Friday, April 12, 2024

“என் தலைப்பைப் பயன்படுத்தாதீர்கள்…” – நடிகர் விஷாலுக்கு இணை இயக்குநர் வேண்டுகோள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் அவருடைய 31-வது படத்தின் டேக் லைனாக ‘NOT A COMMON MAN’ என்பதைப் பயன்படுத்தி வருகிறார்.

ஆனால் இந்த டேக் லைனை தான் டைட்டிலாக பதிவு செய்து வைத்திருப்பதாகச் சொல்கிறார் தமிழ்ச் சினிமாவில் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் விஜய் ஆனந்த் என்பவர்.

இது குறித்து நடிகர் விஷாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் இது :

“இந்தக் கடிதம் உங்கள் மீது கங்கம் கற்பிக்கவோ அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ அல்லது பிறரின் தூண்டுதலின் பேரிலோ அல்லது வேறு எந்த உள் நோக்கத்துடனோ எழுதப்பட்டது அல்ல.

நான் அடைந்த மன உளைச்சலை எடுத்து வைக்கவும், என் தரப்பு நியாயத்தை பொதுவெளியில் வைப்பதற்காகவும் மட்டுமே எழுதினேன் என்பதைவிடவும் எழுதும் சூழலுக்குத் தள்ளப்பட்டேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

நான் இதுவரையிலும் 8 திரைப்படங்களில் உதவி, இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன். அதில் தங்களது ‘பாண்டிய நாடு’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘சக்ரா’ ஆகிய இரு படங்களிலும் இணை இயக்குநராகப் பணி புரிந்துள்ளேன்.

மேலும், நீங்கள் இயக்கவிருக்கும் துப்பறிவாளன்-2’ படத்திலும் நீங்கள் கேட்டுக் கொண்டதின்பேரில் இணை இயக்குநராக இரண்டு மாதங்கள் PRE PRODUCTION-ல் பணியாற்றிக் கொடு்த்தேன்.

ஒரு சில காரணங்களினால் அந்தப் படம் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டிருந்ததால், நான் இயக்கவிருக்கும் எனது படத்தின் பணிகளில் முழு வீச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அந்தச் சூழலில்தான் கடந்த மாதம் நண்பர்கள் மூலமாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்தது.

அதாவது, நான் எனது கதைக்காக ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து புதுப்பித்து வந்த ‘COMMON MAN’ என்னும் டைட்டிலைப் பயன்படுத்தி புதிதாக விஷால் அவர்களின் படத்தின் அறிவிப்பு வெளிவந்திருப்பதாகத் அவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அதைப் பார்த்த பொழுது, உங்களது தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ உங்களது அடுத்தப் படமான ‘விஷால் 31’ படத்தின் அறிவிப்பு ‘NOT A COMMON MAN’ டேக் லைன் உடன் மோஷன் போஸ்டர் வடிவத்தில் வந்திருந்தது.

இதில் நான் அதிர்ச்சியடைய முக்கியமான காரணங்கள் :

1.VFF நிறுவனத்தின் சார்பாக எனது தலைப்பான “COMMON MAN”-ஐ அந்நிறுவனத்தின் அடுத்தப் படமான #VISHAL 31-க்கு தலைப்பாகப் பதிவு செய்ய முயற்சித்து அது கிடைக்காத காரணத்தினால் “NOT A COMMON MAN” எனும் பெயரில் அறிவிப்பு வெளியாகப் போவதாகச் செய்தி எனக்கு முன்னாடியே வந்திருந்ததால், அது தொடர்பாக உங்களது மேலாளரையும், சம்பந்தப்பட்ட இயக்குநரையும் அணுகியபோது சரியான பதில் கிடைக்காத நிலையில், நான் உங்களுக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜில் அந்தத் தலைப்பு என்னிடம் இருப்பதையும், “வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் திரித்துப் பயன்படுத்துவது சரியல்ல…” என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு நீங்கள், “அந்தத் தலைப்பைப் பயன்படுத்தப் போவதில்லை” என்று தெளிவாகப் பதில் அளித்திருந்த நிலையில், இப்படியொரு மோஷன் போஸ்டரை பார்த்தது முதல் அதிர்ச்சி.

2. இரண்டாவதாக ‘சக்ரா’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளின்போது ‘COMMON MAN’ என்னும் தலைப்புடைய என்னுடைய முழுக் கதையையும் தங்களது மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் கூறியிருந்தேன். அதோடு நில்லாமல் ஒரு மோஷன் போஸ்டரையும் தங்களுக்கு அனுப்பியிருந்தேன்.

மேலும் தாங்கள் கதையின் சாரம்சத்தைக் கேட்டுவிட்டு, அந்தக் கதையை சமீபத்தில் மறைந்த தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு அவர்களிடம் கூறுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் அவரிடமும் முழுக் கதையைும் சொல்லியிருந்தேன்.

