Saturday, April 13, 2024

சினிமா வரலாறு-33 – ‘இசைக் குயில்’ எம்.எஸ்.சுப்புலட்சுமியை மூன்று முறை இயக்கிய இயக்குநர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்படப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் ‘சகுந்தலை’ படத்தை இயக்க முடியாத நிலையில் இருப்பதாக ‘கல்கி’ சதாசிவம் அவர்களிடம் சொன்ன இயக்குநர் கே.சுப்ரமணியம், அந்தப் படத்தை இயக்க எல்லிஸ். ஆர். டங்கனை சிபாரிசு செய்தது மட்டுமின்றி டங்கனைத் தொடர்பு கொண்டு ‘சகுந்தலை’ படத்தை இயக்குகின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவரிடமும் சொன்னார்.

“எம்.எஸ்.சுப்புலட்சுமி என்னும் மாபெரும் இசையரசியோடு பணியாற்றக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு ‘சகுந்தலை’ திரைப்படம் தந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் எல்லிஸ். ஆர். டங்கன்தான், அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எம்.எஸ்.சுப்புலட்சுமி கண்ணீர்விட்டு அழவும் காரணமாக இருந்தார்.

ராஜ பிரதிநிதிகளும், மக்களும் புடை சூழ துஷ்யந்த மகராஜா கொலு மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது அங்கே வரும் சகுந்தலை, ராஜாவைப் பார்த்து கோபத்திலே கொந்தளிக்க வேண்டிய ஒரு காட்சி ‘சகுந்தலை’ படத்துக்காகப் படமாக்கப்பட்டபோது அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று மிகப் பொறுமையாக எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது மட்டுமின்றி நடித்தும் காட்டினார் டங்கன்.

அதற்குப் பிறகு பல முறை ஒத்திகை பார்த்துவிட்டே அந்தக் காட்சியைப் படமாக்கத்

தொடங்கினார் டங்கன். ஆனால் பல முறை படமாக்கியபோதும் அந்தக் காட்சிக்கு வேண்டிய கோபத்தை எம்.எஸ். அவர்கள் சரியாக வெளிக்காட்டவில்லை. அதைக் கண்டு முகம் சிவந்த டங்கன் கோபமாக செட்டைவிட்டு வெளியே போய்விட்டார்.

சிறிது நேரம் சென்ற பிறகு செட்டுக்குள் நுழைந்த அவர், “காலையிலிருந்து இந்தக் ஒரே காட்சியை எத்தனை முறை படமாக்குவது…? இதுதான் கடைசி டேக். இந்த டேக்கிலும் சரியாக நடிக்கவில்லை என்றால் நான் திரும்ப பொறுமையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டேன். ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு போய்க் கொண்டே இருப்பேன்…” என்று பொதுவாக உரத்த குரலில் சத்தம் போட்டது மட்டுமின்றி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அருகில் போய் “இவ்வளவு மோசமான நடிகையா இருப்பீங்க என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

அவர் அப்படி சொன்னதும் ஒரு பக்கம் அவமானம், இன்னொரு பக்கம் கோபம், மற்றொரு பக்கம் ஆத்திரம் என்று பல உணர்ச்சிகளுக்கு ஆளான சுப்புலட்சுமியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது.

அந்தக் கால கட்டத்தில் இசையுலகில் ராணியாக இருந்தார் எம்.எஸ். அது தவிர ‘சகுந்தலை’ படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அப்படியிருக்கும்போது அவரை இப்படி மனம் போனபடி டங்கன் திட்டியது சுப்புலட்சுமி அவர்களை மட்டுமின்றி அந்த செட்டில் இருந்த எல்லோரையுமே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

ஆனால் டங்கன் எதையும் பொருட்படுத்தவில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி அழத் தொடங்கிய அடுத்த நிமிடம் அவரை சமாதானப்படுத்துவதற்கு பதிலாக “லைட்ஸ்.. கேமிரா, ஆக்ஷன்” என்று அடுத்தடுத்து கட்டளைகளை பிறப்பித்தார்.

