Friday, April 12, 2024

கிளாப் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்றாலே நிச்சயமாக அதில் ஒரு மோட்டிவேஷன் Feel கிடைக்கும். அதை Good Feel- ஆக மாற்றுவதில்தான் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த ‘கிளாப்’ படத்தின் இயக்குநர் வெற்றிக் கோட்டை நெருங்கி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

பிரகாஷ் ராஜ் தன் மகனான ஆதியை பெரிய ஓட்டப் பந்தய வீரனாக உருவாக்க ஆசைப்படுகிறார். அதற்கான பயிற்சிகளை எல்லாம் கொடுத்து வளர்க்கிறார். ஆதியும் கம்பீரமாக தயாராகிறார்.

திடீரென நிகழும்  விபத்து ஒன்றில் பிரகாஷ்ராஜ் இறந்துவிட, ஆதிக்கு ஒரு காலை எடுக்க வேண்டிய சூழல் வருகிறது. இதனால் அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்படுகிறது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து அப்பாவின் அரசு வேலையை வாரிசு அடிப்படையில் பெற்று அதில் வேலை செய்து வருகிறார் ஆதி.

விபத்துக்கு முன்பிருந்தே அவரைக் காதலித்து வந்த ஹாக்கி வீராங்கனையான நாயகி, கால் போன பின்பும் விடாப்பிடியாக ஆதியைத் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், தன் காதல் மனைவியிடம்கூட எந்த ஒட்டுதலும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் ஆதி.

இந்நேரத்தில் ஆதிக்கு மதுரை அருகே ஒரு கிராமத்தில் ஓர் ஓட்டப் பந்தய வீராங்கனை இருப்பது தெரிய வருகிறது. அந்தப் பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து சரியான டிரைனிங் கொடுத்தால் அவள் இந்தியாவிற்காக உலக அளவில் சாதிப்பாள் என நம்புகிறார் ஆதி. அதற்கான எல்லா முயற்சிகளையும் தனியொரு மனிதனாக எடுக்கிறார்.

ஆனால், அப்பெண்ணின் சாதி அடையாளத்தை வைத்து அவளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. இதை ஆதி எப்படி சாமர்த்தியமாக கையாண்டு அப்பெண்ணை சாதனை செய்ய வைக்கிறார் என்பதுதான் இந்தக் கிளாப்’ படத்தின் கதை

நாடக பாணியிலான நடிப்பைக் கொடுக்க வேண்டிய இடங்கள் இருந்தும் படத்தில் மிக மெச்சூடாக நடித்துள்ளார் ஆதி. அவர் ஒரு கால் அற்றவராக நடித்துள்ள நிலையில் நிஜமாகவே அவருக்கு ஒரு கால் இல்லையோ என்று நினைக்கும் அளவில் உடல் வேதனைகளை தாங்கிய முகபாவனைகளை கொண்டு வந்து அசத்தி இருக்கிறார்.

இவருடைய மனைவியாக நடித்துள்ள அறிமுக நடிகை அழகிலும், நடிப்பிலும் அசத்தி இருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் மனம் உடைந்து அழுது, நம்மையும் அழுக வைத்துவிட்டார்.  

ஓட்டப் பந்தய வீராங்கனையாக வரும் கிரிஷா தன்னை இப்படத்திற்காக முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். உடலில் வேகமும் கண்களில் சோகமும் என ஒவ்வொரு ப்ரேமிலும் கிரிஷாவிற்கே நிறைய கிளாப்ஸ்.

நெகட்டிவ் கேரக்டரில் வரும் நாசர், சின்னச் சின்ன ரியாக்‌ஷனில்கூட மாஸ் காட்டுகிறார். முனிஷ்காந்த் நடிப்பில் கலாய்ப்பும், எமோஷ்னலும் கலந்திருப்பது படத்திற்கு ப்ளஸ்.   மற்றும் படத்தில் வரும் சிறு சிறு கதாப்பாத்திரங்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.

இப்படியான படத்திற்கு இசை பெரும் வலு சேர்க்க வேண்டும். பாடல்களில் மட்டும் அப்படியான வலுவை வலுவாகச் சேர்த்துள்ளார்  இளையராஜா. பின்னணி இசையில் போதிய அழுத்தமில்லை என்பது நிஜம்.

படத்தில் கேமரா வொர்க் நேர்த்தியாக இருக்கிறது. ஒரே லொக்கேசனில் மொத்த ரன்னிங் சீன்களையும் எடுத்திருந்தாலும் அதில் கூடுமான அளவில் தன் உழைப்பைக் கொட்டி வித்தியாசம் காட்டியிருக்கிறார் கேமராமேன்.

“அடிக்கிறான்.”, “எழ விடாமல் தடுக்கிறான்” என்ற வழக்கமான புலம்பல் சமாச்சாரங்கள் கதையில் இருந்தாலும் எங்கும் ஓவர் டோஸ் இல்லை என்பது ஆறுதல். மேலும்,  இப்படத்தில் ஒரு நேர்மையான திரைக்கதை இருக்கிறது.

ஓகோவென ‘கிளாப்’ பண்ண முடியாவிட்டாலும், ஒரு முறை நிச்சயமாக ‘கிளாப்’ பண்ணலாம்.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News