ஆக, நான் அந்தத் தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதும், அந்தக் கதையின் சாரம்சம் தங்களுக்கும், தங்களது நிர்வாக வட்டத்திற்கும் நன்கு தெரிந்த விஷயமாகும். அதையும் மீறி ‘NOT A COMMAN MAN’ என்ற தலைப்புடன் மோஷன் போஸ்டர் வெளிவந்தது எனக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தப் போஸ்டரை பார்த்தவுடன் நேரடியாக தங்களிடமே இப்படியொரு விஷயம் நடந்தது எப்படி என்பது குறித்து தெளிவுபடுத்துவதற்காக தங்களுக்கு வாய்ஸ் மெஸேஜ் ஒன்றை அனுப்பியிருந்தேன். ஆனால், அதற்கு இன்றுவரையிலும் தாங்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

தற்போது கடந்த நான்கு நாட்களாக ‘விஷால் 31’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் பிலிம் சிட்டியில் மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், மேலும் சில படப்பிடிப்புக் காட்சிகளை உள்ளடக்கிய தனித்தனியான இரண்டு புரமோ வீடியோக்கள் யூடியூப் தளத்தில் அதே ‘NOT A COMMAN MAN’ என்ற தலைப்புடன் வெளியாகியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

தலைப்புதானா பிரச்சினை..?

1. இது வெறும் தலைப்பு மட்டுமில்லை. ஒரு கிரியேட்டரின் பதினைந்து வருட உழைப்பு.

2. எனது தலைப்பு பறி போகிறதே என்பதைவிடவும், எனக்கு மிகப் பெரிய வருத்தத்தைத் தருவது தங்களது அணுகுமுறைதான். தங்கள் உடனேயே இருந்து, தங்களுக்காக உழைத்து, தங்களிடமே நான் கூறிய ஒரு தலைப்பை எனக்குத் தெரியாமல் உபயோகித்ததோடு அல்லாமல், அதைப் பதிவு செய்யவும் முயற்சித்தது இன்னும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

3. என்னிடம் தலைப்பு வேண்டும் என்று கேட்டிருந்தால் நானே மகிழ்ச்சியுடன் தந்திருப்பேன். ஆனால், என்னையும் எனது உழைப்பையும் ஒரு பொருட்டாகக்கூட எண்ணாமல் நினைத்ததை செய்யலாம் என்னும் அந்த மேல் வர்க்க மனப்பான்மைதான் இங்கே பெரிய பிரச்சினையாக நிற்கிறது. நான் எழுதிய கதையின் சாரம்சமும் இதைத் தழுவியே வருவதாலோ என்னவோ, இதைச் சாதாரணமாகக் கடந்து செல்ல என் மனம் மறுக்கிறது.

எனது கேள்விகள் :

1. எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பதாகக் கூறும் தாங்கள் இந்த சிறு விஷயத்தில் நேர்மை பிறழ்ந்தது ஏன்..?

2. திரைத்துறையில் இரண்டு சங்கங்களுக்கு தலைவராகப் பொறுப்பு வகித்த தாங்கள் உங்களது கண் முன் இப்படியொரு அநீதியை அனுமதிப்பது சரியா..?

3. இதே தலைப்பை சில நாட்களுக்கு முன் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தனது ‘ரஜினி’ படத்தின் போஸ்டரில் ‘COMMON MAN’ என்பதை TAGLINE-ஆக  பயன்படுத்தியிருந்தார். நான் தொடர்பு கொண்டு பேசியவுடன் உடனேயே அதை நீக்கிவிட்டு போஸ்டர்களைத் திருத்தி அச்சிட்டு மீண்டும் வெளியிட்டார். அந்தப் பெருந்தன்மை உங்களிடம் இல்லாதது ஏன்..?

4. பதிவு செய்யப்பட்ட தலைப்பை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றால் அந்த நடைமுறை எதற்கு..? மேலும் உங்களது படத் தலைப்பை ‘NOT A THUPPARIVAALAN’ என்று யாராவது பயன்படுத்தினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..?

5. மேலும், முழுக் கதையையும் நான் உங்களுக்கும், உங்களது நிர்வாகத்திற்கும் கூறியிருப்பதால் தலைப்பைத் திரித்துப் பயன்படுத்தியிருப்பதுபோல் கதையின் சில பகுதிகளையும் திரித்துப் பயன்படுத்தியிருக்கலாமோ என்னும் ஐயம் எனக்கு எழுவதில் என்ன தவறு..?

தீர்வு

மேற்குறிப்பிட்ட எனது வாதங்களும், சந்தேகங்களும் முழுக்க, முழுக்க உங்களால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையால் விளைந்தவை.

இதற்குத் தீர்வு என்னவென்றால், சங்க விதிகளுக்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு மேற்சொன்ன ‘NOT A COMMON MAN’ என்னும் டைட்டிலோடு இதுவரையிலும் வந்த பதிவுகளை நீக்கிவிட்டு மேற்கொண்டு அந்தத் தலைப்பையோ அந்தக் கதையின் மற்ற அம்சங்களையோ உபயோகிப்பதை நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கொண்டு முன் போலவே இந்தக் கடிதத்தையும் பொருட்படுத்தாமல் அலட்சியப் போக்குடன் தொடர்ந்து செயல்படும்பட்சத்தில் அடுத்தக் கட்டமாக எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் சங்கங்களில் முறைப்படி புகார் அளிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுவேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார் இணை இயக்குநர் விஜய் ஆனந்த்.

- Advertisement -

Read more

Local News