Friday, April 12, 2024

“நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவுங்கள்” – அமைச்சரிடம் நடிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினரான பூச்சி எஸ். முருகன் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சங்க நிர்வாகிகளுமான நாசர் மற்றும் ராஜேஷ் அவர்களுடன் இன்று செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பதை எடுத்து விளக்கி அவர்களுக்காக கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில்…

“1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டு எம்.ஜி.ஆர்., கலைஞர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். என பெரும் மேதைகளால் வளர்க்கப்பட்டது நமது தென்னிந்திய நடிகர் சங்கம்.

பெரும் சட்ட போராட்டத்தின் விளைவால், 30 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2015-ம் ஆண்டு சங்கத்தில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டு, நடிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சீருடனும் சிறப்புடனும் நடைபோட்டது.

200 கோடி ரூபாய் மதிப்புள்ள  நடிகர் சங்க இடத்தை மீட்டெடுத்து அந்த இடத்தில் புதிய கட்டடத்தை கட்டும் பணிகளை மேற்கொண்டோம். 30 கோடி ரூபாக்கு மேற்பட்ட செலவில் 75 சதவீத கட்டட பணிகள் முடிந்துவிட்டது.

ஆனால், 2019-ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சில நயவஞ்சகர்களின் சூழ்ச்சியால் எண்ணப்படாமல் முடங்கி இருக்கின்றன.

3,122 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கத்தில் 2,300க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்படும் சினிமா, நாடக நடிகர்கள்தான். அந்த நலிவுற்ற நாடக, சினிமா நடிகர்களுக்கு நடிகர் சங்கம் மூலம் மாதாமாதம் ஓய்வூதியம் வழங்கி வந்தோம். அது அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால், அதுவும் நிறுத்தப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொரோனா காலத்தில் மட்டும் 50க்கு மேற்பட்ட நாடக, சினிமா நடிகர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கும் உதவித் தொகை வழங்க முடியவில்லை. 

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கடும் பொருளாதார சிக்கலில் இருப்பவர்கள். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா காரணமான ஊரடங்குகளால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தவித்துவருகின்றனர்.

தற்போது பதவியேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், செய்தித் துறை அமைச்சர் அவர்களும் தங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவார்கள் என்று எதிர்பார்த்துள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

1. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நடிகர்களுக்கு உதவும் வகையில் உதவித் தொகை.

2. நடிகர்களின் குடும்பம் பயன்பெறும் வகையில் ரேஷனில் 6 மாதங்களுக்கு உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

3. நலிந்த நடிகர்களின் வாரிசுகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

4. கொரோனா பாதித்து இறக்கும் நடிகர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

5. கொரோனா சிகிச்சையில் இருக்கும் நடிகர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேற்கண்ட உதவிகள் கடும் சிரமத்தில் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நடிகர் சங்க உறுப்பினர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் நலிந்திருக்கும் நாடக நடிகர்களை காப்பாற்ற கடந்த ஏப்ரல் 30-ம் தேதி  கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குநரான கலையரசி ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் சில யோசனைகள் கூறி இருந்தேன்.

50 நாள் வேலை உறுதி திட்டம் – அரசு சார்பில் நாடகத்துக்காகவே பிரத்யேகமாக யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் ஒவ்வொரு நாடகக் குழுவுக்கும் வாய்ப்பு தரலாம். மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியான திட்டமாக இது இருக்கும். இதனால் நமது பாரம்பரிய நாடகக் கலையும் அழியாமல் பாதுகாக்கப்படும்.

இதில் வரும் விளம்பர வருவாயும் அரசுக்கு சேரும். தொடக்கத்தில் லாபம் தராவிட்டாலும், நேர்த்தியான நாடகங்கள் மூலம் மக்களை நமது சேனல் பக்கம் ஈர்க்கலாம். சில மாதங்களில் விளம்பர வருவாய் கிடைக்கும். தொடக்கக் காலத்தில் அரசின் விளம்பரங்களைக்கூட அதில் ஒளிபரப்பலாம்.

பொன்னியின் செல்வன்’ நாடகம் சென்னையில் போடப்பட்டபோது நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோல நேர்த்தியாக நாடகங்களை இயற்றும் குழுக்களை ஊக்கப்படுத்தலாம்.  இந்த நாடகங்களை அரசு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பலாம். ஒவ்வொரு நாடகக் குழுவுக்குமே தனி யூ டியூப் சேனல் தொடங்க வழி காட்டலாம்.

தமிழ் திரைப்படங்களில் நாடக நடிகர்களை அதிக அளவில் பயன்படுத்தும் படங்களுக்கு சிறப்பு சலுகைகள், மானியம் அறிவிக்கலாம்.

குறிப்பாக நாடகக் கலைஞர்களை பயன்படுத்தும் படக் குழுவின் படப்பிடிப்புக்கு எளிதில் அனுமதி வழங்கலாம்.

இவற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமான யோசனைகளை உடனடியாக நிறைவேற்றி ஆயிரக்கணக்கான நாடகக் கலைஞர்கள் குடும்பங்களின் வாழ்வாதார சிக்கலை தீர்த்து வைத்து உதவ வேண்டும்..” என்று கோரியுள்ளார்.  

இந்தக் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன்  அவர்கள் இந்த கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News