Thursday, April 11, 2024

கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகத்தில் கேஷியராக முதன்முதலாக பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். அதில் நம்பகத்தன்மை கிடைத்த சூழலில் தனது திறமையால் வளர்ந்து புரொடக்‌ஷன் இன்சார்க் ஆகிப் பல படங்களுக்குப் பணியாற்றி அதன் பின்பு தயாரிப்பாளராகவும் மாறியவர் பி.எல்.தேனப்பன்.

நடிகர் ரஜினியின் நடிப்பில், கவிதாலயா நிறுவனம் தயாரிச்ச ‘முத்து’ படத்திலும் பி.எல்.தேனப்பன்தான் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். இந்த ‘முத்து’ படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரும், நடிகர் ரஜினியும் தலா 1 லட்சம் ரூபாயை பரிசாகக் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் பி.எல்.தேனப்பன். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அனைத்து படங்களுக்கும் நான்தான் தயாரிப்பு நிர்வாகி என்பதால் ‘முத்து’ படத்திலும் என்னையே தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்ற வைத்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்கள். அதனால் எனக்குக் கீழே உதவியாளர்களை வைத்துக் கொண்டுதான் அத்தனை பேரையும் சமாளிக்க வேண்டியிருந்தது.

அதோடு சில காட்சிகளில் துணை நடிகர்களை நூற்றுக்கணக்கில் அழைத்து வர வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் மிகச் சிரமப்பட்டுத்தான் அவர்களை வரவழைத்து வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து பிரச்சினையில்லாமல் படத்தை முடித்துக் கொடுத்தேன். படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு நான்கு நாட்கள் கழித்து ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் அவரைப் பார்க்கச் சென்றேன்.

அப்போது அவர் என்னிடம், “நான் இதுவரைக்கும் 40-க்கும் மேல படங்களை தயாரிச்சிருக்கேன். ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கின்போதும் நடு ராத்திரி 12 மணிக்குக்கூட எனக்கு ஏதாவது ஒரு விஷயமா போன் வரும். ஆனால், இத்தனை வருஷ அனுபவத்துல.. இந்த ஒரு படத்தின் போதுதான் ஒரு போன்கூட எனக்கு வரலை. இத்தனை ஆர்ட்டிஸ்ட் படத்துல இருந்தும் ஒரு பிரச்சினையும் இல்லாம நீ பார்த்துக்கிட்ட.. உண்மையில் இது கிரேட் ஜாப். பாராட்டுக்கள்..” என்று சொல்லிவிட்டு எனக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்.

இது நடந்த சில நாட்கள் கழித்து நான் ‘பரம்பரை’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ரஜினி ஸார் அழைப்பதாகச் சொன்னார்கள். நானும் அவரைப் பார்க்கப் போனேன். அவரும் என்னை ‘முத்து’ படத்தில் பிரச்சினையில்லாமல் பார்த்துக் கொண்டதற்காக என்னைப் பெரிதும் பாராட்டிவிட்டு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கவுரவப்படுத்தினார்..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.

- Advertisement -

Read more

Local News