Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

’குடிமகான்’ திரைப்பட விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வங்கி ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் விஜய் சிவன், மது அருந்தாமலேயே போதையாகும் வினோத நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது குளிர்பானங்கள், துரித உணவு,  நொறுக்குத்தீனி போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டால் நாயகன் விஜய் சிவனுக்கு ஒரு ஃபுல் அடித்தது போல் போதை தலைக்கு ஏறிவிடும். 

மது அருந்தும் பழக்கம் இல்லாத விஜய் சிவன், இப்படி ஒரு அதிசயமான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதோடு, இதனால் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றில் மாட்டிக்கொள்ள, அதில் இருந்து எப்படி மீள்கிறார், என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘குடிமகான்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சிவன், அப்பாவியான குடும்ப தலைவனாகவும், மாத சம்பளத்தை நம்பியிருக்கும் நடுத்தர வர்க்கத்தினராகவும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நொறுக்குத்தீனிகளின் பிரியராக வலம் வருபவர் காமெடி காட்சிகளிலும், போதை தலைக்கு ஏறியவுடன் செய்யும் அலப்பறை காட்சிகளிலும் நச்சென்று நடித்து கைதட்டல் பெறுகிறார். முதல் படமாக இருந்தாலும் சோகம், மகிழ்ச்சி என அனைத்து பாவங்களையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருப்பதோடு, உடல் மொழியையும் மிக எளிமையாக வெளிக்காட்டி தனது கதாபாத்திரத்தை ரசிகர்களிடத்தில் எளிதாக கொண்டு சேர்த்துவிடுகிறார்.

விஜய் சிவனின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, நடுத்தர குடும்பத்து பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார். 

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, மது அருந்தினாலும் அலப்பறை செய்யாமல் இருக்க வேண்டும், என்று மகனுக்கு பாடம் எடுப்பது முதல், இரண்டாவது திருமணம் செய்வது வரை தனது பங்கிற்கு நகைச்சுவை ஏரியாவில் விளையாடியிருக்கிறார்.

குடிகார சங்கத்தின் தலைவராக வரும் நமோ நாராயணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஜி.ஆர்.கதிரவன், கே.பி.ஒய் ஆனஸ்ட்ராஜ் ஆகியோரது கூட்டணி இரண்டாம் பாதி படம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நம்மை குளுங்க குளுங்க சிரிக்க வைக்கிறார்கள். 

நமோ நாராயணின் கூட்டணி நகைச்சுவை காட்சிகள் சிரிப்பு சரவெடியாக வெடிக்க, இவர்களுடன் லவ்லி ஆனந்த், சேதுராமன்,  பாவாடை ராஜனாக நடித்திருக்கும் டென்னிஸ் ஆகியோர் சேர்ந்ததும் சிரிப்பு சரவெடி, சிரிப்பு அணுகுண்டாக மாறிவிடுகிறது.

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி இயல்பாக இருப்பதோடு, லைவான லொக்கேஷன்களில் காட்சிகளை படமாக்கி படத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்.

தனுஜ் மேனனின் இசையில் பாடல்கள் ஆட்டமும், தாளமும் போட வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும், காமெடி காட்சிகளுக்கு ஏற்றபடியும் அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஷிபு நீல்.பி.ஆர்,  முதல் பாதியை சற்று மெதுவாக தொகுத்திருந்தாலும், இரண்டாம் பாதியில் நடிகர்களின் ரியாக்‌ஷன்களையும், டைமிங்கையும் மிக கச்சிதமாக தொகுத்து காமெடி காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஸ்ரீகுமாரின் நகைச்சுவை எழுத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் பிரகாஷ்.என், நாயகனின் வினோதமான நோயை கையாண்ட விதமும், அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக நகர்த்திய விதமும் படத்தை ரசிக்க வைப்பதோடு, வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறது.

விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட ஹீரோவின் அலப்பறைகள் சில இடங்களில் செயற்கைத்தனமாக இருப்பதோடு, முதல் பாதி படம் மிக மெதுவாக நகர்ந்து நம்மை சலிப்படைய செய்தாலும், இரண்டாம் பாதியில் அப்படியே கதையை மாற்றி, காட்சிகளில் காமெடி டோசை ஓவராக கொடுத்து நம் சோர்வை எனர்ஜியாக மாற்றிவிடுகிறார் இயக்குநர் பிரகாஷ்.என்.  

படத்தில் சொல்லப்பட்ட கருவை நகைசுவையாக கையாண்டாலும், ஜங் ஃபுட் என்று சொல்லப்படும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது, உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவை விட மிக மோசமானது என்ற மெசஜை அறிவுரையாக இல்லாமல் ஜாலியாக சொல்லும் இந்த ‘குடிமகான்’ படத்தை பார்த்தால் மகிழ்ச்சியாக திரும்புவது உறுதி.

- Advertisement -

Read more

Local News