Friday, April 12, 2024

12 ஆண்டுகள் கமல்ஹாசனுடன் பேசாமல் இருந்த மனோபாலா-காரணம் என்ன..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும், இயக்குநருமான  மனோபாலா ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மிக நெருங்கிய நண்பர். சின்ன வயதில் இருந்தே கமல்ஹாசனின் எல்டாம்ஸ் ரோட்டு வீட்டில் வலம் வந்தவர் மனோபாலா.

மனோபாலா தான் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தபோது அவரைத் தன்னுடைய காரில் ஏற்றி பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மனோபாலாவை பாரதிராஜாவிடம் துணை இயக்குநர் வேலைக்கு சேர்த்துவிட்டவர் கமல்ஹாசன்தான்.

அப்படியொரு நட்பில் இருந்த இருவரும் கிட்டத்தட்ட 12 ஆண்டு காலம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே இருந்தார்கள் என்பதை நம்ப முடிகிறதா..? ஆனால் இது நடந்த கதைதான்.

இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் மனோபாலாவே கூறியிருக்கிறார்.

“இயக்குநர் பாலு மகேந்திராவின் படப்பிடிப்பின்போது அப்போதைய பெப்சி அமைப்பின் தலைவரான பெப்சி விஜயன் தகராறில் ஈடுபட்டு ‘பேக்கப்’ என்று சொல்லி படக் குழுவினரை அழைத்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் திரையுலகம் முழுவதும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. தமிழ்ச் சினிமாவின் மூத்தக் கலைஞரும், தலை சிறந்த படைப்பாளியுமான பாலு மகேந்திராவுக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பு ஒட்டு மொத்த படைப்பாளிகளுக்கும் நேர்ந்த அவமரியாதை என்று கருதிய கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் அடங்கிய இயக்குநர்கள் ‘படைப்பாளிகள் சங்கம்’ என்கிற பெயரில் புதிய சங்கத்தைத் தோற்றுவித்தார்கள்.

இதனால் திரையுலகமே இரண்டாகப் பிரிந்தது. இந்த நேரத்தில் கமல்ஹாசன் பெப்சி அமைப்பை ஆதரித்தார். நாங்கள் அனைவரும் படைப்பாளிகள் பக்கம் நின்றோம். இது எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.

கமல்ஹாசனுக்கு படைப்பாளிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்த எண்ணிய நடிகர் பார்த்திபன் 100 படைப்பாளிகளின் கையெழுத்திட்ட பொக்கேக்களை கமல்ஹாசனுக்கு அனுப்பி வைக்கும் ஐடியாவை முன் வைத்தார். அதை படைப்பாளிகள் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் ஏற்றுக் கொண்டதையடுத்து படைப்பாளிகள் பலரும் அதில் கையெழுத்திட்டார்கள்.

நானும், சந்தானபாரதியும் மட்டும் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டோம். காரணம், நான் கமல்ஹாசனின் வீட்டிலேயே வளர்ந்தவன். சந்தானபாரதி கமல்ஹாசனின் மிக நெருங்கிய நண்பன். அதனால் நாங்கள் இருவரும் அதில் கையெழுத்திடவில்லை. ஆனால், படைப்பாளிகள் சங்கத்தில் எங்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்ததால் அதில் கையெழுத்திட வேண்டியதாகிவிட்டது.

100 பொக்கேக்களும் கமல்ஹாசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதில் நான் கையெழுத்திட்டது.. சந்தானபாரதி கையெழுத்திட்டது.. இந்த இரண்டு பொக்கேக்களை மட்டும் கமல்ஹாசன் தன் வீட்டில் இருந்த ஷெல்பில் பத்திரமாக வைத்துவிட்டார். இது எங்கள் இருவருக்குமிடையில் இருந்த நட்பைக் குலைத்தது. பேச்சுவார்த்தை சுத்தமாக நின்று போனது.

அதன் பின்பு படைப்பாளிகள்-பெப்சி அமைப்பு ஒன்றாக இணைந்தாலும், என்னால் கமல்ஹாசனுடன் பேசவே முடியவில்லை. அதற்கான வாய்ப்பும் அமையவில்லை.

ஆனால், சந்தானபாரதி எப்படியோ கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழுது, புலம்பி நட்பை புதுப்பித்துவிட்டார். பார்த்திபன் ஏதோ ஒரு புத்தக வெளியீ்ட்டு விழாவுக்கு கமல்ஹாசனை அழைக்கப் போய் அப்படியே ஒட்டிவிட்டார். நான் மட்டுந்தான் மாட்டிக் கொண்டேன்.

கடைசியாக 12 ஆண்டு காலம் கழித்து நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு விழாவுக்காக கமல்ஹாசனை அழைக்க ஒரு குழு சென்றது. அந்தக் குழுவில் நானும் இருந்தேன். அப்போதுதான் தூரத்தில் நின்று கொண்டிருந்த என்னை “வா” என்று சைகையில் அழைத்துப் பேசினார் கமல்ஹாசன்.

12 ஆண்டு காலம் கழித்து அன்றைக்குத்தான் எனக்கும், கமல்ஹாசனுக்கும் இடையிலான நட்பு மீண்டும் துளிர்த்தது. இன்றுவரையிலும் அதை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்..” என்றார் மனோபாலா.

- Advertisement -

Read more

Local News