Friday, April 12, 2024

‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன்ன இரண்டு வார்த்தைகள்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் கோவைத் தம்பியின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘பயணங்கள் முடிவதில்லை’. இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய முதல் திரைப்படம் இதுதான். இத்திரைப்படம் 1982-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதியன்று வெளியானது.

இந்தப் படத்தில் மோகன், எஸ்.வி.சேகர், பூர்ணிமா பாக்யராஜ், பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘இசைஞானி’ இளையராஜாவின் இசையில் இந்தப் படத்தில் பாடல்களெல்லாம் சூப்பர் ஹிட்டாக படம் அதைவிட சூப்பர் ஹிட்டாகியது.

இத்திரைப்படத்தைப் பார்த்த அப்போதைய முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படக் குழுவினரைப் பாராட்டியதை இப்போது ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார் இப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் அனு மோகன்.

“பயணங்கள் முடிவதில்லை’ படம் முழுவதும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயார் நிலையில் இருந்தது. அப்போது எம்.ஜி.ஆர்.தான் முதலமைச்சர். படத்தின் தயாரிப்பாளரான கோவைத்தம்பிதான் கோவை மாவட்ட அதிமுகவின் செயலாளர். அதனால், “எம்.ஜி.ஆர். பார்க்காமல் படத்தை வெளியிட மாட்டேன்” என்று உறுதியாய் இருந்தார் தயாரிப்பாளர் கோவைத்தம்பி.

எம்.ஜி.ஆர். அப்போது முதலமைச்சராய் இருந்ததால் படம் பார்க்க, அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. சில நாட்கள் கழித்து ஒரு நாள் படம் பார்க்க வந்தார் எம்.ஜி.ஆர்.

பிரிவியூ தியேட்டர் வாசலில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், நான், கோவைத்தம்பி ஆகியோர் நின்றிருந்தோம். படம் முடிந்து வெளியில் வந்த எம்.ஜி.ஆரிடம் கோவைத்தம்பி, ஆர்.சுந்தர்ராஜனை காட்டி, “இவர்தான் இந்தப் படத்தின் இயக்குநர்…” என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதைக் கேட்டவுடன் எம்.ஜி.ஆர். ஆச்சரியப்பட்டார். “இவரா.. நான் ஏதோ ரொம்ப வயதான ஒருவர்தான் இயக்கியிருக்கிறார் என்று நினைத்தேன். நம்பவே முடியலை..” என்றார். பின்பு ஆர்.சுந்தர்ராஜனின் தோளில் கை வைத்து “ஆக்கப்பூர்வமான பணி. அமோக வெற்றி…” என்று இரண்டு வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டுப் போனார் எம்.ஜி.ஆர். அவர் சொன்னது அப்படியே நடந்தது.

‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம் தமிழகம் முழுவதும் சில்வர் ஜூப்லி கொண்டாடியது.. சென்னையில் ‘லிட்டில் ஆனந்த்’ தியேட்டரில் 550 நாட்கள் ஓடி சாதனை படைத்தது..” என்றார் இயக்குநர் அனு மோகன்.

- Advertisement -

Read more

Local News