தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அவர் கைதி 2 படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இதற்கிடையில், அவர் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை ஒட்டி, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு டிசி (DC) என பெயரிட்டுள்ளனர். மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்த வாமிகா கபி இதில் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது வெளியான முன்னோட்ட வீடியோவில், கையில் கத்தி பிடித்தபடி, வாயில் சிகரெட் வைத்துக் கொண்டு, முகத்தில் ரத்தக்கறையுடன் லோகேஷ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரமாக வருகிறார். அதேபோல், வாமிகா கபி பாலியல் தொழிலில் ஈடுபடும் ‘சந்திரா’ எனும் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களின் பெயர்களின் முதல் எழுத்துகளாகிய தேவதாஸ் – சந்திரா என்பதன் சுருக்கமாக டிசி (DC) என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க ஆக்ஷன் தளத்தில் உருவாகிறது.

