Friday, April 12, 2024

நெற்றிக்கண் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப் படங்களை தந்து வரும் நடிகை நயன்தாரா நடித்திருக்கும் 65-வது திரைப்படம்தான் இந்த ‘நெற்றிக்கண்’ திரைப்படம்.

இந்தப் படத்தை நயன்தாராவின் காதலரான இயக்குநர் விக்னேஷ்  சிவன் தனது Rowdy Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். இது இவரது முதல் தயாரிப்பாகும்.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் மணிகண்டன், சரண் சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – கிரிஷ், ஒளிப்பதிவு – N.கார்த்திக் கணேஷ், கலை இயக்கம் – S.கமலநாதன், சண்டை இயக்கம் – C.மகேஷ், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், ஒலியமைப்பு – விஜய் ரத்தினம், உடை வடிவமைப்பு – சைதன்யா, ராவ், தினேஷ் மனோகரன், வசனம் – நவீன் சுந்தரமூர்த்தி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one, இணை தயாரிப்பு – K.S.மயில்வாகணன், தயாரிப்பு மேற்பார்வை –  V.K.குபேந்திரன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – G முருகபூபதி, M.மணிகண்டன்.

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்த அவள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ்தான் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.

‘BLIND’ என்ற கொரியப் படத்தினை முறைப்படி அனுமதி பெற்று தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.

சி.பி.ஐ. அதிகாரியான துர்கா என்னும் நயன்தாரா தனது தம்பியுடன் காரில்  வரும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்குகிறார். இந்த விபத்தில் அவரது தம்பி இறந்துவிட.. நயன்தாரா உயிர் பிழைக்கிறர். இருந்தும் அவரது கண்ணில் கண்ணாடித் துகள்கள் பாய்ந்ததால் அவருக்கு கண் பார்வை பறி போகிறது. இதனால், தான் வளர்க்கும் கண்ணா என்ற நாயுடன் தனிமையில் வாழ்கிறார் நயன்தாரா.

அஜ்மல் ஒரு மருத்துவர். ஆனால் மன நலம் பிறழ்ந்தவர். தன்னிடம் அபார்ஷனுக்காக வரும் பெண்களை கடத்திச் சென்று அவர்களைத் துன்புறுத்தி மகிழும் ஒரு சைக்கோ கேரக்டர் இவர். இவர் வரிசையாக சில பெண்களைக் கடத்திச் செல்கிறார். போலீஸில் புகார் பதிவாகியிருக்கிறது. அவர்களும் தேடி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் ஒரு இரவு நேரத்தில் தான் புக் செய்த காருக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நயன்தாராவை பார்க்கும் அஜ்மல் அவரைக் கடத்திச் செல்லத் திட்டமிடுகிறார்.

தான் கால் டாக்சி டிரைவர் என்று பொய் சொல்லி நயன்தாராவை ஏமாற்றி அழைத்துச் செல்கிறார் அஜ்மல். வழியில் இந்தக் கார் விபத்துக்குள்ளாக ஒரு பெண் காரில் அடிபட்டு மயக்கமாகிறார். நயன்தாரா என்னவென்று கேட்கும்போது அவரை விலக்கிவிட்டுவிட்டு காயம் அடைந்த பெண்ணை டிக்கியில் போட்டுத் தூக்கிக் கொண்டு செல்கிறார் அஜ்மல்.

ஏதோ நடந்திருக்கிறது என்பதை யூகித்த நயன்தாரா போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார். அங்கே அவர் சொல்வதை யாரும் முதலில் நம்பவில்லை. பெண்கள் காணாமல் போன வழக்கும், இதுவும் ஒன்றாக இருக்குமோ என்னும் சந்தேகம் ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே வருகிறது.

அஜ்மல், நயன்தாராவைப் பின் தொடர இது அவருக்குத் தெரிய வந்து போலீஸையும் தாண்டி தானே அவரைப் பிடிக்க முயல்கிறார். அது அவரால் முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் திரைக்கதை.

நயன்தாரா என்னும் வயது முதிர்ந்த நாயகிக்கு அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தைக் கொடுத்துதான் நடிக்க வைத்தாக வேண்டும். அதனால்தான் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போலும்.

அவரது முகத்திலேயே அவரது வயது தாண்டவமாடுகிறது. ‘அக்கா’ என்ற கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறார் நயன்தாரா. கண் பார்வையில்லாத அந்தச் சோகம் எப்போதும் அவரது முகத்தில் இருப்பதும், தெரிவதும் இயல்பாக இருக்கிறது.

கண் பார்வையில்லாத கதாபாத்திரங்களுக்கு தட்டுத் தடுமாறி நடப்பதும், ஓடுவதும், குழம்பிப் போய் பேசுவதும்.. மிகவும் முக்கியம். அதை நயன்ஸ் நல்லபடியாகவே செய்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அவரது கோபத்தைக் காட்ட வேண்டிய இடத்திலெல்லாம் மென்மையாக நடித்திருப்பதுதான் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பாதகமாக இருக்கிறது.

சி.பி.ஐ.யில் அதிகாரியாக இருந்தவர் எந்த அளவுக்கு நுண்ணறிவோடு இருந்திருப்பார்..? அதிகாரத் தோரணையில் இருந்திருப்பார்..? இதையெல்லாம் இதில் கொண்டு வந்திருக்கலாம். கடைசியாக சி.பி.ஐ.யில் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என்பதைக்கூட ஈர்ப்பாக சொல்லாமல் முடித்திருக்கிறார்கள்.

