தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, தற்போது முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார். அவரது கேரியரில் மிக முக்கியமான படமாகக் கருதப்படும் வடசென்னை (2018) படத்தை வெற்றிமாறன் இயக்கினார். இதில் அமீரின் மனைவியான சந்திரா கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். கணவரை கொன்றவர்களிடம் பழிவாங்கும் நோக்குடன் வாழும் பெண்ணின் வலிமையும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தன் பக்கம் திசை திருப்பிக் கொள்வதும் ஆகியவற்றை ஆண்ட்ரியா சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பெருமளவு பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில், ஆண்ட்ரியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதில் அவர், வடசென்னை படத்தில் நான் நடித்த ‘சந்திரா’ கதாபாத்திரத்துக்குப் பிறகு எனக்கு எந்தப் பட வாய்ப்புகளும் வரவில்லை. பாராட்டுகள் மட்டும் கிடைத்தது. ஏனென்றால் என்னை வைத்து என்ன செய்யலாம் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. உண்மையில் நிறைய நடிகர்கள், தங்களது படங்களில் பவர்புல் பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
தற்போது ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்திலும், நடிகர் கவினுடன் இணைந்து மாஸ்க் திரைப்படத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

