Friday, April 12, 2024

சினிமா வரலாறு-5௦ – உதவியாளருக்காக பட நிறுவனத்தைவிட்டு விலகத் துணிந்த இயக்குநர் ஸ்ரீதர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அமர தீபம்’, ‘உத்தமபுத்திரன்’, ’கல்யாணப் பரிசு’ உட்பட பல  வெற்றிப்  படங்களை எடுத்த ‘வீனஸ் பிக்சர்ஸ்’  நிறுவனம் எந்த அளவு மூலதனத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிந்தால்  யாராலும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது.

‘எதிர்பாராதது’ படத்தில் பணியாற்றும்போது அப்படத்தின்  தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜன்  ஆகியோரோடு ஸ்ரீதருக்கு மிகவும் நெருக்கமான நட்பு உருவானது. அதைத் தொடர்ந்து தினமும் தவறாமல் சந்தித்துப் பேசுவதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

அப்படி ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது சொந்தமாக ஒரு சினிமா கம்பெனி ஆரம்பித்து நாம் படம் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது. அந்த எண்ணம் தோன்றியபோது அவர்கள் யார் கையிலும் முழுதாக ஆயிரம் ரூபாய்கூட இல்லை என்பதுதான் அதில் முக்கியமான விஷயம்.

அப்படிப்பட்ட  சூழ்நிலையில் படம் எடுப்பது என்று முடிவெடுத்த அவர்கள் மூவரும் பணத்துக்கு என்ன செய்வது என்ற கேள்வியை ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டுக் கொண்டனர்.

அப்போது ஸ்ரீதர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும்  உருவாகிக் கொண்டிருந்த  படங்களின் தமிழ்ப் பதிப்புக்கு வசனம்  எழுத  ஒன்பதாயிரம் ரூபாய்வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

அதனால், “நான் பணியாற்றும் கம்பெனிகளில் பேசி ஐயாயிரம் ரூபாய்வரை நான் வாங்கித் தருகிறேன்” என்றார் ஸ்ரீதர். கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் ஆகிய இருவரும் தங்களால் முடிந்த பணத்தை புரட்டித் தர ஒப்புக் கொண்டனர்.

இரண்டு கதாநாயகிகளை மையமாக வைத்து ஸ்ரீதர் சொன்ன ‘அமர தீபம்’ என்ற  கதை அவரது நண்பர்கள் இருவருக்கும் பிடித்துப் போகவே அதையே படமாக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

அப்போது தமிழிலும், தெலுங்கிலும் பிரபலமாக இருந்த இயக்குநர் டி.பிரகாஷ்ராவின்    ஸ்டைல் ஸ்ரீதரை மிகவும் கவர்ந்திருந்த காரணத்தினால், “நம்முடைய முதல் படத்தை  இயக்கித் தரும்படி அவரையே கேட்கலாம்” என்றார் ஸ்ரீதர்.

‘பரிவர்த்தனா’ என்ற தெலுங்குப் படத்துக்கு தமிழில் வசனம் எழுதியபோதும், ‘மாதர் குல மாணிக்கம்’ படத்துக்கு வசனம் எழுதியபோதும் இயக்குநர் டி பிரகாஷ்ராவோடு  ஸ்ரீதருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த  நல்ல நட்பு  காரணமாகவும் நேரடித் தமிழ்ப் படத்தை இயக்கக் கிடைத்த முதல் வாய்ப்பு இது என்பதாலும் ‘அமர தீபம்’ படத்தை இயக்க டி.பிரகாஷ்ராவ் ஒப்புக் கொண்டார்.

அடுத்து அந்தக் கதையில் யார், யாரை நடிக்க வைக்கலாம் என்ற விவாதம் தொடங்கியபோது “இந்தக் கதையில்  சிவாஜிகணேசன்  கதானாயகனாக நடித்தால்தான்  நன்றாக இருக்கும்” என்று ஸ்ரீதர் சொல்ல “கதாநாயகிகள் இருவரில்  ஒருவர் பத்மினி இன்னொருவர் சாவித்திரி” என்றார் கிருஷ்ணமூர்த்தி.

அவர்கள் சொன்ன அந்த மூவருமே அன்று தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள். அந்த மூன்று பேரில்  ஒருவருக்கு  முன் பணம் கொடுக்கக்கூட அவர்கள்  கையில் அன்று காசு இல்லை என்ற போதிலும்  நட்சத்திரத் தேர்வை உற்சாகத்துடன் அவர்கள் தொடர்ந்து நடத்தினார்கள். பத்மினி, சாவித்திரி ஆகியோருடன் பேசுவதற்கு முன்னாலே சிவாஜியை சந்தித்து பேச முடிவு செய்து அவரது வீட்டுக்கு புறப்பட்டார் ஸ்ரீதர்.

