Thursday, April 11, 2024

நித்தம் ஒரு வானம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம், Viacom 18 ஸ்டுடியோஸ்ஸூடன் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன் அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா, அழகம்பெருமாள், காளி வெங்கட், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ரா.கார்த்திக், இசை  – கோபி சுந்தர், ஒளிப்பதிவு – விது அய்யனா, படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – கமல்நாதன், பாடல்கள் – கிருத்திகா நெல்சன், நடன இயக்குநர் – லீலாவதி குமார், நிர்வாகத் தயாரிப்பு – S.வினோத் குமார், ஒலிக் கலவை – T. உதயகுமார், உடை வடிவமைப்பாளர் – நவதேவி ராஜ்குமார், சண்டை பயிற்சி இயக்கம் – விக்கி, புகைப்படங்கள் – ஷேக், பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One), விளம்பர வடிவமைப்பு – ஏஸ்தெடிக் குஞ்சம்மா, ப்ரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ் – G.கண்ணன், நிர்வாக மேற்பார்வை – மோகன் கணேசன், விஷூவல் புரோமோஷன்ஸ் – Feed Of Wolf.

நம்முடைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகத்தான் வரும். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது  பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். இப்படியொரு பயணக் கதைதான் இந்த நித்தம் ஒரு வானம்’ படம்.

இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு நல்ல உணர்வைத் தரக் கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான நிலப்பரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

3 கதாநாயகிகள் படத்தில் இருந்தாலும், இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது.

நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளது. படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும்போது புத்துணர்ச்சியோடும், புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இந்த ‘நித்தம் ஒரு வானம் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் போலும்..!

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகளைப் போல இன்பங்களும், துன்பங்களும் சேர்ந்தே வரும். இன்பம் வரும் வேளையில் அதை அனுபவிப்பது போலவே துன்பம் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு அடுத்து நகர்தலைச் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு துன்பத்தைக் கண்டு துவண்டுபோய் அதையே நினைத்து வாழ்க்கையை நாமே ரணமாக்கிக் கொள்ளக் கூடாது என்பதைத்தான் இந்தப் படம் நமக்கு உணர்த்துகிறது.

அசோக்செல்வன் ஐ.டி. ஊழியர். அநியாயத்திற்கு சுத்தம் பார்ப்பவர். வீட்டில் அனைத்தும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். வீட்டில் வளர்க்கும் நாயுடன்கூட தள்ளியே இருப்பவர். அலுவலக மீட்டிங்கில் உயரதிகாரிகூட ரூல்ஸை பாலோ செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

இப்படிப்பட்டவருக்கு பெண் கிடைத்து திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணத்திற்கு முதல் நாள் மணமகள் தற்செயலாக தனது முந்தைய காதல் கதையைச் சொல்ல.. அசோக்செல்வன் மணமகளிடம் நீ செய்ததுதான் தப்பு என்று சரியாக அட்வைஸ் செய்கிறார்.

மணமகள்  அசோக் சொன்ன சரியான அட்வைஸை புரிந்து கொண்டு திருமணத்திற்கு முதல் நாள் காதலனுடன் சென்றுவிட.. திருமணம் நின்று போகிறது.

இதனால் பெருத்த அவமானத்திற்குள்ளாகும் அசோக் தனது குடும்ப நண்பியான டாக்டர் அபிராமியின் மருத்துவமனைக்கு வருகிறார். அவரோ தன்னிடம் சிகிச்சைக்கு வந்த இரண்டு பேரின் கதைகளை அசோக்கிடம் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார்.

மிக, மிக சுவாரஸ்யமாக இருக்கும் அந்தக் கதைகளைப் படிக்கும் அசோக்செல்வனுக்கு அந்தக் கதைகளின் முடிவுகளை அறிய பெரும் ஆசைப்படுகிறார். அந்தக் கதைக்குச் சொந்தக்காரர்களைத் தேடிப் பயணப்படுகிறார் அசோக்.

அப்போது வழியில் நட்பாகும் ரிதுவர்மாவும் அசோக்குடன் நட்பாக இருவரும் அந்தக் கதையின் மாந்தர்களைத் தேடிச் செல்கிறார்கள். அவர்களை இவர்கள் சந்தித்தார்களா.. இந்தச் சந்திப்பு அசோக்கின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்த நித்தம் ஒரு பயணம் படத்தின் சுவையான திரைக்கதை.

அசோக் செல்வனுக்கு என்ன மச்சமோ தெரியவில்லை..? கடைசியாக அவர் நடித்த படங்களிலெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இவருக்கு 3 நாயகிகள்.

நார்மலான ஒருவன், அப்பாவி, மிக மிக அப்பாவி என்று அசோக் செல்வனுக்காகவே வித்தியாசமான கேரக்டர் ஸ்கெட்ச்சில் அவரது கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஏற்ற நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார் அசோக்செல்வன்.

அந்த கோவை வட்டார தமிழ் பேசி அபர்ணாவை ஏமாற்றும் கதாப்பாத்திரம் மிக சிறப்பு. சுத்தமே வாழ்க்கையாக நினைத்து வாழும் மெயின் ஹீரோ கேரக்டரில் தெருவுக்கு 4 பேர் இருக்கிறார்கள். இதனாலேயே இவரையும் நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.

