Friday, April 12, 2024

‘ஜகமே தந்திரம்’ படத்தில் வில்லத்தனம் காட்டியிருக்கும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை  Netflix கடந்த வாரம் வெளியிட்டது.

வெளியான நிமிடத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்தப் படத்தின் ட்ரெய்லர், இணையம் வழியே உலகம் முழுதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் லோக்கல் கேங்ஸ்டராக தனுஷ் நடிக்க, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் ஐஸ்வர்யா ல‌ஷ்மி, பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் மிரட்டும் கேங்ஸ்டர் சிவதாஸ்’ என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஜோஸப், ஜூன்’, ‘வைரஸ்’, ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’, ‘டிரான்ஸ்’, ‘ஒன்’, ‘ஆணும் பெண்ணும்’, சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றிருக்கும் ‘நாயாட்டு’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தனது மாறுபட்ட நடிப்பில் மலையாளத்தில் பெரும் புகழை குவித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜ், இந்த ஜகமே தந்திரம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் படம் வெளியாவதால் ஜோஜு ஜார்ஜ் பெரும் உற்சாகத்தில் உள்ளார்.

இது குறித்து ஜோஜு ஜார்ஜ் பேசும்போது, “நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மிகப் பெரிய விசிறி. பீட்சா’ படம் பார்த்துவிட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை. நான் மலையாளத்தில் பிரபலமாக தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இறுதியாக இப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை சந்தித்தேன். இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார் கார்த்திக்.

படத்தில் நான் ஏற்றிருப்பது மிகப் பெரிய கதாப்பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்துக் காட்ட சொன்னார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். எனக்கு தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். அவர் என்னை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். அந்த நிமிடமே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்னும் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தமிழ் ரசிகர்கள் என்னை மறக்கவியலாத வண்ணம் எனது திறமையைக் காட்டுவேன்..” என்கிறார் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்.

- Advertisement -

Read more

Local News