கிங்ஸ்டன் – தூத்துக்குடி அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தில், பல ஆண்டுகளாக கடலுக்குள் செல்லக்கூடாது என்றும், மீறி செல்வோர் பிணமாகவே திரும்புவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜிவி பிரகாஷ், சிறுவயது முதலே கடலுக்குள் செல்ல வேண்டும் என்ற கனவை தன் தாத்தா குமரவேலுவிடம் தொடர்ந்து சொல்லி வருகிறார். அந்த இலக்கை அடைவதற்காக, நண்பர்களுடன் சேர்ந்து பல வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கிறார், மேலும் அந்த கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சாபுமோன் அப்துசமாத் கூறும் வேலைகளையும் செய்து வருகிறார்.
ஒரு நாள் நடுக்கடலில் சரக்குகளை கைமாற்றும் பணியில் ஈடுபடும் போது, அவர் கடற்படை அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்கிறார். அப்போது தான் ஜிவி பிரகாஷ், அந்தப் பெட்டிகளில் போதைப் பொருள்கள் இருப்பதை அறிகிறார். அதன்பிறகு, அங்கிருந்து தப்பித்து கரையை அடைந்தவுடன், நேராக ரவுடி சாபுமோனை அடித்து கட்டிப்போட்டு, கடலுக்குள் கடத்தி விடுவதற்காக முயல்கிறார். ஆனால் அப்போது கடலுக்குள் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேருகிறது. அந்த ஆபத்து என்ன? ஏன் அந்த மீனவ கிராமத்தினர் கடலுக்குள் செல்ல மாட்டார்கள்? இதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன? என்பதே கதையின் மீதிக்கூறும் முக்கிய அம்சமாகும்.
அரண்மனை, பங்களா, வீடு, தண்ணீர், சப்தம் போன்ற பல்வேறு சூழல்களில் பேய் கதைகளை பார்த்திருக்கும் நமக்கு, கடலில் பேய் இருப்பதை ஒரு புதுமையான கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கமல் பிரகாஷ். கடலுக்குள் வாழும் கடல் அட்டை பூச்சிகளைப் பிடித்து விற்பனை செய்வதை மையமாகக் கொண்டு, கடலுக்கு அடியில் இருக்கும் தங்கத்தை இணைத்து, ஹாரர் படமாக உருவாக்கியிருக்கிறார். முதல் பாதியில், இது சாதாரணமான ஒரு மீனவ வாழ்க்கை படமாக இருக்க, இரண்டாம் பாதியில் நடுக்கடலில் நடக்கும் பேய்க்கதை போல உருவாக்கி, பயமுறுத்தும் விதத்தில் நகர்த்தியிருக்கிறார்.
டைட்டில் ரோலில் ஜிவி பிரகாஷ் குமார், தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மீனவ கிராம இளைஞனுக்கேற்ப நடையும், உடையும், பாவனைகளும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி ஸ்லாங்கில் பேசும் விதம் அவரது நடிப்பை இன்னும் சிறப்பாக்கியுள்ளது. கதாநாயகியாக வரும் திவ்யபாரதிக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் ஜிவி பிரகாஷுடன் முழுவதும் தோன்றுகிறார். ஜிவி பிரகாஷின் நண்பர்களாக நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்களுக்கேற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த சேத்தன், அழகம்பெருமாள், குமரவேல், சாபுமோன் ஆகியோர், தங்களது மிரட்டலான நடிப்பால் படத்தின் நிறைவை கூட்டியிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், தனது வேலைப்பாட்டில் படம் முழுவதும் பிரமாண்டத்தைக் காட்டியிருக்கிறார். ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் சுமார் ரகம், ஆனால் பின்னணி இசையில் கதைக்கு தேவையான திகிலையும் பரபரப்பையும் கொடுத்திருக்கிறார். ஹாரர் படங்களின் ரகசியங்களை சரியாக புரிந்துகொண்டு, முதல் பாதியை தரையில், இரண்டாம் பாதியை கடலுக்குள் என வித்தியாசமான சூழல்களில் படம் நகரச் செய்திருக்கிறார் இயக்குனர். மேலும், கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன, இதனால் படத்தின் திரில்லையும், பயமும் அதிகரிக்கின்றன.