Friday, April 12, 2024

பாண்டியராஜனுக்கு டை கட்டிவிட்ட எம்.ஜி.ஆர்.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தன்னுடைய திருமணத்திற்கு எதிர்பாராமல் நேரில் வந்த எம்.ஜி.ஆர். அங்கே அத்தனை பேர் முன்பாகவும் தனக்கு டை கட்டிவிட்ட சுவாரசிய சம்பவத்தையும் சொல்கிறார் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன்.

“எனக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை அழைக்கலாம் என்று முடிவெடுத்து ராமாவரம் தோட்டத்துக்கு நேரில் சென்றேன். “தலைவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நாளைக்கு வாங்க” என்றார்கள். மறுநாளும் சென்றேன். அன்றைக்கும் அதேபோல் “நாளைக்கு வாங்க” என்றார்கள். மூன்றாவது நாளும் சென்றேன். அன்றைக்கும் அதையேதான் சொன்னார்கள்.

எனக்குக் கோபம் வந்துவிட்டது. “நான்தான் மாப்பிள்ளை. இதுக்கே அலைய முடியாது. ‘பத்திரிகையை நான் நேரில் வந்து கொடுத்தேன்’னு தலைவர்கிட்ட சொல்லிருங்க”ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். சத்தியமா எம்.ஜி.ஆர். நேரில் வருவாருன்னு நான் அப்போ எதிர்பார்த்திருக்கவே இல்லை.

திருமண ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று போலீஸார் வந்து குவிந்தார்கள். கொஞ்ச நேரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தகதகவென்று மின்னிய தோற்றத்தில் காரில் இருந்து இறங்கி வந்தார்.

அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. கல்யாணப் பத்திரிகையைக்கூட நேர்ல கொடுக்கலை. ஆனாலும், தலைவர் நேரில் வந்துட்டாரேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.

தலைவர் வந்தவுடனேயே நான் கட்டியிருந்த டையை பார்த்தார். பட்டென்று “இது இப்படியிருக்கக் கூடாது.. கடைசில சமோசா மாதிரியிருக்கணும்” என்று சொல்லி அவரே அந்த டையைச் சரி செய்து கொடுத்தார். நான் டை கட்டுனதே அதுதான் முதல் முறை. அவரே வந்து எனக்குச் செஞ்சு கொடுத்தாரு பாருங்க. அது நான் செய்த பாக்கியம்..

அந்தக் கல்யாண ரிசப்ஷன்ல கங்கை அமரனின் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தேன். தலைவர் வந்தவுடனேயே தலைவர் பாட்டா போட்டுத் தள்ளினாரு கங்கை அமரன். 20 நிமிடங்கள் அமர்ந்து கச்சேரியைக் கேட்டுவிட்டுக் கிளம்பினார் தலைவர்.

போகும்போதும் என் பக்கத்துல வந்து என் கன்னத்துல தட்டிக் கொடுத்து “20 நிமிஷம் இருந்தேன்”னு அழுத்திச் சொல்லிட்டுப் போனார். இன்னிக்கு நினைச்சாலும் எனக்குக் கண்ணு கலங்குது..” என்று நிஜமாகவே கலங்கிய கண்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டியராஜன்.

- Advertisement -

Read more

Local News