Friday, April 12, 2024

2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2019-ம் ஆண்டு வெளியான ‘ஜல்லிக்கட்டு’ என்ற மலையாளத் திரைப்படம் 2019-ம் ஆண்டுக்கான ‘ஆஸ்கர் விருது’களில் ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட’த்திற்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகுதியைப் பெறும் மூன்றாவது மலையாளத் திரைப்படம் இதுவாகும். ஏற்கெனவே 1997-ம் ஆண்டு ராஜீவ் அஞ்சல் இயக்கிய ‘குரு’ என்ற திரைப்படமும், 2011-ம் ஆண்டு சலீம் முகம்மது இயக்கிய ‘ஆதாமிண்டே மகன் அபு’ என்ற திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் சென்ற ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி வெளியாகி உலகமெங்கும் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தில் அந்தோணி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சுபுமோன் அப்துசமத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

எஸ்.ஹரீஸ் என்பவர் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்னும் சிறுகதையைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

கேரளாவின் உள்ளடங்கிய ஒரு பிரதேசத்தில் பூமாலை என்ற சிற்றூரில் இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட ஒரு எருமை மாடு, திடீரென்று யாருக்கும் அடங்காமல் ஊருக்குள்ளேயே ஓடத் துவங்க.. ஒட்டு மொத்த ஊரும் அதை எப்படி ஒன்றிணைந்து பிடிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதற்கிடையில் அந்த ஊரில் இருக்கும் முக்கியமான சில குடும்பத்தினரின் கதையும் திரைக்கதையில் சேர்ந்து பயணிக்கும்.

விறுவிறுப்பான திரைக்கதையிலும், கவனிக்கத்தக்க நடிப்பாலும், அற்புதமான இயக்கத்தாலும் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த இத்திரைப்படத்திற்கு கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றுக் கொடு்த்தது.

தற்போது சென்ற வருடத்திற்கான ‘ஆஸ்கர் விருதுப் போட்டி’யில் ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட’த்திற்கான விருதுக்கு இந்தியாவின் சார்பில் இந்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் போட்டியிடப் போகிறது என்பது மிகவும் பெருமையான விஷயமாகும்.

இதுவரையிலும் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு 52 முறை இந்தியத் திரைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் 53-வது திரைப்படமாகும்.

‘ஆஸ்கர் விருது போட்டி’யின் நிபந்தனையின்படி ஒவ்வொரு நாடும் தன்னுடைய நாட்டில் இருந்து ஒரேயொரு திரைப்படத்தை மட்டுமே அனுப்பி வைக்க முடியும். அப்படி வந்து சேரும் திரைப்படங்களில் இருந்து சிறந்த 5 திரைப்படங்களை மட்டுமே போட்டிக்காகத் தேர்வு செய்வார்கள்.

அதன் பின்பு அந்த 5 திரைப்படங்களில் இருந்து மிகச் சிறந்த திரைப்படமாக ஒன்றை தேர்வு செய்வார்கள். இதுதான் நடைமுறை.

இதுவரையிலும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட திரைப்படங்களில் 1953-ல் அனுப்பப்பட்ட ‘மதர் இந்தியா’ திரைப்படமும், 1988-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ‘சலாம் பாம்பே’ திரைப்படமும், 2001-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ‘லகான்’ திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றன. ஆனாலும் விருது கிடைக்கவில்லை.

இந்த ‘ஜல்லிக்கட்டு’ படத்துக்குக் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வருடாவருடம் பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெறும் ஆஸ்கர் பரிசளிப்பு விழா இந்தாண்டு கொரோனா நோய் பரவலால் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த விழா 2021 ஏப்ரல் 25-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

- Advertisement -

Read more

Local News