Friday, April 12, 2024

“சிண்ட்ரெல்லா’ என்கிற பெயருக்காகவே நடித்தேன்” என்கிறார் நடிகை ராய் லட்சுமி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எஸ்.எஸ்.ஐ புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் செப்டம்பர் 24-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடினர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டிரெய்லர், பாடல்கள் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் திரையிடப்பட்டன. அதைத் தொடர்ந்து படக் குழுவினர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

நடிகை ராய் லக்ஷ்மி பேசும்போது, “நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை எல்லாம் பார்க்கிறேன் ஒரு பெரிய போருக்குப் பிறகு சந்திப்பது போல் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புன்னகையுடன் கூடிய  உங்கள் முகங்களைப் பார்க்கிறேன். இனி இது தொடரும் என்று நம்புகிறேன்.

இந்த ‘சிண்ட்ரெல்லா’  ஒரு திகில் பேண்டஸி கொண்ட வித்தியாசமான ஹாரர் படம். நிறைய திகில் படங்களை நீங்களும் நானும் பார்த்திருக்கிறோம். இது வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு  வித்தியாசமாக இருக்கும்.

காஞ்சனா’ மற்றும் ‘அரண்மனை’ போன்ற  வெற்றிப் படங்களுக்குப் பிறகு, அதே மாதிரி படங்களாகவே எனக்கு வந்தன. ஆனால் அந்த வகை ஒரே மாதிரியான திகில் திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன்.

ஆனால் வினூ இந்தப் படத்திற்காக என்னை அணுகியபோது அதே வகை, என்றாலும் ‘சிண்ட்ரெல்லா’ என்ற தலைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். சிண்ட்ரெல்லா என்ற அந்த ஒரு வார்த்தையில் நான் மனம் கவரப்பட்டேன். ‘சிண்ட்ரெல்லா’ என்ற பெயரை தேவதைக் கதைகளில்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரில் ஒரு திகில் படமா என்று வியந்தேன்.

ஆனால் அதையே ஒரு திகில் படமாகக் கூறினால் எப்படி இருக்கும் என்றபடி கதை சொல்ல ஆரம்பித்தார். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இதில் இரண்டு வேடம் என்று முதலில் அவர் சொல்லவே இல்லை. ஆனால் மூன்று வேடம் என்பது தெரியவே தெரியாது. போகப்போக ஒவ்வொரு பாத்திரமாக என்னிடம் அவர் விளக்கினார்.

வேலைக்காரி வேடமும் நான்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொன்னபோது  நான் ஒரு கணம் தயங்கினேன். மறுத்து விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் என் மேல் நம்பிக்கை வைத்துப் பேசினார். கதையில் மனம் கவரப்பட்டு  ஒப்புக் கொண்டேன். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர் என் மேல் நம்பிக்கை வைத்து அதை விவரித்தார்.

இந்தப் படம் ஒரு பிரம்மாண்டமான அனுபவத்தைக் கொடுத்தது. படத்தின் பாத்திரங்களின் தோற்றம், ஒளிப்பதிவு, இசை என்று சின்னச் சின்ன வேலைகளைகூட அனைவரும் குழுவாக இணைந்து செய்தார்கள். படக் குழுவினரின் ஒன்றுபட்ட உழைப்பின் பலனாக இந்த படம் வந்திருக்கிறது.

சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்த சம்பந்தப்பட்ட பாத்திரம் சவாலானது. பல நேரங்களில்,அந்தக் கவுனை  அணிந்து நடிப்பது மிகவும் சிரமமாகவும், அசெளகரியமாகவும் இருந்தது. படம் பார்க்கும்போது அந்த சிரமமெல்லாம் காணாமல் போய்விட்டது.

ரோபோ சங்கருடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மறக்க முடியாதவை. பல காட்சிகளை மேம்படுத்த அவர் உதவினார். அவை ரசிக்கும்படி இருக்கும். இந்தப் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று இருந்தோம். அதன்படி இப்போது காலம் கை கூடி வந்துள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படத்தில் பணி புரிந்த அனுபவம் மூன்று படங்களில் பணிபுரிந்த அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. சிண்ட்ரெல்லா’ தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News