Friday, April 12, 2024

கணேசாபுரம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.காசிமாயன்  இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும், நாயகியாக கேரளாவைச்  சேர்ந்த  ரிஷா  ஹரிதாஸூம்நடித்துள்ளனர்.

இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ‘ராட்சசன்’ பசுபதி ராஜ், ராஜ சிம்மன், ‘கயல்’ பெரேரா, ‘ஹலோ’ கந்தசாமி மற்றும் ‘டிக்-டாக்’ ராஜ் பிரியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வாசு, இசை – ராஜா சாய், அறிமுக இயக்குநரான கே.வீராங்கன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

இத்திரைப்படத்தை ஸ்டாண்டர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மதுரை மண்ணை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் 1990-களின் காலகட்டத்தில் நடைபெறுவதைப்போல் பயணிக்கிறது.

மதுரை மாவட்டத்தில் திருடுவதை குலத் தொழிலாக கொண்ட ஒரு சமூகத்தின் கதையை இந்தப் படத்தின் கதைக் கருவாகக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சமூகத்தையே திருடர்களாக மாற்றியவர்கள் யார்..? அதனால் திருடர்களுக்கு எஜமானர்களாக இருந்தவர்கள் அனுபவித்த அனுகூலங்கள் என்ன..? வழி, வழியாக வந்த திருடர் கூட்டம் என்பதால் அந்தச் சமூகம் காலப்போக்கில் எப்படி சீர்கெட்டுப் போனது என்பதைப் பற்றியும் திரைக்கதையில் கொஞ்சமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னொரு புறம், தான்தோன்றித்தனமாக சுற்றித் திரியும் திருட்டுத் தொழில் செய்யும் ஒரு ரவுடியை காதல் எப்படி மாற்றுகிறது என்பதையும் இந்தப் படம் சொல்கிறது.

மதுரை மாவட்டத்தில் தேனி அருகே இருக்கும் கணேசாபுரம்’ என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் திருட்டுத் தொழில் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.

இந்தத் தொழில் செய்வது பற்றி அவர்களுக்கு ஒரு சிறிய குற்றவுணர்ச்சிகூட இல்லாத வகையில் அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அந்தப் பகுதியின் ஜமீன்தார் பெரும் ஆதரவு கொடுக்கிறார்.

அடிக்கின்ற கொள்ளைகளையெல்லாம் ஜமீன்தாரிடம் கொடுக்கிறார்கள் திருடர்கள். ஜமீன்தார் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டு அவர்களுக்கென்று சிலவற்றை மட்டும் கொடுக்கிறார். பதிலுக்கு அவர்கள் மேல் போலீஸ் புகார், கைது என்று எதுவும் வராமல் பார்த்துக் கொள்கிறார்.

இந்த அடிமை வேலையை தன் சுய விருப்பத்துடன் செய்து வருகிறார் நாயகன். இவருடன் இன்னும் இரண்டு நண்பர்களும் இணை பிரியாமல் இருக்கிறார்கள்.

ஊரில் பெரிய மனிதரான பெரேராவை ஒரு பஞ்சாயத்தின்போது தெரியாமல்.. கை தவறி அடித்துவிடுகிறார் நாயகன். இதனால் கோபமடையும் பெரேராவின் மகன்கள் ஹீரோவை கொலை செய்ய சபதமெடுக்கிறார்கள்.

ஒரு நாள் நாயகனும், அவரது நண்பர்களும் கொள்ளையடிக்கப் போன இடத்தில் குடும்பத்தோடு தூக்கில் தொங்கப் போன ஒரு விவசாயக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் ஹீரோ.

இதனால் அந்தக் குடும்பத்தில் இருக்கும் இளைய மகளான ஹீரோயினுக்கு ஹீரோ மீது வழமையான காதல் பிறந்து விடுகிறது. ஹீரோயின் மிகப் பிரயத்தனப்பட்டு ஹீரோவுக்குள் காதல் உணர்வைத் தூண்டிவிடுகிறார். ஹீரோவும் காதலுக்கு சம்மதிக்கிறார்.

இவர்களின் காதல் பறந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் திருட்டுத் தொழிலை கைவிட்டு விடும்படி காதலி சொல்கிறாள். காதலியின் பேச்சைக் கேட்கலாம் என்று ஹீரோ நினைக்கையில், அது ஜமீன்தார் காதுகளுக்குச் செல்கிறது.