படத்தில் 5 ஹீரோயின்கள் இருந்தாலும்  படம் முழுவதும் அசோக் செல்வனுடன் பயணிக்கும் ரிது வர்மாதான் அதிகக் காட்சிகளில் தென்படுகிறார். அந்த அழகு முகமும், நடிப்பும் கடைசிவரையிலும் நம்மை திரையைவிட்டு அகலவிடாமல் செய்திருக்கிறது.

ஷிவாத்மிகா ராஜசேகரின் அமைதியான, அடக்கமான காதலி கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் மல்லிகாவை ஞாபகப்படுத்தியிருக்கும். சற்றேறக்குறைய அனைவரின் எதிர்பார்க்குரிய காதலி இவராகவே இருக்கிறார்.

இப்போது இந்தக் கதாப்பாத்திரத்தில் என்று காண்பிக்கப்படும் ஷிவதா நாயரின் சிரிப்பான முகமும், தைரியமாக பேசும் வசனங்களும், உடல் மொழியும் அசோக் செல்வனையே அசைத்துப் பார்க்கிறது. இதனால்தான் ஷிவதாவுடன் பேசி முடித்தவுடனேயே நான் ஊருக்குப் போகிறேன் என்று துடிக்கிறார் அசோக்செல்வன்.

இவர்கள் மூவரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் கோவை அம்மணி அபர்ணா பாலமுரளி. என்னவொரு அலட்சிய நடிப்பு.. காதலித்துதான் கல்யாணம் செய்வேன் என்பதை தனது தந்தையிடம் சொல்லும் அழகும், தந்தையிடம் அடிக்கடி கிண்டலாக பேசும் பாவனையும், மணமகள் தோற்றத்திலேயே நடுரோட்டில் நடப்பதும், பஸ்ஸ்டாண்டில் வந்து ஸ்டைலாக அமர்வதும்.. இந்தப் படம் அபர்ணாவுக்காக நேர்ந்துவிடப்பட்டது என்றே சொல்லலாம்.

இவருடைய அப்பாவான அழகம் பெருமாளுக்கு இது நிச்சயமாக பேசும் படம்தான். இப்படியொரு அப்பாவும், மகளும் உலகத்தில் இருக்கிறார்கள் எனில் அவர்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான்.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் இயக்குநரின் இன்னொரு கண்ணாகவே இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.

ஒடிசாவில் ஆரம்பித்து சென்னை, கொல்கத்தா, சண்டிகர், இமயமலை அடிவாரம் என்று திரைக்கதை போகும் அத்தனை இடங்களையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். தரனின் பின்னணி இசை படத்துக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறது.

இந்தப் படத்தில் சிறப்பம்சமே வித்தியாசமான திரைக்கதைதான். பொதுவாக மன நல மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லியனுப்புவார்கள்.

ஆனால் இந்தக் கதையில் தான் சந்தித்த கதாபாத்திரங்கள் உன்னைவிட கஷ்டப்பட்டவர்கள்.. துன்பப்பட்டவர்கள். வாழ்க்கை என்னும் நதியில் அடித்துச் செல்லப்பட்டவர்கள். அவர்களைப் பார்த்தாவது உனக்கு வந்ததும், நீ பட்டதும் சாதாரணம் என்று நினைத்து அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல் என்பதை டாக்டர் அபிராமியின் மூலமாக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரா.கண்ணன்.

கற்பனையாக கதையெழுதி, அதையும் படத்திற்காக நிஜக் கதைகளாக மாற்றி, அந்த நிஜக் கதையில் படத்தின் நாயகனையே நடிக்க வைத்திருக்கும் இந்த வித்தியாசமான முயற்சி உண்மையில் சிறப்புதான்.

சென்னையில்  இருந்து இமயமலைவரையிலும் செல்லும் இந்தப் பயணத்தின் மூலமாக வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாயகனுக்குச்  சொல்லிக் கொடுப்பதுபோல படம் பார்க்க வந்திருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு பாடத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

எனக்கு வந்தது தற்காலிகமான தடைதான். கெடுதிதான். கஷ்டம்தான். அடுத்து என் வாழ்க்கையில் ஒரு வசந்தம் வரும் என்ற நேர்மறை சிந்தனையையும், நம்பிக்கையும் நமக்குள் விதைத்திருக்கிறது இந்தப் படம்.

“எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போறோம். அதுவரை வழியில் பார்த்து “ஹாய்” சொல்றவருக்கு நாமும் பதிலுக்கு “ஹாய்” என்று சொல்றதுல என்ன தப்பு இருக்கு..?” என்ற ஒரு வசனத்தின் மூலமாகவும் நமது மனித மனத்தின் எண்ணத்தை மேம்படுத்த வைக்கிறது இத்திரைப்படம்.

படம் துவக்கத்தில் சற்று மெதுவாக நகர்ந்தாலும் அந்த 2 கதைகளின் முடிவில் படம் பறக்கிறது. அசோக் செல்வனைவிடவும் தியேட்டர் ரசிகர்கள்தான் அந்த 2 பேரின் தற்போதைய வாழ்க்கையைப் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஏக்கத்தை ரசிகனுக்குக் கொடுத்திருக்கும் இந்தப் படக் குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..!

நித்தம் ஒரு வானம் – வாழ்க்கையை கொண்டாட சொல்கிறது..!

RATING : 4.5 / 5

- Advertisement -

Read more

Local News