Thursday, April 11, 2024

கார்கி – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் அயனாவரம் பகுதியில் இருக்கும் மிகப் பெரிய அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்த வாய் பேச முடியாத ஊமை சிறுமியை அந்த அபார்ட்மெண்ட்டில் வேலை பார்த்து சில செக்யூரிட்டிகள், மற்றும் வேலையாட்கள் சிலர் சேர்ந்து தொடர்ந்து பல மாதங்களாக பலாத்காரம் செய்து வந்தனர்.

இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்ததும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்கிறார்கள். அந்தக் கதையைத்தான் இந்தப் படத்தின் அவுட் லைனாக வைத்துக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன்.

அயனாவரம் பகுதியில் இருக்கும் சாந்தி அபார்ட்மெண்ட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார் ஆர்.எஸ்.சிவாஜி. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளான சாய் பல்லவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டிலும் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவரது தங்கை பள்ளிக்குச் செல்லும் சிறுமி. இவரது அம்மா வீட்டிலேயே மாவு அரைத்துக் கொடுத்து அதை விற்பனை செய்து வருகிறார். சாதாரண நடுத்தரக் குடும்பம்.

சாய் பல்லவிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். சாய் பல்லவிக்கும் அந்த மாப்பிள்ளையைப் பிடித்துப் போக இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.சிவாஜி வேலை செய்யும் அந்த சாந்தி அபார்ட்மெண்ட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு சிறுமியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வழக்கில் ஓடிசாவரையிலும் சென்ற சென்னை போலீஸார் அங்கே 4 பேரை கைது செய்து அழைத்து வருகின்றனர். ஐந்தாவது நபராக ஆர்.எஸ்.சிவாஜியையும் கைது செய்கிறார்கள் போலீஸார்.

இதனால் அவரது குடும்பமே ஒரே நாள் இரவில் அவமானத்துக்குள்ளாகிறது. சாய் பல்லவிக்கு வேலை போகிறது. டியூஷன் படிக்க யாரும் வரவில்லை. மாவு வாங்கவும் ஆள் இல்லை.

தன் அப்பா குற்றமற்றவர் என்று சாய் பல்லவி உறுதியாய் நம்புகிறார். இதனால் அவரை ஜாமீனில் எடு்க்க முயல்கிறார். இவருடைய குடும்ப நண்பரும் மிகப் பெரிய கிரிமினல் லாயருமான ஜெயப்பிரகாஷ், வக்கீல் சங்கத்தினர் எடுத்த முடிவின் காரணமாக இதில் நான் வாதாட முடியாது என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கிறார்.

ஜெயப்பிரகாஷிடம் ஜூனியராக இருக்கும் காளி வெங்கட் தான் இந்த வழக்கினை எடுத்து நடத்துவதாக சாய் பல்லவியிடம் சொல்ல, அதை அவரும் ஏற்றுக் கொள்கிறார்.

தொடர்ந்து இந்த வழக்கில் தன் தந்தையைக் காப்பாற்ற சாய் பல்லவி போராடுகிறார். அது நடந்ததா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ் அடங்கிய திரைக்கதை.

படத்தின் மிகப் பெரிய தூணே சாய் பல்லவிதான். எந்தவித மேக்கப்பும் இல்லாமல், மிக எளிமையாக, அதே சமயம் அழகாகவும் படம் முழுவதும் காட்சியளிக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளையிடம் வெட்கத்துடன் பேசும் அந்த சாய் பல்லவிதான் அதன் பின்பு அந்த சந்தோஷத்தையே முகத்தில் காட்டாமல் அடுத்த 2 மணி நேரத்துக்கு கண்ணீரும், கம்பலையுமாக காட்சியளித்து நம்மையும் கண் கலங்க வைத்திருக்கிறார்.

