விடாமுயற்சி படம், Breakdown என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் ஆகும். அஜித், வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், “என்ன ஆச்சு?” என்ற வசனத்துடன் திரையில் தோன்றினாலும், அடுத்த சில காட்சிகளில் இளமையாக காட்சியளிக்கிறார். திரிஷாவிடம் அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில், காதல் ததும்ப நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், அவர் கடத்தப்பட்ட பிறகு, பதட்டத்துடன் மனைவியை தேடும் கணவனாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதன் பின்னர், மனைவிக்காக வில்லன்களை எதிர்க்கும் காட்சிகளில், அவர் முற்றிலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறி விடுகிறார்.
குறிப்பாக, அஜர்பைஜான் பாலைவன சாலையில், அஜித் ஓட்டும் கார் ஓடுவதற்கு பதிலாக பறப்பது போல் தோன்றுகிறது. அவர் கார் ரேசர் என்பதால், இந்த காட்சிகள் மிகவும் நம்பகமாக அமைந்துள்ளன. திரிஷாவுக்கு, படத்தில் அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும், மனதில் பதியும் வகையில் சிறப்பாக நடித்துள்ளார். திரையில் அழகுப் பதுமையாக தெரிகிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155279-683x1024.jpg)
வில்லத்தனம் கலந்த ஜோடியாக, அர்ஜுன் மற்றும் ரெஜினா மிரட்டியுள்ளனர். அதேபோல், ஆரவ் கூட, அவர்களுக்கு போட்டி போட்டு நடித்துள்ளார். குறிப்பாக, அஜித்துடன் காரில் சண்டை போடும் காட்சிகளில் சிறப்பாக நடித்து உள்ளார். இவர்களைத் தவிர, ரவி ராகவேந்திரா, ஜீவா ரவி, ரம்யா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
அனிருத் இசையில், பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் அவர் மிரட்டியிருக்கிறார். அதோடு, அஜித் வரும் காட்சிகளில் BGM வேறு லெவலில் அமைந்துள்ளது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், அஜர்பைஜான் மிக அழகாக தெரிகிறது. பல ஆக்ஷன் காட்சிகள், ஹாலிவுட் தரத்தில் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.
அஜித் போன்ற பெரிய ஹீரோக்கள் உள்ள படம் என்றால், ஒரு மாஸ் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இயல்பே. ஆனால், இயக்குநர் மகிழ் திருமேனி, அப்படியே மாஸ் படத்தை கொடுக்காமல், ஹாலிவுட் படத்திலிருந்து தழுவி, அதில் அஜித்தை நடிக்க வைத்துள்ளார். இந்த படத்திலும், தனது வழக்கமான ஸ்டைலில் பின்பற்றியிருக்கிறார். அஜித்தை வெறும் மாஸ் ஹீரோவாக மட்டும் காட்டாமல், ஆக்ஷன் கலந்த எமோஷன் ஹீரோவாக திரையில் காண்பித்துள்ளார்.
அஜித்தின் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள், படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளன. முதல் பாதி மெதுவாக சென்றாலும், ரசிக்க வைத்துள்ளது. ஆனால், இரண்டாம் பாதியில் வேகம் எடுத்தாலும், சற்றே சாதாரணமாகவே அமைந்துள்ளது. மொத்தத்தில், இரண்டு வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு, விடாமுயற்சி உண்மையான விருந்து தான்!