Friday, April 12, 2024

குட்டி ஸ்டோரி – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி.K.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

அந்தாலஜி வகையில் நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்ட திரைப்படம் இது. இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.

ஒரே திரைப்படத்தில் 4 இயக்குநர்கள் 4 கதைகளை இயக்குவது தமிழ்த் திரையுலகத்தில் இதுவே முதல் முறையாகும்.

கெளதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி என்ற நான்கு இயக்குநர்கள் இந்தப் படத்தில் இருக்கும் தொகுப்புகளை இயக்கியிருக்கிறார்கள்.

‘எதிர்பாரா முத்தம்’

முதல் கதையில் கெளதம் வாசுதேவ் மேனன் கல்யாணத்திற்கு முன்பு அமலாபாலுடன் தனக்கிருந்த நட்பு பற்றி நண்பர்களிடம் சொல்கிறார். அது நட்பு அல்ல.. காதல்தான் என்று நண்பர்கள் சொல்ல.. இல்லவே இல்லை.. அது வெறுமனே நட்புதான் என்று சாதிக்கிறார் கெளதம் மேனன்.

அந்த நண்பி அமலா பால் இப்போது கெளதம் மேனனைப் பார்க்க வருகிறார். சந்திக்கிறார். தான் டைவர்ஸி என்று சொல்கிறார். கெளதமிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார். அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்பதுதான் இந்தக் கதையின் மர்ம முடிச்சு.

இந்தக் கதையை கெளதம் மேனன் தனக்கே உரித்தான பாணியில் ஸ்டைலிஷ்ஷாக உருவாக்கியிருக்கிறார். நிறைய ஆங்கில வார்த்தைகளுடன் விளையாடியிருக்கிறார். பல முக்கியமான வசனங்களைக்கூட ஆங்கிலத்திலேயே சொல்லிவிட்டுப் போவதால் பார்வையாளர்களால் இந்தக் கதையில் ஒன்ற முடியவில்லை. இது மேட்டுக்குடித்தனமான காதலையும், நட்பையும் காட்டினாலும் கெளதம் மேனனின் டச் ஆங்காங்கே தெரிகிறது.

ரோபா சங்கர் டைமிங்காக பல காமெடிகளை வீசினாலும் மிக வேகமாக பேசப்படும் வசனங்களினால் எதற்கு சிரிக்கிறார்கள் என்பதே புரியாத அளவுக்கு போய்விட்டது. அமலா பால் அழகாக இருக்கிறார். நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. மிக சாதாரணமாக நடித்துவிட்டுப் போயிருக்கிறார். கெளதம் மேனனும் இதே போலத்தான்.

மொத்தத்தில் இந்த முதல் கதை பார்வையார்களை அதிகமாக ஈர்க்கவில்லை.

‘அவனும் நானும்’

இரண்டாவது கதையில் காதலர்களான மேகா ஆகாஷூம், அமீர் டாஸூம் ஒரு நாள் அத்து மீறுகிறார்கள். உறவு கொள்கிறார்கள். இது மேகா ஆகாஷை கர்ப்பமாக்குகிறது. அவரால் வெளியில் சொல்ல முடியவில்லை.

காதலன் அமீர் டாஸையும் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. அவனது போன் சுவிட்ச் ஆஃபில் இருக்கிறது. வேறு வழியில்லாமல் உடன் வேலை செய்யும் தோழியுடன் இணைந்து ஆஸ்பத்திரிக்கு விரைகிறார். அங்கே கருக் கலைப்பு செய்ய முனையும்போது அதே ஆஸ்பத்திரியில் அமீரின் குடும்பத்தினர் கதறலுடன் நிற்பதை பார்க்கிறார் மேகா.

மேகா தான் கர்ப்பம் என்று சொன்னவுடன் வேகமாக அவரைப் பார்க்க ஓடி வந்த அமீர் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் சொல்ல.. கருவைக் கலைக்க மறுத்துவிடுகிறார் மேகா.