அஜ்மல் கொடூர வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமில்லாதது தெளிவு. அவர் ஒரு மன நோயாளி என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். காட்டியிருக்கலாம். இல்லாமல் போக.. கடைசியில் தனது சோகக் கதையை அவர் சொல்லும்போது அது நம் மனதை பெரிதும் பாதிக்கவில்லை. இதனாலேயே கதை நம் மனதில் ஒன்றவில்லை.

பீட்சா டெலிவரி பாயாக நடித்திருக்கும் சரண் சக்தியும், மணிகண்டனும்தான் கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்கள். மணிகண்டன் தான் படும் அவமானத்தையும் துடைப்பதற்காக இந்த ஒரேயொரு கேஸில்தான் ஜெயித்தால் போதும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு கேஸில் இறங்குவது இன்னொரு கிளைக் கதை என்றாலும் சுவாரஸ்யம்.

ஆனால் அவரது போலீஸ் டிரெஸ்ஸிங்கும், டயலாக் டெலிவரியும் இயக்குநரின் தவறைச் சுட்டிக் காட்டுகிறது. இதேபோல் டெலிவரி பாய் சரண் சக்தி நயன்தாராவை தப்பிக்க வைக்க செய்யும் அந்தக் காட்சிகளில் பதைபதைப்புடன் நடித்துக் கொடுத்திருக்கிறார். நமக்கும் கொஞ்சம் டென்ஷனை ஏற்றுகிறது. மேலும் பல கதாபாத்திரங்கள். ஆனால் யாருக்கும் அழுத்தம் கொடுக்காமலேயே விட்டிருக்கிறார்கள்.

தொழில் நுட்ப வட்டாரத்தில் ஒரு குறையும் இல்லை. கார்த்திக் கணேஷின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாகவே இருக்கிறது.  இரவு நேரக் காட்சிகளில் மிகுந்த சிரத்தையெடுத்து படமாக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. பாராட்டுக்கள். இந்த இருட்டிலும் நாயகியின் அழகைக் காட்டியிருப்பதுதான் சிறப்பு.

படத் தொகுப்பாளர் சண்டை காட்சிகளை மட்டும் வேகம் குறையாமல் கத்தரித்துக் கொடுத்துள்ளார். இதற்கேற்றவாறு பின்னணி இசையில் வேகத்தைக் கூட்டி நம்முடைய பார்வையை திசை திருப்பாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இசையமைப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். ஒலிப்பதிவு செய்தவரையும் பாராட்டியே ஆக வேண்டும். இது போன்ற திரில்லர், சஸ்பென்ஸ் படங்களுக்கே உரித்தான அந்த வித்தையை இதிலும் காட்டியிருக்கிறார்.

இப்படி தொழில் நுட்பத்தில் இந்தப் படம் சிறந்து விளங்கினாலும் எடுக்கக் கூடாத படம். எடுக்கக் கூடாத கதையாக இந்தப் படம் தென்படுகிறது. இதெல்லாம் கொரிய சமூகத்திற்கு ஓகேதான். ஆனால் இந்தியாவில்.. இந்திய நாட்டில் இது போன்ற கதைகள் பரவலானால்.. ஏற்கெனவே 50 சதவிகிதம் மன நலம் பிறழ்வு கொண்டவனாக இருப்பவன், முழுமையாக அது போலவே மாறிவிடுவான்.

கொரியப் படத்தை சீன் பை சீன், ஷாட் பை ஷாட் அப்படியே எடுத்திருக்கிறார் இயக்குநர். தமிழுக்கு ஏற்றாற்போல் கொஞ்சமாவது மாற்றியிருக்கலாம்தான்.

நயன்தாரா, தான் வேலை பார்த்த சிபிஐயின் உயரதிகாரிகளின் துணையோடு வந்திருந்தால் இந்தக் கேஸ் உடனடியாக முடிந்திருக்கும். இந்த அளவுக்கு இழுவையெல்லாம் நடந்திருக்காது. இதையெல்லாம் ஏன் செய்யவில்லை..? இது கொரியப் படங்களுக்கு ஓகே.. நமக்கு..?

தெருவுக்குத் தெரு சிசிடிவி கேமிராக்கள் இருக்கும்போது அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்லும் அஜ்மலை கண்டறிய முடியவில்லை என்று சொல்லலாமா..? நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டிலுமா சிசிடிவி கேமிராக்கள் இல்லை..? பொய் சொல்வதையும் கொஞ்சம் பொறுத்தமாகச் சொல்ல வேண்டாமா ஐயா..?

இதே கதையைத்தான் மிஷ்கின் ‘சைக்கோ’ என்ற படமாக உருவாக்கினார். அதில் பெருமளவு லாஜிக் மீறல்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டாரே.. அதுபோல் செய்திருக்கலாமே..?

இந்தக் கதையில் கொலைகாரன் யார் என்பது முன்பேயே சர்வ நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. அப்புறம் இதில் என்ன சஸ்பென்ஸ் இருக்கிறது..? திரில்லர் இருக்கிறது..? அவனை எப்படி கண் தெரியாத ஒருத்தி கொலை செய்யப் போகிறாள் என்ற ஆவலில்தான் திரைக்கதை இருந்திருக்க வேண்டும். அந்தப் பரபரப்பு இந்தப் படத்தில் மிஸ்ஸிங் என்பதால்தான் படம் பற்றிய விமர்சனப் பரபரப்பு இப்போதுவரையிலும் கூட வெளியில் பரவவில்லை.

Rank : 2 / 5

- Advertisement -

Read more

Local News