ஹீரோ திருட்டுத் தொழிலை கைவிட்டால் தனக்கு வருமானம் வராமல் நின்றுவிடுமே என்று கருதி இதைத் தடுத்து நிறுத்த நினைக்கிறார். ஹீரோவா திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ விரும்புகிறார். பெரைராவின் மகன்களோ கொலை வெறியோடு நாயகனை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் யாருடைய நோக்கம் நிறைவேறியது என்பதுதான் இந்தக் கணேசாபுரம்’ படத்தின் திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சின்னாவுக்கு இது முதல் படம் என்கிறார்கள். அது தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அன்பு, பாசம், நேசம், காதல், குடும்பம் என்று எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாத அந்தக் கேரக்டரை சின்னா உணர்ந்து நடித்திருக்கிறார்.

சண்டை காட்சிகளில் அந்தத் திண்ணென்ற உடம்பும், அவரது வேகமான ஆக்சன்களும் கவர்கிறது. காதல் வந்த பின்பு லேசாக சிரிக்கிறார் நாயகன். ஆனால், கோபப்படும்போது முற்றிலுமாக மாறிப் போகிறார். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

இவரது நண்பர்களாக நடித்திருக்கும் காசி மாயனும், இன்னொரு நடிகரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். கடைசியில் இருவரும் நண்பனுக்காக தங்களைத் தாங்களே கெட்டவர்களாகக் காட்டிக் கொள்ளும் காட்சியில் மனதைத் தொடுகிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் ரிஷா ஹரிதாஸ் கவனிக்க வைத்திருக்கிறார். இன்னும் நல்ல அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்தால் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டுவார் என்று நம்பலாம்.

நடிகர் சரவண  சக்தியின் சில, பல காமெடி பேச்சுக்கள் ஓஹோ என்றில்லையென்றாலும் கொஞ்சம் உதட்டைப் பிரித்து புன்னகையை சிந்த வைக்கிறது.

ஜமீன் இந்தத் திருட்டுக் கும்பலுடன் பேசும் காட்சிகளை சுவைபட படமாக்கியிருக்கிறார்கள். அதில் இன்னும் கொஞ்சம் உண்மைத்தனத்தைக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

முதலில் 1980-களிலேயே இப்படியொரு ஜமீன்தார் எங்கேயிருந்தார் என்பதை யாராவது சொல்ல முடியுமா..? இன்னும் பின்னோக்கி போயிருக்க வேண்டிய காலக்கட்டம். மாற்றியமைத்துவிட்டார் இயக்குநர் வீராங்கன்.

ஒளிப்பதிவாளர் பி.வாசு பகலையும் இரவாகவே நினைத்து ஷூட் செய்திருக்கிறார். அத்தனை பகல் காட்சிகளும் இரவு நேரம் போல டல்லாகவே காட்சியளிக்கிறது. சின்ன பட்ஜெட்தான் என்றாலும் ஒளிப்பதிவுக்காக இன்னும் கொஞ்சம் செலவழித்திருக்கலாமே..?

இசையமைப்பாளர் தன் பங்குக்கு சில பாடல்களைப் போட்டுக் கொடு்த்திருக்கிறார். நன்று. படத் தொகுப்பாளர் தன் பங்குக்கு ரிப்பீட்டட் வசனங்களை கத்திரி போட்டுக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ராஜசிம்மன் தன் அப்பாவுக்காக ஹீரோவை “போட்டுத் தள்ளப் போகிறேன்” என்று கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் சவால் விடுகிறார். அவர் திரையில் தோன்றினாலே சிரிப்புதான் வருகிறது. அந்த அளவுக்குக் காமெடியாகிவிட்டது அந்தக் கோபக் காட்சிகள்.

சுப்ரமணியபுரம்’, ‘பருத்தி வீரன்’, ‘அரவான்’ போன்ற படங்களின் பாதிப்பில்தான் இயக்குநர் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்று நினைக்கிறோம்.

ஆனால் அந்தப் படங்களில் இருந்த உயிரோட்டமான கதாபாத்திரங்களும், அழுத்தமான இயக்கமும், அனைத்துவித தொழில் நுட்பச் சிறப்புக்களும் இந்தப் படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

படத்தின் மேக்கிங் சிறப்பாக இருந்தாலும் கதைக் கரு, கதாபாத்திரங்களின் தன்மை, தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு.. இதெல்லாம் இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் இந்தப் படமும் பேசப்படும் படமாக மாறியிருக்கும்..!

ரேட்டிங் : 2.5 / 5

- Advertisement -

Read more

Local News