Friday, April 12, 2024

சங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நல்ல படங்கள் எப்போதாவதுதான் வரும் என்ற நிலைமை தமிழ் சினிமாவில் தற்போது மாறி இருப்பதாகவே தோன்றுகிறது. அதன் காரணம் சென்ற வாரம் வெளியான ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’. இந்த வாரம் வெளியாகியுள்ள ‘சங்கத் தலைவன்’.

எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்’ என்ற நாவலைத்தான் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன் படமாக தயாரித்திருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறனின் உற்ற நண்பரான இயக்குநர் மணிமாறன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். வர்க்கப் போராட்டத்தையும் அதன் தீவிரத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் படம் பேசுகிறது.

படத்தின் நாயகன் கருணாஸ் ஓர் தறியாலையில் கூலி வேலை செய்கிறார். அங்கு அவருக்கு ஒரு காதலியும் இருக்கிறார். அண்ணன் என்று சொல்ல ஒரு தங்கையும் இருக்கிறார். ஆலையில் வேலை செய்யும்போது ஏற்படும் விபத்தில் அந்தத் தங்கையின் ஒரு கை பறிவிடுகிறது. அதனால், அந்தப் பெண்ணிற்கான நஷ்டத்தை ஆலை முதலாளி ஆன மாரிமுத்து கரெக்டாக கொடுக்க வேண்டும் என்று கருணாஸ் துடிக்கிறார்.

மாரிமுத்து சில கயமைத்தனத்தை அரங்கேற்றவும் கருணாஸ் தொழிலாளர்கள் சங்கத் தலைவனான சமுத்திரக்கனியை நாடுகிறார். சமுத்திரக்கனி கருணாஸின் உதவியை எப்படி கேண்டில் பண்ணினார்..? கருணாஸும், சமுத்திரக்கனியும் இணைந்து எவ்வாறு முதலாளி வர்க்கத்திற்கு எதிராக போராடி வென்றார்கள் என்பதே படத்தின் மீதி கதை.

மேலும், படத்தில் கருணாஸின் காதலுக்கான முடிவு என்ன என்பது, நெஞ்சை உலுக்கும்விதமாக இருக்கிறது.

படத்தை கருணாஸ், சமுத்திரக்கனி கூட்டணி தங்கள் நடிப்பால் தாங்கிப் பிடித்து நிற்கிறார்கள். சமுத்திரக்கனி உணர்ச்சிபூர்வமாக வசனங்கள் பேசும்போது நம் கவனம் எங்கேயும் சிதறாது. அந்த அளவுக்கு எதார்த்தமான வசனத்துடன் தநது இயல்பான நடிப்பையும் தந்திருக்கிறார் சமுத்திரக்கனி..! வெல்டன் கனி..!

அடுத்து கருணாஸுக்குள் இருக்கும் க்ளாஸிக் நடிகன் இந்தப் படத்தில் அட்டகாசமாக வெளியில் தெரிந்துள்ளார். தன் முகத்தில் தன் அகத்தை திறந்து காட்டி பல காட்சிகளில் அசரடித்துள்ளார்.

நாயகிகளான ரம்யாவும், சோனுல‌ஷ்மியும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் மாரிமுத்து. தறியாலை முதலாளியாக மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். அதிகார வர்க்க முதலாளியின் பாடி லாங்குவேஜ் அவருக்குப் பக்காவாக செட் ஆகியுள்ளது.

நடிகர்களின் தேர்விலேயே படம் பாதிக் கிணறைத் தாண்டி விட்டது. இயல்பான திரைக்கதையிலும் படம் சொல்ல வந்திருக்கும் சாரத்திலும் படம் முழுக் கிணறையும் தாண்டியுள்ளது.

இந்த அழகான திரைக்கதையோட்டத்துக்கு சிறப்பான பூஸ்ட் கொடுத்துள்ளது ராபர்ட்டின் பின்னணி இசை. ஒளிப்பதிவும் போராட்டத்தை வீரியத்தை சூரியன் போல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தொட்டதிற்கு எல்லாம் மக்களை வஞ்சிக்கும் அதிகார வர்க்கம் கொடி கட்டி திமிராக ஆடும் இந்த நேரத்தில்.. .மக்கள் போராட்டத்திற்கு முன் அதிகாரங்கள் எல்லாம் வெறும் சாம்பலுக்குச் சமம் என்று உரக்கச் சொல்லியிருக்கும் ‘சங்கத் தலைவன்’ படத்தை நாம் கொண்டாடியே தீர வேண்டும்.

மதிப்பெண் – 4 / 5

- Advertisement -

Read more

Local News