Friday, April 12, 2024

“ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று “தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார்.

சிம்புவும் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார் சிம்பு.

இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு ஜனநாயக முறைப்படி இல்லாமல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் சிலர் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

சிலம்பரசனை வைத்து ‘அன்பானவன், அசராவதவன், அடங்காதவன்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எந்தப் பணமும் கொடுக்க வேண்டியதில்லை. சிம்பு அந்தப் படத்தில் தனக்கு வர வேண்டிய சம்பளத்தைக்கூட விட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு நடிக்கும் எந்த படத்தையும் வெளி வரவிடாமல் ரெட்கார்டு போட்டு வருகிறார். அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மறைமுகமாக உதவி வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அருள்பதி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான முரளி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய டி.ராஜேந்தர், “தமிழ் சினிமாவில் சிலர் ஜனநாயகத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு பணம் கொடுக்க தேவையில்லை. மேலும் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் அருள்பதி, மைக்கேல் ராயப்பனுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி, ராதாகிருஷ்ணன், மன்னன், சந்துரு பிரகாஷ் ஜெய்ன், கதிரேசன், தினேஷ் ஆகியோர் மறைமுகமாக உதவுகின்றனர்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. இதனால் பல சினிமா கலைஞர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். இந்தக் கட்டப் பஞ்சாயத்து கும்பல் மீதும், ரெட் கார்டு போடும் கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

இது மாதிரியான கட்டப் பஞ்சாயத்து கும்பலை களையெடுக்க ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விசாரணை ஆணையம் ஏன் கிடப்பில் உள்ளது..? இந்தக் கட்ட பஞ்சாயத்து கும்பல் நீதிமன்றம் மற்றும் எந்த சட்ட திட்டங்களையும் கண்டு கொள்வதில்லை.

நான், சிம்புவுக்காக மட்டும் பேசவில்லை. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. இந்தப் பிரச்சினையை இத்தோடு விடப் போவதில்லை. டெல்லிவரை கொண்டு போய் சேர்க்க உள்ளேன்.

சிம்புவின் மாநாடு’ படத்தை தீபாவளியன்று வரவிடாமல் தடுத்தால், நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறேன்…” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News