Friday, April 12, 2024

“உங்க இசையைவிடவும் வேகமா எழுதுவேன்…” – எம்.எஸ்.வி.யிடம் சொன்ன பிறைசூடன்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கும் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் தான் திரையுலகத்தில் நுழைந்த புதிதில் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அசட்டையாக நடந்து கொண்டதைப் பற்றி தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

“மக்கள் குரல் ராம்ஜி என்னை ஆனந்தி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர்கள் ‘சிறை’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆர்.சி.சக்திதான் இயக்குநர். அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசையமைப்பாளர்.

நான் அந்த அலுவலகத்தின் வரவேற்பறையில் கால், மேல் கால் போட்டுக் கொண்டு விறைப்பாக அமர்ந்திருந்தேன். ஆனந்தி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான மோகனும், நடராஜனும் ஆளுக்கொரு கவிஞரின் பெயரைச் சொல்லி “அவர்களைத்தான் பாட்டெழுத அழைக்க வேண்டும்” என்றார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனோ “புலவர் புலமைப்பித்தனை கூப்பிடுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார். எம்.எஸ்.வி. தத்தகாரமும், தந்தகாரமும் போட்டுக் கொண்டிருந்தார். அதுவே என்னவென்று எனக்கு அப்போது தெரியாது.

இந்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்துவிட்டானே என்பதால் எம்.எஸ்.வி.யின் முன்பாக என்னை அமர வைத்தார்கள். “வேகமா பாட்டெழுதுவீங்களா..?” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் என்னிடத்தில் கேட்டார். அப்போது எனக்கு பக்குவமில்லை. தகுதி, வயது பார்த்து பேசத் தெரியாது.. “உங்க இசையைவிடவும் வேகமாக எழுதுவேன்…” என்று பட்டென்று சொல்லிவிட்டேன்.

எம்.எஸ்.வி.யே இதை எதிர்பார்க்கவில்லை. ரசிக்கவில்லை. ஆனாலும் இசையை வாசித்துக் காட்டினார். நானும் உடனுக்குடன் பாடல் வரிகளைச் சொன்னேன். அந்தப் பாடல்தான் ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடல்.

அடுத்தடுத்து எம்.எஸ்.வி. ராகத்தைப் பாடிக் காட்ட வார்த்தைகளைக் கொட்டினேன். உடனேயே, “நாளைக்கு ஏவி.எம்.ல ரிக்கார்டிங் அங்க சரணத்தையெல்லாம் எழுதிட்டு வந்திருங்க…” என்றார் எம்.எஸ்.வி.

மறுநாள் காலையில் முதல் ஆளாக 6.30 மணிக்கெல்லாம் ஏவி.எம். ரிக்கார்டிங் தியேட்டருக்கு போய்விட்டேன். 8.30 மணிக்கு எம்.எஸ்.வி. வந்தார். பின்பு நான் சரணங்களை கொடுத்தவுடன் அதிலிருந்து சிலவற்றை அவர் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டார். அன்றைய பதிவில்கூட மின்சாரம் ரத்தாகி அபசகுனமாகிவிட்டது. ஆனாலும், மலேசியா வாசுதேவனும், வாணி ஜெயராமும் பாட எனது முதல் பாடல் அங்கே பதிவு செய்யப்பட்டது…” என்றார் கவிஞர் பிறைசூடன்.

- Advertisement -

Read more

Local News