Friday, April 12, 2024

‘கர்ணன்’ படத்தின் டைட்டில் 3-வது முறையாக மாற்றம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கர்ணன்’ படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த விமர்சனங்களைவிடவும், அரசியல் கட்சியினர் கொடுத்த அழுத்தங்களே இயக்குநர் மாரி செல்வராஜை தூங்க விடாமல் செய்துவிட்டது.

‘கர்ணன்’ படத்தில் ‘இது ‘1997-ம் வருடம் நடந்த கதை’ என்பதுபோல் சிலைடு போட்டு காட்டியிருந்தார்கள்.

ஆனால், படத்தில் இடம் பெற்றிருந்த கொடியன்குளம் கலவரம் 1995-ம் ஆண்டு அதிமுகவின் ஆட்சியின்போது நடைபெற்றது. அதே ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக தோற்று தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.

ஆக, படத்தில் இடம் பெற்றிருந்த 1997 என்பது தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் இருந்த காலம். இதனால் இந்தக் கொடுமைகள் நடந்தது அதிகமுக ஆட்சிதானே..? எங்களது ஆட்சிக் காலத்தை ஏன் சொல்ல வேண்டும் என்று திமுகவினர் மாரி செல்வராஜை சமூக வலைத்தளங்களில் கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

தி.மு.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின்கூட இதனை டிவீட்டரில் ஒரு செய்தியாகப் போட்டுவிட்டார். இதனால் அந்த ‘1997’ என்று இருந்த வருடத்தை ‘1990-களின் பிற்பகுதியில்’ என்று டைட்டிலில் மாற்றம் செய்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

இப்போது பிரச்சினை முடியும் என்று பார்த்தால் மேலும் தீவிரமானது. ‘1990-களின் பிற்பகுதி’ என்றால் அது நிச்சயமாக ‘1997’-ஐத்தான் குறிக்கிறது. மீண்டும் மாரி செல்வராஜ் திமுக ஆட்சியையே குறை சொல்கிறார். அவருக்கு ஏன் இந்த கொலை வெறி என்றெல்லாம் திமுக ஆதரவாளர்கள் திரும்பவும் மாரி செல்வராஜை தாக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இதனால் தற்போது மீண்டும் டைட்டிலை மாற்றியிருக்கிறார் மாரி செல்வராஜ். இப்போது ஆண்டையே குறிப்பிடாமல் படத்தின் தொடக்கத்தை சில வரிகளோடு ஆரம்பித்திருக்கிறார்.

‘’அடிப்படைத் தேவைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் சாமானிய மக்கள் உயிர்ப்போடு போராடத் தொடங்கிய காலகட்டம். சாட்சியாக பட்டாம்பூச்சி’’ என்கிற கார்டோடுதான் இப்போது கர்ணன்’ படம் தொடங்குகிறது.

இந்தப் படம் 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் என்பது அந்தக் காலக்கட்டத்தைப் பற்றி அறிந்தவர்கள் அனைவருக்குமே புரிந்துவிட்டது. தெரிந்துவிட்டது. படத்தின் கதைக் களமான அந்தக் கிராமத்தின் பெயரை பொடியன்குளம் என்று காட்டுவதில் இருந்தே இந்த உண்மை வெளியாகிவிட்டது. இனிமேல் இதை மூடி மறைக்க முடியாது.

ஆனால், இப்போது இயக்குநர் மாரி செல்வராஜ் மட்டும் இதனை ஏற்கவே மறுக்கிறார். “இதுவொரு கற்பனைக் கதை. சில சம்பவங்களை, வரலாற்றினை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். ஏதாவது ஒரு காலக்கட்டத்தை அந்தக் கதையின் தன்மைக்கேற்ப காட்ட வேண்டும் என்பதால்தான் அந்த வருடத்தை போட்டேன்…” என்று இப்போது சொல்கிறார்.

இது கொடியன்குளம் கலவரம் பற்றியதுதான் என்பதை தைரியமாக, வெளிப்படையாகச் சொல்ல மாரி செல்வராஜ்  ஏன் தயங்குகிறார்..? ஏன் பயப்படுகிறார்…? என்றே தெரியவில்லை.

இது போன்ற நடந்த சம்பவங்களை வரலாற்றாக பதிவு செய்ய முன் வந்தால் அவற்றை மிகச் சரியாகப் பதிவு செய்தாக வேண்டும். எவ்வளவு தைரியத்தோடு படத்தை உருவாக்குகிறீர்களோ… அதே அளவு தைரியத்தோடு வருகின்ற விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

இதை இயக்குநர் மாரி செல்வராஜ் புரிந்து கொண்டால் நல்லது..!

- Advertisement -

Read more

Local News