Friday, April 12, 2024

‘தொட்டா சிணுங்கி’ ஹிந்தி ரீமேக்கில் மிதுன் சக்கரவர்த்தியை ஏமாற்றிய மாதுரி தீட்சித்-ஷாருக்கான் ஜோடி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1995-ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.அதியமானின் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் ‘தொட்டா சிணுங்கி’.

இந்தப் படத்தில் கார்த்திக், ரகுவரன், ரேவதி, தேவயானி மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் வெற்றி பெற்றதோடு, சிறந்த வசனத்திற்கான மாநில அரசின் விருதையும் பெற்றது.

இத்திரைப்படமே 2002-ம் ஆண்டு ஹிந்தியில் ‘Hum Tumhare Hain Sanam’ என்ற பெயரில் வெளியானது. இந்த ஹிந்தி திரைப்படத்தில் சல்மான்கான், ஷாரூக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் என்று பாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.

தான் இயக்கிய இரண்டாவது படத்தையே ஹிந்திக்குக் கொண்டு சென்று அதுவும் மிகப் பெரிய டாப் ஸ்டார்களை வைத்து படமாக்கிய அனுபவத்தை இயக்குநர் கே.எஸ்.அதியமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அந்த அனுபவத்தை வைத்தே இன்னொரு சினிமாவாக எடுக்கலாம் போலிருக்கிறது. அப்படியொரு 7 ஆண்டு கால திரில்லர் கதைபோல உள்ளது இந்த ஹிந்தி திரைப்படம் உருவான கதை.

இயக்குநர் கே.எஸ்.அதியமான் இது பற்றிப் பேசும்போது, “தொட்டா சிணுங்கி’ படம் ரிலீஸாகி சில நாட்கள் கழித்து ஒருவர் என்னுடைய அறைக்கு வந்து என்னை சந்தித்தார். ஒரு ஹிந்தி தயாரிப்பாளர் என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்.

நானும் என்ன விஷயம் என்று தெரியாமலேயே அந்த ஹிந்தித் தயாரிப்பாளரை சந்திக்கச் சென்றேன். போன பின்புதான் தெரிந்தது. அவர் அப்போதைய பாலிவுட்டின் டாப் தயாரிப்பாளரான கே.சி.பொக்காடியா என்று..!

பொக்காடியா என்னிடம் ‘தொட்டா சிணுங்கி’ படத்தை தான் ஹிந்தியில் படமாக்க விரும்புவதாகக் கூறினார். “அதனை நீங்களே இயக்கிக் கொடுங்கள்…” என்றும் கேட்டுக் கொண்டார். நானும் வரும் வாய்ப்பை விடக் கூடாதே என்பதற்காக ஒத்துக் கொண்டேன்.

பொக்காடியாவுக்கு அப்போது மிதுன் சக்கரவர்த்தி மிக நெருங்கிய நண்பர். அதனால் “மிதுனை அழைத்து இந்தப் படத்தை முதலில் போட்டுக் காட்டுவோம். பின்பு பேசுவோம்” என்றார். நானும் ஒத்துக் கொண்டு சில நாட்கள் கழித்து மும்பைக்குச் சென்றேன்.

மிதுன் சக்கரவர்த்தி ‘தொட்டாசிணுங்கி’ படத்தை பார்த்துவிட்டு, ரேவதி கதாபாத்திரத்தில் ‘மாதுரி தீட்சித் நடித்தால் சூப்பராக இருக்கும். மாதுரிக்கு படத்தை போட்டுக் காட்டுங்கள். நானும், அவரும் நடிக்கிறோம்..” என்றார்.

உடனே மாதுரி தீட்சித்திற்காக ஒரு ப்ரிவியூ ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. மாதுரியும் வந்து படத்தைப் பார்த்தார். படம் அவருக்கும் பிடித்துவிட்டது. படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன் மாதிரி “யார் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது..?” என்று கேட்டார்.

அப்போது தயாரிப்பாளர் பொக்காடியா “மிதுன் சக்கரவர்த்திதான் உங்களை ரெபர் செய்தார்” என்பதை மாதுரியிடம் சொல்லாமல், “இந்த படத்தில் யார் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும்..? நீங்களே சொல்லுங்கள்” என்று மாதுரியிடமே திருப்பிக் கேட்டார். உடனேயே மாதுரி எதையும் யோசிக்காமல்.. “அப்கோர்ஸ் ஷாருக்குதான்” என்றார். இதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியாகிவிட்டோம்.

நாம் மிதுன் சக்கரவர்த்திகிட்ட பேசி வைத்திருக்கிறோம். ஆனால் மாதுரி அவரைவிடவும் பெரிய ஸ்டாரை சொல்கிறாரே..?’ என்று நாங்கள் திகைத்துப் போய் நின்றபோது, மாதுரி, “டோண்ட் ஒர்ரி. நான் ஷாரூக்கிட்ட பேசி அப்பாயின்மென்ட் வாங்கித் தர்றேன்.. நீங்க அவருக்கு படத்தை போட்டு காட்டுங்க. அவர் நடித்தால்தான் இந்த படம் நல்லா இருக்கும்..” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அப்பொழுது ஷாருக்கான் ஹிந்தியில் மிக, மிக டாப்பில் இருந்த ஒரு நடிகர். மிதுன் சக்கரவர்த்தி இருக்கும் உயரத்தை கம்பேர் செய்தால் ஷாருக்கான் இருக்கும் இடம் மிகப் பெரியது.

