Friday, April 12, 2024

“இந்தப் படத்தில் நான் சம்பளம் பெறவில்லை” – விஜய் சேதுபதியின் தன்னடக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட்  பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’.

இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

வரும் செப்டம்பர் 9-ம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது.

இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குநர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறைந்த இயக்குநர் எஸ் பி ஜனநாதனின் உதவியாளரான ஆலயமணி விழாவிற்கு வருகைத்தந்தவர்களை நெகழ்ச்சியுடன் வரவேற்றார். முன்னதாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில், “ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நான் வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் S.P.ஜனநாதன் ஸாரை சந்தித்தது முதல் அவரது மறைவு வரையிலான இந்தக் காலகட்டம் என்னால் மறக்க முடியாது.

அவருக்கும் எனக்கும் இடையிலான உறவையும் வார்த்தைகளால் குறிப்பிட இயலாது. அவரின் மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

எனக்கும் அவருக்குமான உறவு தந்தை-மகன் போன்றதொரு உறவு. அருகில் இருக்கும் பொழுது அதன் அருமை தெரியாது. தூரத்திலிருந்து நான் அவரை நேசித்துக் கொண்டே இருந்தேன். காலம் எப்படி படு பாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரைப் பற்றி தெரிந்திருந்தால்… புரிந்து கொண்டிருந்தால்.. அவருடன் நிறைய நேரம் செலவிட்டிருப்பேன்.

அவருடன் நன்றாக பழகத் தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் அதிகமாக அன்பு பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும் என தற்போது நினைக்கிறேன். சில நேரங்களில் மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதை பயன்படுத்தி இருக்கலாம். நான் அதை தவற விட்டிருக்கிறேன்.

இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் முழு பொறுப்பும் தலைவர் ஜனநாதனையே சேரும்.

இங்கு பேசும்பொழுது செல்வமணி ஸார், “ஜனநாதனின் தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய கதையை படமாக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், என்னுடைய அனுபவத்தின்படி ஜனநாதன் ஒரு கதையை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி மாற்றி யோசித்து எழுதக் கூடிய படைப்பாளி. ஒவ்வொரு படத்திலும் பெரும் மாற்றங்களை செய்து கொண்டே இருப்பார். படத்திற்காக உழைத்துக் கொண்டே இருப்பார். புதிய புதிய செய்திகளை தெரிந்து கொண்டு அதனை படைப்பில் இணைத்துக் கொண்டே செல்வார். அதனால் அவர் எழுதிய தஞ்சாவூர் கோயில் பற்றிய கதையை படமாக்குவதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.

ஏனென்றால் அவர் பணியாற்றும் ஸ்டைல் எனக்கு தெரியும்.. தினமும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அதனால் இதுதான் கிளைமாக்ஸ்… இதுதான் இடைவேளை காட்சி… இதுதான் வசனம்… என்று எந்த வரையறையும் அவரிடம் இருக்காது. அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். படப்பிடிப்பில் ஒரு வசனம் பேசியிருப்போம். அதனை பின்னணி பேசும் பொழுது மாற்றி பேச வைத்து காட்சியின் சுவையை மேம்படுத்தியிருப்பார். அதனால் அவரை எளிதில் கணிக்க முடியாது.

இதுவரை நான் நான்கு படங்களை தயாரித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் பட்ஜெட் என்ன என்று எனக்கு தெரியாது. அதைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் இல்லை. ஏனெனில், அதை தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டினால், என்னுள் இருக்கும் கலை இறந்துவிடும் என்ற பயம் எனக்குள் இருக்கிறது. இது என்னுடைய சொந்தப் பிரச்சனை. இதனால் பண வரவு விஷயத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ளலாம். ஆனால், தொழில் பலவீனம் அடைந்தால்.. என்னால் தாங்கிக் கொள்ளவே இயலாது. அத்துடன் என்னால் ஒருபோதும் என்னை இழக்க முடியாது.

என்னுடன் என்னுடைய பள்ளிக் கூடத் தோழன் சந்திரசேகர் இருக்கிறார். அவர்களிடம் இந்த பொறுப்பை விட்டு விடுகிறேன். இந்தப் படத்தில் நான் சம்பளமாக எதையும் பெறவில்லை. எடுக்கவும் இல்லை.

இந்த திரைப்படம் நல்லபடியாக  வெளியாக வேண்டும். என்னுடைய தாய் தந்தையர், தாத்தா பாட்டி போன்றவர்கள் செய்த புண்ணியத்தால் ‘லாபம்’ படத்தில், ஜனநாதன் சார் இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

திரைப்படம் என்பது சாதாரண பொழுது போக்குக்காக மட்டுமல்ல, அது அதையும் கடந்து ஏதேனும் ஒரு பாதிப்பை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது.  மக்கள் சிந்திக்க வேண்டியவற்றை பிரதானமாக எடுத்துச் சொல்வது கலை வடிவங்கள்தான். ஒரு நகைச்சுவை காட்சி கூட ரசிகர்களை யோசிக்க வைக்கும். அதனால் கலையை சாதாரண பொழுது போக்கு அம்சம் என்ற கோணத்தில் மட்டும் அணுகாதீர்கள்.

ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள். அதிலிருக்கும் எந்த சிந்தனை சிறந்தது? எது பலவீனமாக இருக்கிறது? என்பதை உணர்ந்து, திறனாய்வு செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

ஒரு விஷயத்தை குறை சொல்வதன் மூலமாக நம்மை நாமே புத்திசாலிகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒருவரை குறை சொன்னால் நான் புத்திசாலி ஆகி விடுகிறேன். கலை மனிதனை சிந்திக்க வைக்கிறது அதனால்தான் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

அனைத்தையும் கடந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி. இது ‘லாபம்’ படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.

திரைத் தொழில் என்பது பல லட்சம் குடும்பங்களின் உழைப்பை உள்ளடக்கியது. இவர்களின் அனைவரின் சார்பாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வருக! வருக! என மனமார வரவேற்கிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News