Friday, April 12, 2024

சினிமா வரலாறு – 41 – ரஜினியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்த மனோரமா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1,500 படங்களுக்கும் மேலாக நடித்து தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள  மனோரமாவை ஒரு ‘சகலகலாவல்லி’ என்றுதான் கூறவேண்டும்.

நடிப்பதில் மட்டுமின்றி பழகுவதிலும் உயரிய நாகரீகத்தைக் கடைப்பிடித்த மனோரமாவின் திரை வாழ்க்கையில் ஒரே ஒரு கரும்புள்ளி என்றால் அது ஒரு கட்சியின் தேர்தல் பிரச்சார மேடையில் ரஜினிகாந்தை  விமர்சித்து அவர் சொன்ன வார்த்தைகள்தான்.

“யானைக்கும் அடி சறுக்கும்” என்ற பழமொழியினைப்  போல  மனோரமா சறுக்கக் காரணமாக அமைந்தது ஒரு அரசியல் மேடை.

ரஜினிகாந்தோடு எண்ணற்ற திரைப்படங்களில் நடித்திருந்த மனோரமா ரஜினியை அப்படி விமர்சிப்பார்  என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அப்படிப்பட்ட ஆவேசமான  விமர்சனக் கணைகள் ரஜினியை நோக்கி அதுவரை வீசப்பட்டதே இல்லை.

அவரது அந்த விமர்சனங்கள்தான்  காரணமோ,  அல்லது இயல்பாகவே அது நடந்ததோ – மனோரமா அப்படி ரஜினியை விமர்சித்துப்   பேசியதற்குப்  பிறகு  அடுத்த ஆறு மாதங்கள்  மனோரமாவைத் தேடி எந்த ஒரு   பட வாய்ப்பும்  வரவில்லை.

அந்த ஆறு மாத கால இடைவெளிக்குப் பிறகு  பிறகு அவர் நடிக்க ஒப்பந்தமான முதல் படம்  ‘அருணாச்சலம்.’ அந்தப் படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த். 

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி மனோரமாவிற்கு அந்தப் படத்திலே வாய்ப்பு தந்தார் ரஜினி.

அந்தப் படத்தின் தொடக்க விழாவில் ரஜினியை சந்தித்தபோது நேருக்கு நேராக அவரைப் பார்க்க முடியாமல் தவித்தார் மனோரமா.  ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அந்த சம்பவம் பற்றி ஒரு நாள்கூட  மனோரமாவிடம்   ரஜனி பேசவேயில்லை.

தனது படத்தில் வாய்ப்பு தந்தது மட்டுமின்றி மனோரமாவின்  பொன் விழாவினைக் கொண்டாடும் விதமாக திரையுலகின் சார்பில்  அன்றைய முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்கள் தலைமையில்  மனோரமாவிற்கு  ஒரு பாராட்டு விழா நடைபெற்றபோது மனோரமாவின் அழைப்பை ஏற்று அந்த விழாவிற்கும்  வந்து சிறப்பித்தார் ரஜினி.

அந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினி-கமல் ஆகிய இருவரையும் மனோரமா நேரில்கூட சென்று அழைக்கவில்லை. தொலைபேசி மூலம்தான் அழைத்தார் என்றாலும் மறு பேச்சின்றி அவர்கள்  இருவரும் விழாவிற்கு  வர ஒப்புக் கொண்டனர்.

மனோரமா தன்னைக் கடுமையாகத்  தாக்கிப் பேசியபோதும் தான் ஏன் அதைப்    பொருட்படுத்தவில்லை என்பதைப் பற்றி  முதல் முறையாக   அந்த பாராட்டு விழா மேடையில்  ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார்.

“பில்லா” படத்திலே நடித்துக் கொண்டிருந்தபோது ரஜினி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த படத்தின் வெளிப்புறக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது   கூட்டத்தில் நின்ற வக்கிர புத்திக்காரர்கள் சிலர் ரஜினியைப் பார்த்து “பைத்தியம், பைத்தியம்“ என்று கூவினார்கள்.

அந்த சமயத்தில் அந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருந்த மனோரமா   ரஜினிக்கு எதிராகக்  குரல் கொடுத்தவர்களை நோக்கி அடிக்கப் பாய்ந்தது மட்டுமின்றி, சரமாரியாக அவர்களைத் திட்டித் தீர்த்தார்.

மனோரமாவின் பாராட்டுவிழா மேடையிலே அந்தச்  சம்பவத்தை நினைவு கூர்ந்த   ரஜினி  “அன்றைக்கு என்னை அணைத்த இந்தக் கை… எத்தனை தடவை என்னை அடித்தாலும் தாங்குவேன்” என்று கூறியபோது  மனோரமாவின் கண்கள்  கலங்கின.