குழந்தையும் பிறக்கிறது. ஆனால் பிறந்த குழந்தையை அனாதை ஆசிரமத்திற்குக் கொடுத்துவிட்டதாக அந்தத் தோழி சொல்கிறார். எல்லாம் நன்மைக்கே என்ற நினைப்பில் வீடு திரும்பும் மேகாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சி வீட்டில் காத்திருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.

ஒரு சிறுகதைக்கான தோற்றத்துடன் கொஞ்சம் பிசகாமல் அழகாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய். அழகான கதை.. அதைவிட அழகான திரைக்கதை. கச்சிதமான வசனங்கள். உயிர்ப்பான நடிப்பு.. மேகா ஆகாஷின் கண்களும், முகமுமே நடிப்பைக் கொட்டியிருக்கிறது. பாராட்டுக்கள்.

மேகா ஆகாஷின் பிறந்த நாளை கொண்டாடும் முஸ்தீபுகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கதை அருமை என்றே சொல்லலாம்.

‘லோகம்’

மூன்றாவது கதை வீடியோ கேம்ஸ் விளையாட்டில் முகம் தெரியாமல் விளையாடி வரும் ஒரு காதல் ஜோடியைப் பற்றியது.

வீடியோ கேம்ஸில் விளையாடும்போது அந்தப் பெண் தோல்வியடைந்து வெளியேற.. காதலர் மட்டுமே விளையாடி ஜெயிக்கிறார். தான் ஜெயித்த கதையை ஒரு எஃப்.எம். ரேடியோவுக்கு பேட்டியாகத் தருகிறார். இதனைக் கேட்டு எங்கயோ இருக்கும் அந்த முகம் தெரியாத காதலி எடுக்கும் முடிவுதான் கதையின் முடிச்சு.

புத்தம் புது கதையாக, புதுமையானவிதத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அந்தக் கதைக்காக அவர் எழுதியிருக்கும் திரைக்கதையும்.. அதை விஷூவலாக மாற்றிக் காட்டியிருப்பதும் பாராட்டுக்குரியது. மிகப் பெரிய பட்ஜெட்டை விழுங்கியிருக்கும் இந்தப் பகுதியை துணிந்து தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு இதற்காக தனிப் பாராட்டினைத் தெரிவிக்கிறோம்.

வீடியோ கேம்ஸில் இருந்த நாயகன், நாயகிக்காக இவர்கள் குரல் கொடுத்தபடியே இருக்க.. அது இவர்களின் மனதிலும் முகம் பார்க்காமலேயே இனம் புரியாத ஒரு உணர்வைக் கொடுத்திருப்பதை சில காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸில் சங்கீதா பேசும் அந்த ஒற்றை வசனமே காதலைக் காட்டுகிறது.

‘ஆடல் பாடல்’

நான்காவது கதை.. மனைவிக்குத் துரோகம் செய்யும் ஒரு கணவனின் நிலை எந்த அளவுக்குக் கீழே செல்கிறது என்பதைக் காட்டுகிறது.

விஜய் சேதுபதி தனது மனைவி, மகள், மாமனாருடன் வாழ்கிறார். ஆனாலும் மனிதருக்கு ஒரு இல்லீகல் காதல் உண்டு. ஒரு நாள் அந்தக் காதலி என்று நினைத்து தன் மனைவியிடமே பேசி விடுகிறார்.

உண்மையைக் கண்டுபிடிக்கும் மனைவியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கிறார். ஆனால் மனைவியோ “நான் நம்ம நிச்சயத்துக்கு முன்னாடியே ஒருத்தரோட வாழ்ந்துட்டேன். அதனால் என்னையும் நீங்க மன்னிச்சிருங்க…” என்று அணுகுண்டை வீசுகிறார்.

