபோல் சி.பி.ஐ. ஆபீஸரை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லும்போது அவருடைய உடல் மொழியும், உறுதியான குரலும் கை தட்ட வைக்கிறது.

அப்பா மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்காக முகத்தில் சாணியை வாங்கிக் கொள்ளும் மகளும், ஏன், எதற்கு என்ற காரணமே இல்லாமல் பொதுமக்களிடம் அடி வாங்கும் மருமகனும், கல்யாண வீட்டில் உறவினர்களால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்படும் மனைவியும் என்று அந்தக் குடும்பம் பட்ட கஷ்டத்தை அப்படியே நிஜமாக கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் மாதவன்.

விக்ரம் சாரா பாயாக அனிருத்தின் அப்பாவான ரவி ராகவேந்திராவும், அப்துல் கலாமாக குல்ஷன் குரோவரும், பொறுப்பான சி.பி.ஐ அதிகாரியாக கார்த்திக் குமாரும் நடித்திருக்கிறார்கள். ஒரு காட்சி என்றபோதும் அந்த மாலத்தீவைச் சேர்ந்த பெண்ணான மரியம் ரஷீத் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும்போது மனதை நெகிழ வைக்கிறார்.

பேட்டியாளர்’ என்ற கௌரவ வேடம்தான் என்றாலும் சூர்யாவின் கேள்வி, பதிலும், அவரது உணர்ச்சிப்பூர்வமான பேச்சும் அங்கேயிருந்தவர்களை மட்டுமல்ல… நம்மையும் சேர்த்தே உலுக்கியெடுக்கிறது.

சூர்யாவுடனான பேட்டியின்போது திடீரென்று நிஜமான நம்பி நாராயணனே அமர்ந்திருக்கும் காட்சி தென்படும்போது நமக்கு ஜலீர் உணர்வைத் தருகிறது.

“நடந்தவைகளுக்காக இந்தியாவின் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று நிஜமான நம்பியின் காலைத் தொட்டு சூர்யா பேசும்போது, “இப்போது நான் மன்னித்துவிட்டேன்’ என்று சொன்னால் என் மீது சுமத்தப்பட்ட தேசத் துரோகி’ பட்டத்தை நானே அனுமதித்ததுபோலாகிவிடும். நான் அதைச் செய்ய மாட்டேன்..” என்று சொல்லி நம்பி மறுப்பது தியேட்டரில் அப்ளாஸ் வாங்கிய காட்சி.

நம்பி அமெரிக்க பேராசிரியரிடம் சிஷ்யராக சேர்வதற்கு செய்யும் முயற்சிகள்.. அவரது நோயாளி மனைவியுடன் அவருடைய ஏற்படும் பழக்கம்.. நீல் ஆம்ஸ்ட்ராங்குடனான அவரது நட்பு, ரோல்ஸ் ராய்ஸ் கார் கம்பெனி அதிபரிடம் என்ஜினின் ரகசியங்களை கேட்டு வாங்குவது என்று இந்தியாவுக்காக இந்த நம்பி என்ற விஞ்ஞானி எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இதனாலேயே படத்தின் முதற் பாதியில் அதிகமாக அறிவியல் தொடர்பான காட்சிகளை வைத்திருக்கிறார். இது சாதாரண சினிமா ரசிகனுக்கு புரியாது என்றாலும் “ஏதோ ராக்கெட் விஞ்ஞானியாம்பா.. அதைப் பத்தி பேசுறாருப்பா” என்று மட்டும் நம்பிக்கை கொள்வார்கள் என்று நினைத்து  கதை, திரைக்கதை, வசனத்தில் சமரசம் இல்லாமல்  எழுதி இயக்கியிருக்கிறார் மாதவன்.

“ஒரு நாயை கொல்லனும்னு முடிவு பண்ணிட்டா, அந்த நாய்க்கு வெறி நாய்’ன்னு பெயர் வச்சா போதும், அதே மாதிரி ஒரு மனிதனை நீங்கள் கொல்லனும்னு முடிவு பண்ணிட்டா அவனுக்கு தேச துரோகி’ன்னு பட்டம் கொடுத்தா போதும்” என்பது போன்ற வசனங்கள் மிகவும் உயிர்ப்புடன் எழுதப்பட்டு உள்ளன. இது போல் படத்தில் பல இடங்களில் ஷார்ப்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

“இந்தக் கொடூரமான செயல் உங்கள் மீது நடந்தபோது, நீங்கள் பணியாற்றிய இஸ்ரோவில் இருந்தே யாரும் ஆதரவுக் கரம் நீட்டவில்லையே.. ஏன்..?” என்ற சூர்யாவின் கேள்விக்கு, “ஒரு ராக்கெட் கவிழ்ந்தா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரிஞ்சவங்களுக்கு, ஒரு மனுஷன் கவிழ்ந்தா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியலை போலிருக்கு..!” என்று நம்பி நாராயணன் சிரித்தபடியே சொல்வது 100 செருப்படிகளுக்கு சமமானது.

