Thursday, April 11, 2024

காட்டேரி – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காட்டேரி’ என்றால் அனைவரும் இரத்தம் குடிக்கும் பேய் என்றுதான் நினைக்கிறோம்.  ஆனால் காட்டேரி’ என்பதற்கு பழைய தலைமுறையைச் சேர்ந்த மனிதர்கள், ‘மூதாதையர்கள்’ என்ற அர்த்தமும் உள்ளதாம்.

திருட்டுத் தொழில் செய்து வரும் நாயகன் வைபவ்வுக்கு திருமணமான நாளன்றே சோதனை வருகிறது. நைனா என்னும் டானிடம் வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார் வைபவ். அவரிடமிருந்து தப்பிக்க வேண்டி தங்கப் புதையலை தேடி சென்ற தங்களுடைய கூட்டாளி ஒருவனை தேடி, தனது நண்பர்கள் மற்றும் புது மனைவியுடன் பறக்கிறார் வைபவ்.

இவரது பயணம் கொடைக்கானல் அருகேயிருக்கும் பூம்பாறை கிராமத்தையும் கடந்து காடுகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு மலை கிராமத்தை சென்றடைகிறது. அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு அதிர்ச்சி இந்தத் திருடர் கூட்டணிக்குக் காத்திருக்கிறது.

அவர் தேடி வந்த கிராமத்தில் அனைவருமே ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்கள். இப்போது பேயாக அதே கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமல் இந்தத் திருடர் கூட்டம் வந்து அவர்களிடத்தில் சிக்கிக் கொள்கிறது.

கிராமத்தில் இருந்து தப்பிக்க நினைத்தாலும் வழியே கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். இதிலிருந்து வைபவ் தனது கூட்டாளிகளுடன் தப்பித்தாரா? இல்லையா..? தங்கப் புதையல் கிடைத்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

காமெடி பீஸான ரவுடிக் கும்பலின் தலைவராக வைபவ் நடித்திருக்கிறார். நகைச்சுவையைக் கையாள முடியவில்லை. அதேபோல் பயத்தையும் காட்ட முடியவில்லை. இயக்குநர் சொன்னதை அப்படியே செய்துவிட்டு தனது வேலையை நிறைவு செய்திருக்கிறார்.

இவரது மனைவியாக சோனம் பஜ்வா.. அழகில்லை. நடிப்பும் இல்லை. எப்படி இவரைத் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆத்மிகா மன நல மருத்துவராக நடித்திருக்கிறார். இவருக்கும் பெரிய நடிப்புக்கான ஸ்கோப் இல்லை.

பேய்களாக வந்து அட்டகாசம் செய்யும் வரலட்சுமியின் “நான் அழகா இருக்கேனா..?” டயலாக் மட்டுமே சற்று சுவாரஸ்யத்தைத் தருகிறது. அதேபோல் இவரது தங்கையான மணாலி ரத்தோரும் சில காட்சிகளில் முகத்தைக் காண்பித்திருக்கிறார்.

இவர்கள் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளை வைத்தே ஒரு முழு படத்தை எடுத்திருக்கலாம். அவ்வளவு ஸ்கோப் உள்ள கதையம்சம். ஆனால் இப்படியா அதை கொத்துக் கறி போடுவது..?

ஜான் விஜய்க்கு வழக்கம்போல ஸ்டைலான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். ‘மைம்’ கோபி, பொன்னம்பலம், ‘லொள்ளு சபா’ மனோகர், கருணாகரன், ரவி மரியா என்று பேய் படங்களுக்கே உரித்தான நடிகர்கள் இருந்தும் படத்தில் இயக்கம் என்ற ஒன்றே இல்லாததால் அனைவரும் வந்து போனதாகவே கணக்கில் வருகிறது.

ரவி மரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் வக்கிரமான உணர்வைக் காட்டுகிறது. ரவி மரியா தொடர்ந்து ஏன் இது போன்ற கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறார் என்பதும் புரியவில்லை. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் கேவலமாக இருக்கிறது.

பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவு ஓரளவு படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. 1960-ல் நடக்கும் கதைக்குப் பின்னணியில் ஒளிப்பதிவும் அழகாக நின்றுள்ளது.

பின்னணி இசையில் பயத்தைக் கூட்ட எத்தனித்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.என். பிரசாத். ஆனால் முடியவில்லை போலும். படத் தொகுப்பாளர் பிரவீன் இன்னும் கொஞ்சம் நறுக்கியிருக்கலாம். இது போன்ற பேய் படங்களில் படத் தொகுப்புதானே முக்கியம்.. இங்கே அது எங்கே என்று கேட்க வைத்திருக்கிறது.

யாமிருக்கே பயமேன்’ என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குரான இவர் என்ற சந்தேகத்தைக் கொடுக்கிறது இந்தப் படத்தின் மேக்கிங். இந்தக் ‘காட்டேரி’யில் கதை, திரைக்கதை, சஸ்பென்ஸ், திரில்லர், நகைச்சுவை என்று எதுவுமே கணக்கில் இல்லை..!

ஏற்கனவே பல முறை பார்த்துப் பார்த்து சலித்துப் போன ஒரு கதைக் களமென்றால், புதுமையான திரைக்கதையும், நடிகர்களின் அதகளமான நடிப்பும் இருந்திருக்க வேண்டும். ஆனால் பேய்களுக்கே பேய் பிடித்து ஓடியதைப் போல மொத்தப் பேய்களும் படத்தில் ஓடியிருப்பதால் படமும் அதே ஓட்டமாக ஓடிவிட்டது போலும்..!

காட்டேரி – நமக்கும் பிடித்துவிட்டது..!

RATING : 2 / 5

- Advertisement -

Read more

Local News