ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் நிறுவனத்தை நடத்தி வரும் ஜகவீர் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜ், குழந்தை பருவத்திலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். ஆண்-பெண் என்ற பேதமின்றி, நல்ல நட்புடன் பழகி, பரஸ்பரம் புரிந்துகொள்ளும் இவர்களை, ப்ரெண்ட்ஷிப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கலாம்.நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்களின் குடும்பத்தினர், அவர்களை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? இருவரும் திருமணத்திற்கு சம்மதித்தார்களா? அல்லது கடைசி வரை நல்ல நண்பர்களாகவே இருந்து விட்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. இந்த கதை, 90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அனைவரும் தொடர்பு கொண்டு உணரக்கூடியதாக உருவாகியுள்ளது.
படத்தின் தலைப்பு “2K லவ் ஸ்டோரி” என்றாலும், முழுவதுமாக நட்பின் ஆழத்தையும் அதன் உண்மையான அர்த்தத்தையும் இயக்குநர் சுசீந்திரன் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். இன்றைய இளைஞர்கள், நட்புக்கும் காதலுக்கும் இடையேயான வேறுபாட்டை எவ்வாறு பார்கிறார்கள்? காதலுக்கு எத்தனை விதமான தன்மை இருக்கிறது? லவ் பிரேக்கப், லவ் பேட்ச்-அப் போன்ற அனுபவங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு இணைத்துள்ளார்.

ஹீரோவாக நடிக்கும் ஜகவீர், 2K பையனாக மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் படம் என்பதற்கேற்ப, தனது முழுத்திறமையையும் காட்டி நடித்துள்ளார். ஹீரோயின் மீனாட்சி கோவிந்தராஜ், தற்போதைய தலைமுறை பெண்களின் நடை, உடை, பாவனைகளை மட்டுமின்றி, அவர்களின் மனநிலையையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளார். நண்பர்களாக வரும் பால சரவணன், அந்தோணி பாக்யராஜ் ஆகியோர் தங்களது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, வினோதினி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு முழுமையாக நீதி செய்துள்ளனர்.

ஆனந்த கிருஷ்ணனின் ஒளிப்பதிவில், காட்சிகள் ஒளி மிளிரும் வகையில் வந்துள்ளது. ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு சூழ்நிலை என்பதால், அதை மிக அழகாக திரையில் உயிர்ப்பித்துள்ளார். டி. இமான் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.2K கிட்ஸ் உலகில், ஒரு ஆண் மற்றும் பெண் நெருங்கிப் பழகினால், அதை காதலாக கருத வேண்டாம். பெற்றோர்கள் அதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? என்ற கருத்தை மிக அழகாக படம் எடுத்துக் காட்டுகிறது.