Friday, April 12, 2024

“மெளன ராகம்’ படத்தில் கார்த்திக் கேரக்டரில் நான் நடிச்சிருக்கணும்..” – நடன இயக்குநர் ஜான் பாபுவின் வருத்தம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1986-ம் ஆண்டில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘மெளன ராகம்’ திரைப்படம் இன்றைக்கும் தமிழ்ச் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படம். திருமணமானவர்களும், திருமணம் ஆகாதவர்களும் ஒருமித்த மனதோடு காதலித்த திரைப்படம் அது.

இளைஞர்களுக்கும், மத்திய வயதுடையவர்களுக்கும், வயதானவர்களுக்கும் என்று ஒட்டு மொத்தமாய் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்றுவரையிலும் பிடித்தமான படமாகவும் அது இருக்கிறது.

இந்தப் படம் இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் பிடித்ததற்குக் காரணம் படத்தில் இடம் பெற்றிருக்கும் நடிகர் கார்த்திக்கின் கேரக்டர்தான். படத்தில் கார்த்திக் ஒரு சில காட்சிகளே வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மை சிறப்பாக அமைந்திருந்ததாலும், மணிரத்னத்தின் இயக்குதல் திறமையினால் அந்தக் காட்சிகள் படம் பார்த்தவர்கள் மனதைத் தொட்டுவிட்டன.

“கார்த்திக் நடித்த இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க மணிரத்னம் முதலில் என்னைத்தான் அழைத்தார். நான் பயந்துபோய் மறுத்துவிட்டதினால்தான் கார்த்திக் அதில் நடித்தார்…” என்று இப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் பிரபல நடன இயக்குநரான ஜான் பாபு.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழி படங்களிலும் இதுவரையிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியிருக்கும் ஜான் பாபு, தமிழில் மட்டுமே 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

‘மெளன ராகம்’ படம் பற்றி அவர் பேசும்போது, “நான் மணிரத்னம் ஸாரின் ‘பகல் நிலவு’, ‘இதயக் கோவில்’ ஆகிய படங்களில் நடனம் அமைத்தேன். நானே அதில் நடனமும் ஆடியிருக்கிறேன். மணி ஸாருக்கு என்னை மிகவும் பிடிக்கும்.

நடனக் காட்சிகளில் நடன அசைவுகளோடு இல்லாமல் கொஞ்சம் பாடி மேனரிசத்தையும் சேர்த்தே நான் செய்வேன். இது மணி ஸாருக்கு ரொம்பவே பிடிக்கும். இதற்காகவே அவர் பல முறை என்னைப் பாராட்டியிருக்கிறார்.

‘இதயக் கோவில்’ படத்தையடுத்து அவர் எடுத்த ‘மெளன ராகம்’ படத்தில் “ஒரு முக்கியமான ரோல் இருக்கு. அதுல நீதான் நடிக்கணும்…” என்று மணி ஸார் சொன்னார். ஆனால், எனக்கு அப்போது அதன் சீரியஸ்னஸ் தெரியவில்லை.

டான்ஸர்ன்னா வந்தோமா.. ஆடினோமா.. போனோமான்னு இருக்கலாம். நடிப்புன்னா ஷூட் முடியவரைக்கும் இருக்கணும்.. அப்புறம் நடிக்கப் போயிட்டால் டான்ஸ் ஆடக் கூப்பிட மாட்டாங்க.. இப்படி பல காரணங்கள் என் மண்டைக்குள்ள ஓடுச்சு.

என் பிரெண்ட்ஸெல்லாம் என்கிட்ட அட்வைஸ் செஞ்சாங்க. “நல்ல கேரக்டராத்தான் இருக்கும். மணி ஸார் படம். கொஞ்ச சீன்ஸ்தான வரப் போற.. 4 நாள்ல முடிச்சிருவாரு. நடிச்சிட்டு வந்திரு”ன்னு எவ்வளவோ சொன்னாங்க. நான்தான் கேக்கலை. நமக்கு டான்ஸே போதும்ன்னு சொல்லி மணி ஸாரைப் பார்க்க போகாமலேயே இருந்திட்டேன்.

ஆனாலும், அந்தப் படத்தில் ‘பனி விழும் இரவு’ பாடல் காட்சியில் மாலினியோடு நடனமாடும் வாய்ப்பினை எனக்குக் கொடுத்தார் மணி ஸார்.

அந்தப் படம் வெளிவந்த பிறகு தியேட்டரில் போய் படத்தைப் பார்த்த பிறகுதான் எவ்வளவு பெரிய சான்ஸை நான் மிஸ் பண்ணிருக்கேன்னு புரிஞ்சது. சரி.. நமக்கு எது கிடைக்கணுமோ அது கண்டிப்பா கிடைக்கும்ன்னு என்னை நானே தேத்திக்கிட்டேன்..” என்கிறார் வருத்தத்துடன்..!!!

- Advertisement -

Read more

Local News