Friday, April 12, 2024

பட்டாம்பூச்சி – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பட்டாம்பூச்சி’ 1980-களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர் சி.யும் நடித்துள்ளனர்.

தான் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஜெய் நாளைய தினம் தூக்கிலிடப்பட இருக்கும் நிலையில் மாலை முரசு’ பத்திரிகையின் பெண் ரிப்போர்ட்டரான ஹனிரோஸை சந்திக்க விரும்புகிறார்.

தன்னைக் காண வந்த ஹனிரோஸிடம், “இத்தனை நாட்களாக வெளியில் போலீஸ் தேடி வரும் பட்டாம் பூச்சி’ என்ற சீரியல் சைக்கோ கொலைகாரன் நான்தான்” என்ற உண்மையைச் சொல்கிறார் ஜெய்.  

இந்தச் செய்தி வெளியில் பரவ.. போலீஸ் துறை பரபரக்கிறது. ஜெய்யின் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டு, அவர் செய்த சீரியல் கொலைகளைக் கண்டறிய போலீஸ் அதிகாரியான சுந்தர்.சி நியமிக்கப்படுகிறார்.

ஜெய் தந்திரமாக பல வழிகளில் சுந்தர்.சி-யை ஏமாற்றி மேலும் ஒரு கொலையை செய்து போலீஸை குழப்பி வைக்கிறார். இதனாலேயே நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லி தப்பிக்கவும் செய்கிறார்.

ஆனால் உண்மையில் கொலையாளி ஜெய்தான் என்பதை நம்பும் சுந்தர்.சி எப்படியாவது ஜெய்க்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக போலீஸ் ஏட்டுவான இமான் அண்ணாச்சி மூலமாக ஜெய்யின் கோபத்தைத் தூண்டிவிட.. அது விபரீதமாகிறது.

இதென்ன விபரீதம்..? ஜெய் என்ன ஆனார்..? சுந்தர்.சி தனது பணியை செய்து முடித்தாரா..?” என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், கிரைம், திரில்லர் படத்தின் திரைக்கதை.

சுந்தர்.சி மிக அளவான நடிப்பை கொடுத்தும், தேவைப்பட்ட இடங்களில் படத்தை சிறிது தூக்கி நிறுத்துவதைப் போல, தனது நடிப்பினை கச்சிதமாகச் செய்திருக்கிறார். பூனை-எலி துரத்தல் கதை என்பதால் திரைக்கதை ஓடிக் கொண்டேயிருப்பதால் சுந்தர்.சி.யும், ஜெய்யும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு ஓடி நடித்திருக்கிறார்கள்.

வழக்கமாக இல்லாமல் புதிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெய்க்கு தனி பாராட்டுக்கள். தனது மேனரிசமான தோள்பட்டையையும், கழுத்தையும் அவ்வப்போது திருப்பிக் கொள்ளும் அந்த நடிப்புக்கே தனியாக பாராட்ட வேண்டும். சைக்கோ கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை கடைசிவரையிலும் அவர் காண்பித்திருக்கிறார்.

இதுவரையிலும் பார்த்திருக்காத அவரது நடிப்பை போலீஸ் விசாரணையிலும், குற்றங்களை செய்யும்போதும், கிளைமாக்ஸ் காட்சியிலும் பயங்கரமாக செய்து காட்டியிருக்கிறார் ஜெய். இந்தப் பயங்கரவாதியை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறக்க முடியாதுதான்.

நிச்சயமாக தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளெல்லாம் இந்தக் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்தான். இதனால் மலையாளத்தில் இருந்து ஹனிரோஸ் என்ற அழகு தேவதையை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பத்ரி.

கிளைமாக்ஸ் காட்சியில் இவர் படும் பாட்டை பார்த்தபோது நமக்கு பகீரென்கிறது. அழகு தேவதையாக இருந்தவரை இந்தப் பாடு படுத்துகிறாரே என்று ஜெய் மீது நமக்கு வெறியே ஏற்படுகிறது. ஹனிரோஸின் தவிப்பான அந்த நடிப்பு, படத்திற்கு இறுதியில் கொஞ்சம் ஆக்சிஜனை கூட்டியிருக்கிறது.

இமான் அண்ணாச்சியின் நடிப்பும், அவரது மகளான மானஸ்வியின் சிறப்புக் குழந்தைக்கான நடிப்பும் சிறப்புதான். படத்தில் அநியாயமாக ஜெய்யின் கைகளால் செத்துப் போகும் அந்த அப்பாவிகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படும் காட்சி பதைபதைக்க வைக்கிறது.

இந்த அளவுக்கு கொடூரத்தை வெளிப்படையாக காட்ட வேண்டுமா இயக்குநரே என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது. சைக்கோ கொலைகாரன் என்பதற்கான அறிமுகத்தை புகைப்படங்களாலும், வசனத்தாலுமே காட்டியிருக்கலாம்.   

இந்தக் கதை1986-ல் நடப்பதாகச் சொல்லியிருப்பதால் அதற்காகவே வேலை மெனக்கெட்டு பல காட்சிகளில் அம்பாசிடர் கார்களைத் தவிர வேறு எதையும் காட்டாமல் தவிர்த்து பெரும்பாடு பட்டிருக்கிறார் இயக்குநர்.

சண்டை காட்சிகளை வடிவமைத்த சண்டை இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. கிளைமாக்ஸ் சண்டை காட்சி பயத்தைத் தந்தது.. கொடூரமும்கூட. படம் நெடுகிலும் ஒளிப்பதிவை கலராகவே வழங்கியிருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுக்கள். ஜெய் சம்பந்தப்பட்ட கொலை காட்சிகளை மட்டும் சிவப்பு லைட்டுகள் சிந்திய வெளிச்சத்தில் வைத்து பதற்றத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.

படத் தொகுப்பாளர் சண்டை காட்சிகளில் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார் போலும். பின்னணி இசையில் கொடுத்திருக்கும் பில்டப்பும், வேகமும் படத்திற்கும் வேகத்தைக் கூட்டியிருக்கிறது.

இந்தப் படம் இதற்கு முன்னால் வெளி வந்த பல தமிழ்ப் படங்களின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது என்பதும் உண்மைதான். முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் சற்று தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

“ஜெய்யின் பட்டாம்பூச்சி வேடத்தை வெளிப்படுத்தி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் போகிறேன்…” என்பதை சுந்தர்.சி சவாலாக சொன்னாலும் அதற்குத் துணையாக போலீஸும் இருப்பது போலவே திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும்.

ஆனால் ஹீரோயிஸ கதையாக தனியொரு மனிதனாக ஜெய்யை எதிர்த்து சுந்தர்.சி போராடுவதுபோல திரைக்கதை அமைத்ததினால் சுந்தர்.சி.யும், ஹனிரோஸும் கஷ்டப்பட்டு, அவரது மகளும் கஷ்டப்பட்டு.. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் இழுக்கப்பட்டதுபோல தோன்றுகிறது. கொஞ்சம் முன்னதாகவே ஜெய்க்கு முடிவுரை தந்திருக்கலாம்.

முதல் பாதியை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பத்ரி, இரண்டாம் பாதியில் இன்னும் அடித்து ஆடியிருக்க வேண்டும்.

படத்தில் வரும் சில ட்விஸ்ட்களை கச்சிதமான இடத்தில் பொருந்தி வரும் அளவுக்கு, இன்னும் சுவாரஸ்யமாக திரைக்கதையை அமைத்திருந்தால் படம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

பட்டாம்பூச்சி – பயங் கொள்ள வைக்கிறது..!

RATING : 3 / 5

- Advertisement -

Read more

Local News