அப்பாவை காப்பாற்ற துடிக்கும் ஒரு மகளாக சாய் பல்லவி பல காட்சிகளில் கை தட்டல்களை பெறுகிறார் சாய் பல்லவி.  சாய் பல்லவியின் இந்த எதார்த்தமான நடிப்புதான் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

சில எமோஷனல் காட்சிகளில் சாய் பல்லவியின் நடிப்பினால் பார்வையாளர்களின் கண்களும் கலங்குகின்றன. சிறையில் இருக்கும் தனது அப்பாவை பார்க்க வந்து அவரைப் பார்க்க முடியாமல் ஓரமாக ஒதுங்கி நிற்கும் நேரத்தில் சாய் பல்லவியும், சிவாஜியும் காட்டுகின்ற நடிப்புதான் படத்தின் உயிர் நாடி. இந்தக் காட்சிக்குப் பிறகு “எப்படியாவது சிவாஜியை காப்பாற்றியாக வேண்டுமே” என்ற எண்ணத்தை நமக்குள்ளும் சேர்த்துவிட்டார் இயக்குநர்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் நடிகர் காளி வெங்கட்டுக்கு இதுவொரு சிறப்பான படம். அவரது நடிப்புக்கு தீனி போட்டிருக்கும் படம். தனது திக்குவாய் பிரச்சினையினால் அவர் சந்திக்கும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு எப்படியாவது தனது முதல் வழக்கான இதில் ஜெயித்துவிட வேண்டும் என்று அவர் துடிக்கும் துடிப்பு பலே..!

பல காட்சிகளில் தனது கவுண்ட்டர் அட்டாக் வசனத்தின் மூலமாக காட்சிகளை ரசிக்கவும் வைத்திருக்கிறார். மேலும், இவர்தான் படத்தில் கதையை ஒவ்வொரு கட்டமாக நகர்த்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

சோகமான காட்சிகளில்கூட தனது நடிப்பு மற்றும் ஒற்றை வசனங்களின் மூலமாக லேசாக புன்னகைக்கவும் வைக்கிறார். நீதிமன்ற காட்சிகளில் வியர்த்து, விறுவிறுத்து தயக்கத்துடன் கேள்விகளைக் கேட்டு அரகத் தரப்பு வழக்கறிஞருடன் மல்லுக் கட்டும் அந்த அப்பாவி வக்கீல் கேரக்டருக்கு காளி வெங்கட் மிகச் சிறந்த பொருத்தம்தான்.

அரசுத் தரப்பு வழக்கறிஞரான கவிதாலயா’ கிருஷ்ணன் இன்னொரு பக்கம் கோர்ட் சீன்களில் அலப்பறை செய்திருக்கிறார். தாங்கள் சொல்வதுதான் சரி என்பதை அழுத்தம்திருத்தமாக எடுத்து வைக்கும் அரசுத் தரப்பு வக்கீல்களுக்கு இவரது கதாபாத்திரம் சாலப் பொருத்தம். நீதிபதியையே கவுண்ட்டர் அட்டாக் கொடுத்து கோபப்பட வைக்கும் அந்தத் திமிரையும் கிருஷ்ணன் சரியாகவே காட்டியிருக்கிறார்.

மேலும் சாய் பல்லவியின் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி மென்மையாக எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்.. இவர் போய் இதைச் செய்திருப்பாரா என்ற எண்ணத்தை நமக்குள் தோற்றுவித்து நம்மை கடைசிவரையிலும் நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் கதாபாத்திரத்தை மிகச் சரியாக செய்திருக்கிறார்.

நடிகர் சரவணன் பாசமிக்க அப்பாவாக குற்றவாளிகளை கொலை செய்யத் துடிக்கும் அளவுக்கு கோபக்காரராக தனது நடிப்பினைக் காண்பித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ் வழக்கம்போல தனது சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி படத்திற்கு கடைசி நேரத்தில் பூஸ்ட்’ கொடுத்து படத்தின் உருவாக்கத்திற்கும் துணை நின்றிருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

கடைசியாக நீதிபதியாக நடித்திருக்கும் திருநங்கையான சுதாவும் இந்தப் படத்திற்குக் கிடைத்த பலமாக ருக்கிறார். அரசுத் தரப்பு வழக்கறிஞரான கிருஷ்ணன் தனது பாலியல் தன்மையைச் சொல்லி கிண்டல் செய்ததைக் கேட்டவுடன் கோபத்தில் கோர்ட்டை ஒத்தி வைத்துவிட்டு வெளியேறுவதும், அடுத்த நாள் ஹியரிங்கில் அதற்குத் தகுந்த பதிலைச் சொல்லும்போதும் கை தட்டலைப் பெறுகிறார் சுதா.