“சரி… மாதுரி தீட்சித்தே சொல்லிவிட்டாரே” என்று ஷாருக்கானை தொடர்பு கொண்டு தயாரிப்பாளர் இது பற்றிக் கூறினார். மாதுரியே சொல்லியிருக்கிறார் என்றவுடன் ஷாருக்கும் படத்தை பார்க்க ஒப்புக் கொண்டு வந்து படத்தைப் பார்த்தார்.

ஷாருக்கானுக்கும் படம் மிகவும் பிடித்துப் போய்விட்டது.  “நான் நடிக்கிறேன்…” என்று சொன்னவர் “இன்னொரு கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கப் போகிறீர்கள்..?” என்று கேட்டார். தயாரிப்பாளர் வழக்கம்போல “நீங்களே சொல்லுங்களேன்..” என்று சொல்ல.. “நானே பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு ஒரு நபராக அந்த கேரக்டர் இருக்கு. அப்படீன்னா அந்தக் கேரக்டரை சல்மான்கான் செய்தால்தான் சரியாக இருக்கும்…” என்றார்.

எனக்கும், தயாரிப்பாளருக்கும் கூடுதலாக ஷாக் அடித்தது. ஏனென்றால் ஷாருக் பாலிவுட்டில் அன்றைக்கு எப்படியோ, அதே போல் அவருக்கு இணையா புகழிலும், ரசிகர்கள் அளவிலும் பிரபலமாக இருந்தவர் சல்மான்கான்.

தயாரிப்பாளர் எதுவும் பேசாமல் இருக்க.. “நானே சல்மானிடம் பேசி அப்பாயின்மென்ட் வாங்கி தருகிறேன். அவருக்குப் படத்தைப் போட்டு காட்டுங்கள். நிச்சயமாக அவர் ஒத்துக் கொள்வார்..” என்று ஷாரூக் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அடுத்த சில நாட்களில் சல்மான்கானுக்கும் படத்தை போட்டுக் காட்டினோம். அவருக்கும் படம் பிடித்துவிட்டது. “நான் இந்தப் படத்துல இந்தக் கேரக்டர்ல நடிக்கிறேன்..” என்று வாக்குறுதியளித்தார்.  கூடவே, “தேவயானி கேரக்டருக்கு யாரை போடப் போறீங்க..?” என்றார். வழக்கம்போல தயாரிப்பாளர் கம்மென்று இருக்க.. சல்மானே, “ஐஸ்வர்யா ராயை போடுங்கள். கச்சிதமா இருக்கும். நான் அவரை புக் செய்து தர்றேன்..” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அப்போது சல்மான்கானுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் காதல் ஓடிக் கொண்டிருந்த காலக்கட்டம். சல்மான்கான் நடிக்கிறார் என்றவுடன் ஐஸ்வர்யா ராயும் அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இப்படித்தான் இந்த ஹிந்தி படத்தின் கேரக்டருக்கேற்ற நடிகர்கள் தானாகவே வந்து மாட்டினார்கள்.

ஆனால் படத்தின் தயாரிப்பில்தான் மிகப் பெரிய இழுபறியாகி கடைசியில் 5 வருட தயாரிப்பாகி 2002-ம் ஆண்டுதான் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது.

இந்தப் படத்திற்கு பைனான்ஸ் செய்திருந்தவர் பிரபல வைர வியாபாரியும், பாலிவுட்டின் பைனான்சியருமான பரத் ஷா. இந்தப் படம் துவங்கியவுடன் அவர் ஒரு வழக்கில் கைதாகி சிறைக்குச் செல்ல இந்தப் படம் அப்படியே முடங்கிப் போனது.

பரத் ஷா சிறையிலிருந்து வெளியில் வந்த பின்பே இந்தப் படம் மீண்டும் துவங்கியது. இடையில் இந்தப் படத்திற்காகக் கொடுத்திருந்த கால்ஷீட்டுகள் வீண் ஆனதால் அந்த நால்வரிடமும் கால்ஷீட் பெற்று இயக்குவதற்குள் எனக்குப் போதும், போதுமென்றாகிவிட்டது.

இந்தப் படம் வெளி வருவதற்குள் நான் மேலும் 2 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிவிட்டேன் என்று சுவையான விஷயம்.

ஆனால், இது எனக்கு ஒரு புத்தம் புது அனுபவத்தைக் கொடுத்தது. ‘ஒரு திரைப்படம் தனக்கான கதை மாந்தர்களை தானே தேர்வு செய்து கொள்ளும்’ என்பார்கள். அது என் விஷயத்தில் இந்தப் படத்தில் உண்மையாகவே நடந்தது..” என்றார் இயக்குநர் கே.எஸ்.அதியமான்.

- Advertisement -

Read more

Local News