Thursday, April 11, 2024

லவ் டுடே – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்றைய 2-கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் காதல், மற்றும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. காதலில் நம்பிக்கைதான் முக்கியம் என்பதை செல்போன் பரிமாற்றத்தின் மூலமாக உணர்த்துகிறது இந்தப் படம்.

படத்தின் நாயகன் ப்ரதீப் ரங்கநாதனும், நாயகி இவனாவும் காதலர்கள். உருகி, உருகி காதலிக்கும் இவர்களின் காதலுக்கு ஓகே சொல்ல, இவானாவின் அப்பாவான சத்யராஜ் ஒரு வித்தியாசமான நிபந்தனையை விதிக்கிறார்.  

“உங்கள் காதலை நான் எதிர்க்கலை. ஆனால் நீங்கள் இருவரும் ஒரேயொரு நாள் உங்களின் மொபைல் போன்களை மாத்தி வைச்சுக்கணும். அந்த ஒரு நாள் முடிந்த பின்னும் உங்களுக்குள் இதேபோல் காதல் இருந்தால், நான் உங்கள் காதலை ஏற்றுக் கொள்கிறேன்” என்கிறார் சத்யராஜ்.

இதைக் கேட்டவுடன் ப்ரதீப், இவானா இருவருக்குள்ளும் பதட்டம் வருகிறது. ஏனென்றால் காதலர்கள் இருவருமே நாங்கள் ஒன்றுதான் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்குள்ளும்  தனித்தனி ரகசியங்கள் இருக்கின்றன. அது அவர்களின் மொபைல் மாற்றத்தால் வெட்டவெளிச்சமாகிறது.

இருவரும் மற்றவர் செல்போனை பயன்படுத்தத் தொடங்க, அதுவரை வெளியில் தெரியாத பல பூதங்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கிளம்பி, அவர்கள் காதலை புட்பால் ஆடி விடுகிறது.

இதன் பின்னர் இருவரும் நிறைய சண்டை போடுகிறார்கள். முடிவில் இவர்கள் இணைந்தார்களா… இல்லையா.. என்பதை இன்றைய தலைமுறையினர் கொண்டாடும் வகையில் ரசனையோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன்.

நாயகன் ப்ரதீப் ரங்கநாதன் தன் நடிப்பில் தனுஷ், பிரபுதேவா, எஸ்.ஜே.சூர்யா ஆகிய மூவரின் மேனரிசம், நடிப்பு இரண்டையும் கலந்து கொடுத்துள்ளார். காமெடி, காதல், எமோஷ்னல் என எல்லா ஏரியாவிலும் நடிப்பில் நல்ல கவனம் பெறுகிறார் பிரதீப். புதுமுக நடிகராக அவரது நடிப்பு எந்த வியப்பையும் ஏற்படுத்தவில்லை என்றபோதும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்க்கிறது.

நாயகி இவானா மிக அழகு. தன் கதாபாத்திரத்திறகு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆபாச வசனங்களைக்கூட கொஞ்சமும் சங்கடமில்லாமல் பேசி நடித்திருக்கிறார்.  ஒரு முக்கியமான போன் கான்வர்சேஷன் காட்சியில் கண் கலங்க வைக்கும்படி நடித்துள்ளார்.  

வேணு சாஸ்திரி கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் பக்காவாக பொருந்திப் போகிறார். வீணை வாசித்தபடியே பேசுவது, கறாரான தந்தையாகவும், அதேசமயம் எதிலும் பர்ஃபெக்‌ஷன் பார்க்கும் நபராகவும் குறைந்த நேரம் திரையில் தோன்றினாலும் ரசிக்க வைத்திருக்கிறார். வாட்டர் கேன் போடும் பையனிடம் ஒரு ரூபாய்க்காக அவர் செய்யும் ரவுசு, அசத்தல் காமெடி.

ப்ரதீப்பின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒட்டு மொத்தமாக எல்லோர் நடிப்பையும் ஓரங்கட்டி விடுகிறார். படத்தில்  அவர் பேசும் வசனங்கள்தான் படம் சொல்ல வரும் நீதி..!

யோகிபாபு என்ற காமெடி ப்ளஸ் குணச்சித்திர நடிகனை இந்தப் படத்தில் மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். காமெடியனாகத் தெரியும் யோகிபாபு, க்ளைமாக்ஸுக்கு முந்தையக் காட்சியில் மனதை உருக்கும்படி நடித்துள்ளார். ப்ரதீப்பின் அக்காவாக வரும் ரவீணாவும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

மேலும் ஹீரோவின் நண்பர்களாக நடித்த அனைவருமே நல்ல தேர்வு. குறிப்பாக ஆதித்யா கதிர் அடிக்கும் சில பன்ச் வசனங்களுக்குத் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே, இன்றைய இளைஞர்களின் பல்சை பதம் பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவும் படத்தை கூடுதல் எனர்ஜியாக்கியுள்ளது.

போன் பரிமாற்றம் என்ற சின்ன லைனை வைத்துக் கொண்டு காமெடி, எமோஷனல் என அழகாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர். உறவுகளுக்குள் முதல் தேவை நம்பிக்கைதான் என்பதை நச்சென்று சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதற்காக அவர் தனது முதல் படமான கோமாளி’ படத்தின் மையப் பொருளான செல்போனையே இந்தப் படத்திலும் ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தின் முதல் பாதி வழமையான காதல் காட்சிகள், காதல் பாடல்கள் என்றே நகர்கிறது. செல்போன்கள் கை மாறிய பின்புதான் திரைக்கதை வேகமெடுக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், டின்டர் போன்ற நவீன இளைஞர், இளைஞிகள் அதிகமாக வசித்து வரும் இத்தளங்களில் நிகழும் அத்துமீறல்கள் சில இடங்களில் காமெடியாகவும், பல இடங்களில் பயம் தரும் விதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன.

பிரதீப் – நிகிதா காதலை மட்டும் விவரிக்காமல், அதையொட்டியே பயணிக்கும் ரவீணா – யோகிபாபு கதையும் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த உதவுகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதையில் தடுமாற்றம் இருப்பதை உணர முடிகிறது. சில காமெடி காட்சிகள் கதையோட்டத்திற்கு கை கொடுக்கின்றன. என்றாலும், மேற்கொண்டு பலவும் ஆபாச வார்த்தைகளாகவும், முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் இருப்பதால் நம்மால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் படத்தில் இருக்கும் சில, பல ஆபாச வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

2-கே இளைஞர்களை மையப்படுத்தி, காதலுக்குள் நம்பிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்த ‘லவ் டுடே’ படம், நவீன காலக்கட்டத்தை காட்சிப்படுத்துவதாக சொல்லிவிட்டு நிறைய பழமைவாத, ஆணாதிக்க கருத்துக்களைப் போதிக்கிறது என்பதும் உண்மைதான்..!

மொத்தத்தில் படத்தின் மெயின் கதையை விட்டுவிட்டு எங்குமே தடம் மாறாமல் பயணிக்கும் இப்படத்தின் திரைக்கதைக்காகவும், படத்தின் முடிவில் சொல்லப்படும் ஒரு மெசேஜுக்காகவும் இப்படத்தைப் பார்க்கலாம்தான்..!

RATING :  3.5 / 5

- Advertisement -

Read more

Local News