‘எதிர்பாராதது’ படத்தில் நாயகனாக நடித்த  சிவாஜி, ஸ்ரீதரின்  திறமையைப்  பற்றி நன்கு அறிந்தவர். இளைஞராகவும், மிகச் சிறந்த திறமைசாலியாகவும் ஸ்ரீதர் இருந்த காரணத்தால் ‘எதிர்பாராதது’ படத்தின் படப்பிடிப்பின்போது அவருடன் மிகவும் பாசத்துடன் பழகினார் சிவாஜி.

அந்த பழக்கம் காரணமாக சிவாஜியை எளிதில்  தொடர்பு கொண்ட  ஸ்ரீதர், “உங்களிடம் ஒரு கதை சொல்ல வேண்டும். எப்போது வரலாம்..?” என்று கேட்க, “நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்றார் சிவாஜி.  சிவாஜியை அவரது வீட்டில் சந்தித்த ஸ்ரீதர் ‘அமரதீபம்’ கதையை அவரிடம் சொன்னபோது,  “கதை மிகவும் பிரமாதமாக இருக்கிறது” என்று  ஸ்ரீதரைப்  பாராட்டினார் அவர்.

“கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் ஆகியோரோடு சேர்ந்து நான் புதிதாகத் துவக்கியுள்ள ‘வீனஸ் பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியில்  இந்தக் கதையைத்தான் முதல்ல படமாக  எடுக்கப் போகிறோம். நீங்கதான் படத்திலே ஹிரோவா நடிக்கணும்.  ஆனால் உங்களுக்கு முன் பணம் கொடுக்கக்கூட எங்க மூணு பேர் கையிலேயும் இப்போ  பணம் இல்லை. அதனால உங்க பெயரைப் போட்டு நாங்கள் விளம்பரம் கொடுக்க நீங்க அனுமதி கொடுத்தால் நிச்சயமாக அந்த விளம்பரத்தைப் பார்த்து எங்களுக்குப் பணம் கொடுக்க பைனான்சியருங்க வருவாங்க. அதுக்குப் பிறகு அவர்களிடமிருந்து பணத்தை வாங்கி  உங்களுக்கு நாங்க முன் பணம் கொடுத்திடறோம்” என்றார் ஸ்ரீதர். 

அவர் மூச்சுவிடாமல் அப்படிச்  சொன்னதைக் கேட்டு  சிரித்த சிவாஜி “நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுங்கள். அதைப் பற்றி பிரச்னை இல்லை. நான் உங்கள் படத்தில் நிச்சயமாக நடிக்கிறேன். என் பெயரைப் போட்டு நீங்கள் தாராளமாக விளம்பரம் போட்டுக் கொள்ளலாம்” என்றார்.  

அடுத்து பத்மினியின் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீதர், சிவாஜியின் வீட்டில் நடந்தது எல்லாவற்றையும் சொல்ல “சிவாஜி நடிக்கும்போது நான் உங்களுக்காக நடிக்க மாட்டேனா…? நிச்சயமாக நான் நடிக்கிறேன்..” என்று அவரும் முன் பணம் இன்றி   படத்திலே நடிக்க ஒப்புக் கொண்டார்.

டி.பிரகாஷ்ராவின் இயக்கத்தில் பல தெலுங்குப் படங்களில் நடித்தவர் சாவித்திரி என்பதால் அவரை நடிக்க வைக்கின்ற பொறுப்பை  டி.பிரகாஷ்ராவ் ஏற்றுக் கொண்டார்.

‘அமரதீபம்’ படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, சாவித்திரி ஆகிய எல்லோருக்கும் வசனங்களைச் சொல்லித் தருகின்ற வேலையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டிருந்தார்.

“நான் எழுதிய வசனங்களை நடிகர்களுக்கு அவர் சொல்லிக் கொடுத்த பாணிதான் என் வசனங்களுக்கே உயிர் ஊட்டியது என்று சொல்வேன். எப்படிப் பேச வேண்டும் என்பதை அவர் நடித்தே காட்டி விடுவார்” என்று கோபாலகிருஷ்ணனின் திறமையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீதர்.

‘அமர தீபம்’ படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து  பிரம்மாண்டமான படம் ஒன்றை  எடுக்க வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் முடிவு செய்தனர். அந்தப் படம்தான் சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடித்த ‘உத்தமபுத்திரன்’. அந்தப் படத்திலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதரின் உதவியாளராகப் பணியாற்றினார்.

