Friday, April 12, 2024

புதிய ஊரடங்கு சட்டம் – தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்படுகின்றன

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் தமிழ்த் திரைப்பட துறை மிகவும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களில் ஒரு காட்சிக்கு 10, 20, 30 என்ற அளவில்தான் ரசிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே சமீபத்தில் திரைக்கு வந்த அத்தனை திரைப்படங்களும் கடும் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு உத்தரவின் காரணமாக இரவு நேரக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டாக வேண்டும். அதேபோல் மாலை நேரக் காட்சிகளை இரவு 9.30 மணிக்குள்ளாக முடிக்க வேண்டிய கட்டாயமும் தியேட்டர்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் தொடர்ந்து தியேட்டர்களை நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று அளித்த பேட்டியில், “தமிழக அரசு தற்போது இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் இரவு காட்சிகள் திரையிடுவதை ரத்து செய்தும், ஞாயிற்றுகிழமைகளில் முழுமையாக தியேட்டர்களை மூடவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

தியேட்டர்களுக்கு பார்வையாளர்கள் முக கவசம் அணியாமல் வந்தால் எங்களுக்கு தண்டனையாம். இது விசித்திரமாக இருக்கிறது. தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருபவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்..?

தற்போது தியேட்டர்களில் தினமும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதனால் இனிமேல் புதிய படங்கள் எதுவும் திரைக்கு வராது.

ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 112 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. மீதி உள்ள தியேட்டர்களில் 200 தியேட்டர்கள் மூடப்படும் நிலையில் இருக்கிறது. எனவே மீண்டும், மீண்டும் ஊரடங்கு போடுவதால் எங்களால் தியேட்டர்களை நடத்த முடியாது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களையும் மூட முடிவு செய்துள்ளோம்.

நாளை செவ்வாய்க்கிழமை (நாளை) காலை ஜூம் செயலியில் தியேட்டர் அதிபர்கள் கூட்டம் நடத்தி இது குறித்து ஆலோசிக்க இருக்கிறோம்…” என்றார்.

எந்த தேதியில் இருந்து தியேட்டர்களை மூடுவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.

தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ்ரீதர் கூறும்போது, “தமிழக அரசின் இந்த ஊரடங்கு முடிவினால் தியேட்டர்களை நடத்த முடியாது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. மின் கட்டணம் செலுத்த முடியாது. எனவே அனைத்து தியேட்டர்களையும் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News