தென்னிந்திய சினிமாவின் முக்கியமான கலை இயக்குநர்களில் ஒருவரான தோட்டா தரணி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் பணியாற்றியுள்ளார். ‘நாயகன்’ படத்தில் தாராவி செட், ‘காதலர் தினம்’ படத்தில் இன்டர்நெட் கபே, ‘சிவாஜி’ படத்தின் செட் வடிவமைப்பு போன்றவை அவரது கைவண்ணத்தின் சிறப்பான உதாரணங்கள். பல தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்றுள்ள தரணி, இந்திய திரைத்துறையில் தனித்துவமான அடையாளம் பெற்றவர்.

கலை துறைக்கு அவர் வழங்கிய சிறப்பான பங்களிப்புக்காக பிரான்ஸ் அரசின் சார்பில் அவருக்கு “செவாலியே” (Chevalier) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது நவம்பர் 13ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் தூதரால் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இதற்கு முன்பு தமிழ் சினிமாவிலிருந்து நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரும் இதே விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