முதல் பாதியில் ஒரு ஆவணப் படத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுப்பதை நம்மால் மறுப்பதற்கில்லை. ஆனால் இடைவேளை காட்சியும், இரண்டாம் பகுதியும் மொத்தக் கதையையும் தலைகீழாக மாற்றியமைத்து கண் கலங்க வைத்துவிடுகிறது. விறுவிறுப்பான ஆக்சன் படம் பார்ப்பதுபோல் அட்டகாசமான திரைக்கதையாக இரண்டாம் பகுதியில் எழுதியிருக்கிறார் மாதவன்.

படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் சிர்ஷா ரேவின் ஒளிப்பதிவுதான். படம் பயணப்படும் அத்தனை நாடுகளின் அழகையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார். அதிலும் சைபீரியாவில் இருந்து விமானம் கிளம்பும் காட்சியைப் படமாக்கியவிதம் அழகு.

பின்னணி இசையை அடித்து ஆடாமல், காட்சிக்கேற்றபடி இசை என்று நினைத்து தான் இருப்பதுபோலவே காட்டாமல் அடக்கி வாசித்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

இதேபோல் கலை இயக்குநரும், உடைகள் வடிவமைப்பாளரும் பாராட்டுக்குரியவர்கள். பல நாடுகளில் டிராவல்  செய்யும் அந்தந்த காலக்கட்டத்திற்கேற்ப இடத்தையும், காட்சியமைப்புக்கேற்ற பொருட்களையும் செவ்வனே காண்பித்திருக்கிறார் கலை இயக்குநர். அதேபோல் அந்தந்த இடங்களுக்குப் பொருத்தமான உடையலங்காரத்தையும் அழகாக செய்து கொடுத்திருக்கிறார் உடை வடிவமைப்பாளர்.

விண்வெளிக்கு ராக்கெட் ஏவுவது என்னும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்குப் பின்னால் எத்தனை பேரின் அறிவுத் திறன் ஒளிந்திருக்கிறது. எவ்வளவு திறமைசாலிகளின் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதையெல்லாம் படத்தில் விளக்கமாகவே தொழில் நுட்பக் கலைஞர்கள் உதவியுடன் நமக்குக் காண்பித்திருக்கிறார்கள்.

மேலும் கிரையோஜெனிக் என்ஜினை ரஷ்யாவிடமிருந்து வாங்கும் பேச்சுவார்த்தை காட்சிகளையெல்லாம் சென்சாரில் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சாதாரணமாக வெளியில் பேசினாலே “அது ராணுவ ரகசியம்” என்றல்லவா சொல்வார்கள்..?

அதேபோல் அமெரிக்க எதிர்ப்பு, கோர்பசேவ், எல்ட்சின் மோதல், ரஷ்ய கூட்டமைப்பு சிதறியது.. எல்ட்சினின் எதிர்ப்பையும் மீறி விமானத்தில் என்ஜினின் பாகங்களை பாகிஸ்தான் வழியாகக் கடத்தியது என்று இந்திய விண்வெளி கழகத்தின் ரகசியங்கள் அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார்கள். இஸ்ரோகூட இதற்கு ஆட்சேபிக்காமல் இருப்பதும், இருந்ததும் ஆச்சரியமான விஷயம்தான்.

ஆனாலும் இந்த பா.ஜ.க. அரசு நம்பி நாராயணனின் வழக்கில் இருந்த உலகளாவிய சதித் திட்டத்தை புரிந்து கொண்டு அவருக்கு பத்மபூஷன் விருதினை வழங்கி கெளரவித்தது. அந்தக் காட்சியையும் படத்தில் இணைத்துக் காட்டியிருப்பது சிறப்பு..!

மொத்தத்தில் இந்த இந்திய தேசத்தின் மீது பற்று கொண்டு, இந்தியாவின் பெருமையை உலக அளவுக்குக் கொண்டு சென்ற ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையை  ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர் திட்டமிட்டு, தெரிந்தே பாழாக்கிய கதையை வழக்கமான சினிமா கமர்ஷியல் சாயமில்லாமல் கொடுத்துள்ளார் இயக்குநர் மாதவன்.

இந்த வருடத்தில் சிறந்த விருதுகளெல்லாம் நிச்சயம் இந்தப் படத்திற்காகத்தான் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு நடிப்பு, இயக்கம், கலை இயக்கம், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு என்று அனைத்திலுமே மாதவன் தனி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார்.

இருந்தாலும் படம் பார்த்த அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுந்தது. இந்த வழக்கில் நம்பி நாராயணனை சிக்க வைத்த இஸ்ரோ பணியாளர்கள் யார்..? எதற்காக இந்த வழக்கில் நம்பி சேர்க்கப்பட்டார்..? என்பதுதான் அந்தக் கேள்வி.

இந்தக் கேள்வியை நம்முடைய சார்பாக சூர்யாவும் படத்திலேயே நம்பி நாராயணனிடம் கேட்கிறார். ஆனால் நம்பி நாராயணன் இதற்குப் பதில் சொல்லாமல் வெறுமனே சிரிக்கிறார்.

அந்த சிரிப்புக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்தக் கயவர்களை அடையாளம் காட்ட நம்பி நாராயணனை தடுப்பது எது என்று தெரியவில்லை..!

இந்தக் கேள்விக்கு விடை தெரியும்வரையிலும் நம்பி நாராயணனை சுற்றியிருக்கும் இந்த தேச துரோகக் குற்றச்சாட்டு புகைந்து கொண்டேதான் இருக்கும்..!

The post ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>