“உத்தமபுத்திரன்” பட வசனங்களை எழுதி முடித்தவுடன்  முதலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குத்தான்நான் படித்துக் காட்டுவேன்.  தனக்கு  திருப்தியாக இல்லை என்று அவர் சொல்லி விட்டால் உடனே அந்த வசனங்களை அடித்துவிட்டு அவரது திருப்தியைப் பெறும்வரையில் திரும்பத திரும்ப  எழுதிக் காட்டுவது என் வழக்கம். ஏனெனில், அவரது கணிப்பு அவ்வளவு  சரியாக இருக்கும்…” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திறமையைப் பாராட்டியுள்ளார் ஸ்ரீதர்.

 அந்த அளவிற்கு ஸ்ரீதர் மரியாதை வைத்திருந்த கோபாலகிருஷ்ணனை, ஸ்ரீதர் கண் முன்னாலேயே ஒருவர் அவமானப்படுத்தினார். அன்று ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், வீனஸ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் ‘உத்தமபுத்திரன்’ கதை,  விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வீனஸ் பிக்சர்சில் இருந்த ஒருவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை  அவமானப்படுத்தும் வகையில் துடுக்குத்தனமாக பேசினார். அவர் அப்படி பேசியவுடன் அவமானத்தால் குன்றிப் போனார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

“பலர் முன்னிலையில் என்னை அவர் அப்படி அவமானப்படுத்தி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவர் பேசியதும் எனக்கு ரொம்பவும் வேதனையாகிவிட்டது. இப்படி எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி விட்டாரே என்ற தலைக்குனிவு காரணமாக  என்னால் பதில் பேச முடியவில்லை. அதே சமயம் அந்த வேதனையையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மனதிற்குள்ளேயே புழுங்கினேன். பொருமினேன். ஆனால், என்னைவிட பல மடங்கு அதிகமாகப் புழுங்கிய இதயம் ஒன்று அங்கே இருந்தது. அந்த இதயத்துக்கு சொந்தக்காரர் என் மதிப்பிற்குரிய கதாசிரியர் ஸ்ரீதர்…” என்று ஓரு கட்டுரையில்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை அந்த நபர் விமர்சித்துப் பேசியதும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஸ்ரீதர் நேராக வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவரான கிருஷ்ணமூர்த்தியிடம் சென்றார்.

“நான் ஒரு எழுத்தாளன். என்னைப் போலவே கோபாலகிருஷ்ணனும் ஒரு எழுத்தாளர். என் கண் முன்னால் அவரை அவமானப்படுத்துவது என்பது என்னை அவமானப்படுத்துவது போலத்தான். எனக்கு ஆண்டவன் அருள் இருந்ததால் சந்தர்ப்பம் கிடைத்து நான் திரைக்கதாசிரியனாகவும், தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டேன். அவருக்கு இன்னும் அந்த சந்தர்ப்பம் வரவில்லை என்பதுதான் எனக்கும் அவருக்குள்ள வித்தியாசம். ஆனால், திறமையில் அவர் எந்த வகையிலும் என்னைவிடக்  குறைந்தவர் அல்ல.

ஆகவே அவரை அவமானப்படுத்தியவர் உடனடியாக அவரிடம்  மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், இந்த கம்பெனியில் இருக்க நான் தயாராக இல்லை…” என்று பொரிந்து தள்ளினார் ஸ்ரீதர்.

சிறிது நேரம் யாரும் பேசவில்லை. அந்த இடம் புயலடித்து ஓய்ந்த பூமி போல இருந்தது. ஸ்ரீதரின் கொந்தளிப்பிற்குப் பிறகு கோபாலகிருஷ்ணனை அவமானப்படுத்திய நபர் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

அந்தச் சம்பவம் பற்றி குறிப்பிடும்போது, “என்னால் கதாசிரியர் ஸ்ரீதரை அந்த இடத்தில் அப்போது பார்க்க முடியவில்லை. எழுத்தாளனின் உரிமையைக் காக்கும் போர் வீரனையே அங்கு கண்டேன். தன் சகாவை விட்டுக் கொடுக்காத ஒரு கடமை தவறாத அதிகாரியாக அவரைப் பார்த்தேன்.

ஸ்ரீதர் என்னும் அந்த அற்புதமான மனிதாபிமானிக்கு அன்று என் மனதிற்குள் லட்சார்ச்சனை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ள கோபாலகிருஷ்ணன் ஸ்ரீதருடன் பணி புரிந்த நாட்களில் இம்மாதிரியான இன்ப அதிர்ச்சிகள் பலவற்றுக்கு என் பலவீனமான இதயம் உள்ளாகியிருக்கிறது…” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது உதவியாளருக்காக அப்படிப் பொங்கி எழுகின்ற போர் குணத்தை, இன்று எத்தனை பேரிடம்  பார்க்க முடியும்…?

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News