ஒளிப்பதிவு அசத்தல் என்று சொல்லும் அளவுக்கு அபாரமாக இருக்கிறது. சாய் பல்லவியின் அழகுக்கு எந்தப் பங்கமும் நடந்துவிடாத அளவுக்கு ஒளியமைப்பை வைத்து படமாக்கியுள்ளார். இன்னொரு பக்கம் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், பாடல் இசையும் நன்று.

சிவாஜி எப்படியும் விடுதலையாகிவிட வேண்டும் என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு திரைக்கதையில் குழப்பமே இல்லாமல் எழுதியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் இடம் பெறும் வசனங்களும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. ‘என் பொண்ணு இப்படி இருக்குறதுக்கு செத்திருக்கலாம்’ என்று சரவணன் சொல்லும் வசனமும், “இப்பல்லாம் என் பொண்ணு என்னை அப்பாவா பார்க்கலம்மா.. ஆம்பளையாத்தான் பார்க்குறா…” என்ற வசனமும் அனைவரையும் கண் கலங்க வைக்கிறது.

இன்றைய வாழ்க்கை போராட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி கொஞ்சம் ஆழமாகவும், வித்தியாசமாகவும் பேசியுள்ளது இந்த கார்கி’ திரைப்படம். 

நீதிக்காக போராடும் ஒரு சாதாரண பெண்ணின் கதையை மிக இயல்பாக எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் நேர்த்தியான இயக்கத்தில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கௌதம் ராஜேந்திரன். 

இது போன்ற சென்சிட்டிவ்வான வழக்குகளில் தவறுதலாக ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அவரது குடும்பத்தினர் என்ன பாடுபடுவார்கள்..? இந்தச் சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதையும் இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

மேலும் இன்றைய மீடியாக்கள் ஒரு வழக்கு விவகாரத்தை எப்படி ஹேண்டில் செய்கின்றன..? அவர்களுக்கும் சமூக அக்கறையில் பங்கில்லையா..? போலீஸ் சொல்வதை மட்டுமே எழுதுவதும், பேசுவதும், பரப்புரை செய்வதும் நியாயம்தானா என்ற கேள்வியையும் இயக்குநர் இந்தப் படத்தில் முன் வைத்துள்ளார்.

படத்தின் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் யாரும் எதிர்பார்க்காதது. ஆனால், அந்த டிவிஸ்ட்டை சுருக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம்..!

‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று பேசும் வசனத்திற்கு நிச்சயமாக இந்தப் படத்தின் நாயகி பொருத்தமானவர்தான். இந்த இடத்தில்தான் சாய் பல்லவியை அனைவருக்குமே பிடித்துப் போகிறது.

இப்படம் சொல்லும் செய்தி இதுவரையிலும் எந்தப் படத்திலும் நாம் கேட்டிராதது. பார்த்திராதது. இதுதான் உண்மையான பெண்ணியம்.

தனக்கு வந்தால்தான் அது பிரச்சினை.. அடுத்தப் பெண்ணுக்கு வந்தால் அது பிரச்சினையில்லை என்று நினைக்காமல், ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும் இன்னல்களை ஒட்டு மொத்த பெண் குலத்துக்கே எதிரான பிரச்சினையாக நினைத்தால்தான் இது போன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்த முடியும் என்பதை உரக்கச் சொல்கிறது இந்தக் ‘கார்கி’ படம்.

இந்த நல்ல கருத்துக்காகவே இந்தப் படத்தினை நாம் பார்த்தாக வேண்டும். கொண்டாட வேண்டும்..!

படக் குழுவினருக்கு கிரேட் சல்யூட்..!

RATINGS : 4.5 / 5

- Advertisement -

Read more

Local News