Thursday, April 11, 2024

காலங்களில் அவள் வசந்தம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காதல் கதைகள் அரிதாகி வரும் இன்றைய தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. கல்யாணத்திற்கு பிறகான காதலை சொல்லும் படம். அன்புதான் இந்தப் படத்தின் அடிப்படை கரு.

காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நாயகன், உண்மையான காதல் எது என்பதை கல்யாணத்துக்குப் பிறகு தெரிந்து கொள்வதுதான் இந்தப் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

ஆனால், இந்தக் காதல்,  கல்யாணத்திற்குப் பிறகு எப்படியெல்லாம் பிரிந்து, விரிந்து, பறந்து செல்கிறது என்பதை சுற்றி வளைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.

நாயகன் கெளசிக், பணக்கார வீட்டுப் பிள்ளைதான். ஆனால் காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். காதலிகள்தான் தங்க மறுக்கிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக காதலிகள் தப்பியோட கடைசியாக ஒரு காதலியுடன் பேசி ஓகே வாங்கி வைத்திருக்கிறார்.

இந்தச் சூழலில் அவரது அப்பாவின் நெருங்கிய நண்பரின் மகளான அஞ்சலி நாயருக்கு நாயகனைப் பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. ஏன்.. எதற்கு.. எப்படி. என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேட அவகாசம்கூட கிடைக்காமல் கல்யாணத்திற்கு ஓகே சொல்கிறார் நாயகன்.

கல்யாணம் முடிந்த பின்பு நாயகனுக்கு நாயகிக்குப் பிடித்தாற்போல் நடந்து கொள்வதில் குழப்பம்.. நாயகிக்கோ நாயகனுக்குப் பிடித்ததுபோல் நடந்து கொள்வதில் குழப்பம். இந்தக் குழப்பத்திற்கிடையில் பழைய காதலியும் தேடி வந்து நிற்க கிறுக்குப் பிள்ளை போலாகிறார் நாயகன்.

இதன் விளைவாய் நாயகி பிரிய.. நாயகன் தனிமையில் துவள.. கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

புதுமுகம் கௌசிக் ராம் ஹீரோவுக்கு ஏற்ற உடல்வாகுடன், அழகான ஹேர் ஸ்டைலுடன் ஹீரோ ஸ்டைலில் இருக்கிறார். ஒரு படித்த அப்பாவி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாக பொருந்துகிறார் கெளசிக்.

நடிப்பில்கூட அப்பாவித்தனத்தையும், அசமஞ்சத்தனத்தையும் ஒன்றாகவே கொடுத்திருக்கிறார். மனைவியிடமும், காதலியிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவனாக இவர் படும் பாடு ரகளையானதுதான்.

‘பப்பாளி’, ‘ஐஸ்கட்டி’ என்று மனைவிக்கும், காதலிக்கும் பட்டப் பெயர் வைத்து அழைப்பதிலும் வண்ணத்துப் பூச்சியை வைத்து காதல் ரசனையை வெளிப்படுத்துவதிலும் கொஞ்சம் ‘ஏ’ கிளாஸ் ரசனையைத் தொட்டுப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.

நாயகி அஞ்சலி நாயர் இதுவரையிலும் நடித்திராத ஒரு கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவருடைய அழகினால், இவர் வரும் காட்சிகளில் ஸ்கிரீனைவிட்டு நகர மறுக்கின்றன நமது கண்களை.

கணவன் ஒரு மண்டுவாக இருந்தாலும் இப்படிப்பட்டவன்தான் தனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக அவனைக் கல்யாணம் செய்து கொள்வதிலும், கல்யாணமான பிறகு அவனை தனக்கானவனாக ஆக்க முடியாமல் தவிப்பதிலும் தனது நடிப்பை செவ்வனே காட்டியிருக்கிறார் அஞ்சலி நாயர்.

இன்னொரு நாயகியான ஹீரோஷினி பார்க்க சின்னப் பொண்ணாக.. சின்னப் பிள்ளை மாதிரியே நடித்து நமது அனுதாபத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

கௌசிக்கின் அப்பா மேத்யூ மகனின் குணமறிந்து திருமணத்திற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்து பின்பு பிரச்சினையைத் தீர்க்க முயலும் வித்தியாசமான அப்பாவாக நடித்திருக்கிறார்.  கௌசிக்கின் அம்மாவாக வரும் ஜெயா சுவாமிநாதனின் சராசரி அம்மா கேரக்டர் சுவாரஸ்யமானது.

நண்பனாக வரும் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் தனது சொந்த அனுபவத்தை வைத்து பெண்களின் ஜாதகத்தைச் சொல்லும் காட்சியில் சிரிப்பலைதான். அலுவலக தோழியாக வரும் அனிதா சம்பத்துக்கு பெரிய வேலை இல்லை.

படத்தில் குறிப்பிடத்தக்கது ஒளிப்பதிவுதான். முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஸ்கிரீன் முழுவதும் கலர், கலராக காட்டுகிறார் ஒளிப்பதிவாளர். மழை காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகைக் கொட்டியிருக்கிறார்கள். ஹரி எஸ்.ஆரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை தேவைப்படவே இல்லை.

படத்தில் இருக்கும் பெரிய பிரச்சினையே ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுற்றி திரைக்கதை வருவதுதான். இதுவே ஒரு கட்டத்துக்கு மேல் நமக்கு அலுப்பைத் தருகிறது. போதாக்குறைக்கு திரைக்கதையை நகர்த்தும் வசனங்கள் அனைத்தும் புரியாத, பூடக மொழியில், இன்டலெக்ச்சுவலாக சொற்பொழிவாற்றுவதுபோல பேசியிருப்பதும் நம்மை மிகவும் களைத்துப் போக வைக்கிறது.

இந்த வசனங்களை மால் தியேட்டரில் படம் பார்ப்பவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாது. மற்றைய தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் கதி..?

காலங்களில் அவள் வசந்தம் – கலைகளிலே இது கோட்டோவியம்..!

- Advertisement -

Read more

Local News