சராசரி ஆணாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியால் அதனை அத்தனை சுலபமாக ஏற்க முடியவில்லை. மனைவி சொல்வது உண்மையா.. பொய்யா என்பதை கடைசி அடிவரையிலும் தேடுகிறார். தேடலின் முடிவில் ஒரு உண்மையைக் கண்டறிகிறார். அது என்ன என்பதுதான் இந்தக் கதையின் முடிவு.

நான்கு குறும் படங்களிலேயே மிகச் சிறப்பான கதையும், படமாக்கலும், நடிப்பும் இந்தத் தொகுப்பில்தான் வாய்த்திருக்கிறது.

நலன் குமாரசாமியின் கதாபாத்திரத் தேர்வு பாராட்டுக்குரியது. விஜய் சேதுபதியும், அதிதி பாலனும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார். ஒரு சபலக்காரனின் புத்திக்கேற்ற நடிப்பைக் காட்டிவிட்டு மனைவியிடம் மாட்டிய அந்தத் தருணத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அக்மார்க் கிளாஸ். இதற்கு மேல் வெறென்ன செய்துவிட முடியும் என்பதாகவே அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.

இதேபோல் தனக்கு முன்பே மனைவியின் காதலனாக இருந்தவனைத் தேடியதாக மனைவியிடம் சொல்லி டார்ச்சர் செய்யும் காட்சியில் அத்தனை பதற்றத்தத்தைக் காட்டியிருக்கிறார், உண்மையான ஆணாதிக்கவாதியாக அந்தக் காட்சிகளில் தெரிகிறார் விஜய் சேதுபதி. தன்னுடைய உடல் மொழியைப் பயன்படுத்தி பல காட்சிகளில் நடிப்புத் திறனைக் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

“நீ மன்னிப்பு கேட்டா நான் மறந்திரணும். ஆனால், நான் கேட்டால் அதை உன்னால ஏத்துக்க முடியாதுல்ல…” என்று அதிதி கேட்கும் அந்தக் கேள்விதான் இன்று உலகம் முழுவதும் பல பெண்களால் கேட்கப்பட்டு வருகிறது. நலன் குமாரசாமியின் வசனங்களும் இந்தப் பகுதியை வெற்றியாக்க பெரும் உதவியிருக்கிறது.

அதிதி பாலனின் பல குளோஸப் காட்சிகள் அவர் எப்பேர்ப்பட்ட நடிகை என்பதையே காட்டுகிறது. அதிகப் படங்களில் நடித்து தனது திறமையை அவர் வெளிப்படுத்த வேண்டும். இத்தனை திறமையை வைத்துக் கொண்டு 2 வருடங்களுக்கு ஒரு படம் என்று கொடுப்பதெல்லாம் நியாயமற்ற செயல் என்பதை அவருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.

மொத்தத்தில் இத்திரைப்படம் முதல் பகுதியைத் தவிர மற்றவைகளில் ரசித்து பார்க்க முடிகிறது.

அனைத்துப் பகுதிகளிலும் ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, கலை இயக்கம் என்று அனைத்திலும் பெர்பெக்ட்டாக செய்திருக்கிறார்கள். ஆடல் பாடல்’ தொகுப்பில் அதிதி பாலனுக்கு உடை வடிவமைப்பு செய்த அனு வர்த்தனுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. சாதாரண உடைகளிலேயே ஒரு கவன ஈர்ப்பினை செய்ய முடியும் என்பதைச் செய்து காண்பித்திருக்கிறார் ஆடை வடிவமைப்பாளரான அனுவர்த்தன்.

இது போன்ற வியாபாரத்தை மனதில் வைக்காமல் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வர வேண்டும். காதலர்களின் வாரத்தில் மிகப் பொருத்தமான தருணத்தில்தான் இந்த பல்வேறு காதல்களைக் கொண்டாடும் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

ஒரு புதுமையான பல வகையான காதல் அனுபவங்களைக் காண விரும்புவர்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்தக் குட்டி ஸ்டோரி’..!

- Advertisement -

Read more

Local News