Friday, April 12, 2024

‘சிண்ட்ரெல்லா’ பட விழாவில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ராய் லட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் மேடையில் நடந்து கொண்டவிதம் அநாகரிகமாக இருந்தது.

படத்தில் ரோபோ சங்கர் தையற் கலைஞராக நடித்திருக்கிறார். கதையின்படி ‘சிண்ட்ரெல்லா’ உடையின் மீது ஆசை கொண்ட படத்தின் நாயகியான ராய் லட்சுமி தனக்கும் அதேபோல் ஒரு டிரெஸ்ஸை தைத்து போட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக ரோபோ சங்கரிடம் வருகிறார்.

‘சிண்ட்ரெல்லா’ உடையைத் தைக்க கேட்டு வரும் ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் பேசும் வசனங்கள் முழுவதுமே இரட்டை அர்த்த ஆபாச வசனங்களாக இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

நடிகை ராய் லட்சுமி இந்த இரட்டை அர்த்த ஆபாச வசனங்களுக்கு புரியாமல் பதில் சொல்வதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் ஒரு கொடுமை.. ஒரு சிறுவனை வேறு இந்தக் காட்சியில் உடன் இருப்பதுபோல் காட்சிப்படுத்தியிருப்பதுதான்..!

இந்த விழா மேடையில் பேசும்போது நடிகர் ரோபோ சங்கர் இதை நியாயப்படுத்தி பேசியது அக்கிரமத்திலும் அக்கிரமம். “இந்த மாதிரியான வசனங்களை பேசும்போது ராய் லட்சுமி என்ன சொல்வாரோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அந்தக் காட்சியை ரொம்பவே என்ஜாய் செய்து நடித்தார்..” என்று குறிப்பிட்டார் ரோபோ சங்கர்.

மேலும், “ராய் லட்சுமி மெழுகு சிலை போன்று இருக்கிறார். அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே வேகமாக வந்து அவர் அருகில் அமர்ந்தேன்…” என்று சற்று அதீதமான சபலப் பார்வையில் பேசினார்.

அதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. பேசி முடித்துவிட்டு ரோபோ சங்கர் வந்து அமர்ந்தவுடன் அடுத்துப் பேசுவதற்காக நடிகை ராய் லட்சுமி பேச எழுந்தபோது, அவரது கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர், “எங்க போறீங்க.. போகாதீங்க..” என்று கையைவிடாமல் இழுக்க.. ராய் லட்சுமி மிகப் பிரயத்தனப்பட்டு தன் கையை ரோபோ சங்கரிடமிருந்து விடுவித்துக் கொண்டு மைக் முன்னால் வந்து நின்றார்.

இப்படி ஏதோ காமெடி செய்வதாக நினைத்து மேடை நாகரிகத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டார் ரோபோ சங்கர்.

ஏற்கெனவே சினிமா நட்சத்திரங்களுக்கு வெளியில் மரியாதையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இது மாதிரி ஒவ்வொருவரும் செய்து கொண்டிருந்தால் நாளை சினிமாவுக்குள் இருக்கும் பெண்களுக்கு வெளியில் என்ன மரியாதை கிடைக்கப் போகிறது..? சினிமாக்காரர்களை மற்றைய பொதுவான மக்கள் என்ன நினைத்துப் பேசுவார்கள்.. கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்..!

உங்க சேட்டைகளையெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டோட நிறுத்திக்கக் கூடாதா ரோபோ சங்கர்..?

- Advertisement -

Read more

Local News