அந்த ஒரு சம்பவத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் திரை உலகில் எல்லா விஷயங்களிலும் மனோரமாவுக்கு  தெளிவான ஒரு பார்வை இருந்திருப்பதை உணரலாம்.

“ஒரு நடிகை எப்படிப்பட்ட ஈடுபாட்டோடு இந்தத் தொழிலிலே இருக்க வேண்டும்…” என்பது பற்றி அவர் எழுதியுள்ள சில குறிப்புகள் அதற்கு உதாரணமாகத் திகழ்கின்றன.

“ஒரு படத்திலோ  அல்லது ஒரு நாடகத்திலோ நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு நான்  தோன்றுகின்ற முதல் காட்சியிலேயே நான் ஏற்கின்ற அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தி விடுவதில் உறுதியாக இருப்பேன். 

எந்தக்  காரணத்தை கொண்டும் அடுத்தடுத்த  காட்சிகளில் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் இருந்ததே இல்லை. எனது கதாபாத்திரத்தைப் புரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் நான் ஜாக்கிரதையாக இருப்பேன்” என்று அந்தக் குறிப்புகளில் கூறியுள்ளார்  மனோரமா.

ஒரு நட்சத்திரத்தின் நீண்ட கால திரை உலக வாழ்க்கைக்கும் புகழுக்கும் அடிப்படையாக அமைவது படவுலகமும் – ரசிகர்கள் உலகமும்தான்.

ஒரு நடிகை அல்லது நடிகர் கலை உலகில் நீடித்து இருப்பதற்கு  ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல அவர்கள் இருவருமே அவசியம். இதில் எந்தப் பக்கம் இல்லாவிட்டாலும் நட்சத்திர வாழ்க்கை என்பது செல்லாத நாணயத்தைப்போல் ஆகிவிடும்.

“எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த சினிமாக்காரர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்களால் என்னை என்ன செய்து விடமுடியும்..? எனக்கு என்னுடைய ரசிகர்கள்தான் முக்கியம்…” என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருந்த பல நட்சத்திரங்களை நான் சந்தித்திருக்கிறேன்.

ஆனால், அப்படிப்பட்டவர்களை இப்போது நான் மட்டுமல்ல, ரசிகர்களும் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நடிகர் – நடிகைக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தால் அது அவர்களது திறமை அவர்களுக்கு தேடித் தந்த சொத்து. 

ஆனால், இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எந்த ரசிகரும் தாங்கள் விரும்புகின்ற நட்சத்திரத்தை தூக்கி நிறுத்துவதற்காக திரைப்படம் எடுப்பதில்லை. எந்த ஒரு கலைஞரையும் ரசிகப் பெருமக்களிடம் நிலைக்க வைத்து வாழ வைப்பவர்கள் படவுலகினர்தான்.

ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் ஒரு நடிகர் அல்லது நடிகையின் இரண்டு கண்களைப் போன்றவர்கள். ஆகவே, கலைஞர்கள் எப்போதும்  ரசிகர்கள் – தயாரிப்பாளர்கள்  ஆகிய இருவரையும்  மதித்து நடக்க வேண்டும்.

இன்னொரு விஷயத்தையும் கலைஞர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். கலைஞர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும். அவற்றை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால்  அவற்றை ஸ்டூடியோவரை எடுத்துச் செல்லவே  கூடாது.

என்னைப் பொறுத்தவரையில், எனக்கு எவ்வளவோ பிரச்சனைகள், தொல்லைகள் வந்ததுண்டு. அவைகள் அனைத்தையும் வீட்டில் இருந்து ஷூட்டிங்கிற்கு புறப்பட காரில் ஏறி கார் கதவைத் திறக்கும்வரைதான் என் மனதில் வைத்திருப்பேன். 

கார் கதவைத்  திறந்து உள்ளே உட்காரும்போது நான் அன்று நடிக்கப் போகும் கதாபாத்திரத்தின் குணத்திற்குரிய முழுக் கலைஞராகத்தான் உட்காருவேன். கார் வீட்டை விட்டு புறப்பட்ட மறுகணம்  வீட்டை மறந்து விடுவேன்.   

படப்பிடிப்பு முடிந்து மறுபடியும் வீட்டுக்குப் புறப்படக் காரில் ஏறி உட்கார்ந்த பிறகுதான் வீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி நினைப்பேன். தொழில் முன்னேற்றத்திற்கு இந்த மனப்பாங்கு மிகத் தேவை என்று நான் கருதுகிறேன்…”என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் மனோரமா.   

தனது அனுபவத்தினால் பெற்ற அறிவின் துணையோடு மனோரமா எழுதியுள்ள இந்தக் குறிப்புகள் இன்றுள்ள கலைஞர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஒரு  பாடம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Read more

Local News