அதை அடுத்து அந்தக் காட்சியில் நடிக்க வந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு துஷ்யந்தனை விட டங்கன் பேரில் கோபம் அதிகமாக இருந்தது. அந்தக் கோபத்தில் ஆத்திரம் பொங்க துஷ்யந்தனை வறுத்து எடுத்துவிட்டார் அவர். படப்பிடிப்பு முடிந்ததும் தான் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக அந்தக் காட்சியில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமியை கட்டிப் பிடித்துப் பாராட்டினார் டங்கன்.

“எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் ஒரு மிகச் சிறந்த நடிகை. அப்படிப்பட்டவரை நான் மோசமான நடிகை என்று திட்டியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டு அழுதார். நான் அவரை ஆங்கிலத்தில்தான் திட்டினேன். அவருக்கு ஆங்கிலத்தில் மிகச் சில வார்த்தைகளே அப்போது தெரியும் என்றாலும் நான் கோபத்தின் உச்சியில் இருந்ததால் அவரது நடிப்ப்பைத்தான் நான் குறை கூறுகிறேன் என்று அவரால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது” என்று இந்த சம்பவம் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டங்கன்.

மேலும், “புகழ் பெற்ற நட்சத்திரங்களோடு பணியாற்றும்போது நாம் எதிர்பார்க்கின்ற உணர்ச்சிகளை அவர்களிடமிருந்து பெறுவதற்கு இது போன்ற சில உபாயங்களைக் கையாள வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடுகிறது” என்றும் அந்தக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார் டங்கன்.

1940-ம் ஆண்டின் மாபெரும் வெற்றிச் சித்திரமாக ‘சகுந்தலை’ அமைந்தது. அந்தப் படத்தில் ‘சகுந்தலை’ தனது மோதிரத்தை ஆற்றிலே தொலைக்கும் காட்சியை ஸ்லோ மோஷனில் படமாக்கியிருந்தார் டங்கன். அதுவரை ரசிகர்கள் அப்படி ஒரு காட்சியை திரைப்படத்தில் பார்த்தது இல்லை என்பதால் ரசிகர்களிடம் அந்தக் காட்சி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

‘சகுந்தலை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாநாயகியாக நடிக்க இசையின் மேன்மையைப் பற்றி சொல்லும ஒரு கதையைப் படமாக்க ஆசைப்பட்டார் எம்.எஸ். அவர்களின் கணவரான சதாசிவம். அதற்காக எந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அவர் கல்கி அவர்கள் உட்பட பல நண்பர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட போது மீரா கதையைத் தேர்வு செய்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

எம்.எஸ்.நடித்து மாபெரும் வெற்றிச் சித்திரமாக அமைந்த ‘சகுந்தலை’ படத்தின் இயக்குநரான எல்லிஸ் ஆர்.டங்கன் அவர்களையே ‘மீரா’ படத்தை இயக்குவதற்கும் சதாசிவமும், சுப்புலட்சுமியும் தேர்ந்தெடுத்தனர்.

பொலிவான முகத்தோற்றத்தைப் பெற்றிருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை ‘மீரா’ படத்தில் இன்னும் அழகாகத் திரையில் காட்ட புதுமையான முயற்சி ஒன்றை மேற்கொண்ட டங்கன், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தத்ரூபமான தோற்றத்துடன் அவரது மார்பளவு சிலை ஒன்றை உருவாக்கச் சொன்னார்.

அந்தச் சிலை தயாரானதும் அந்தச் சிலையை வித்தியாசமான பல கோணங்களில் லைட்டிங் செய்யச் சொல்லி தனது ஒளிப்பதிவாளரான ஜித்தன் பானர்ஜியிடம் சொன்ன டங்கன், எந்தெந்த ஒளியமைப்பில் அவர் மிகவும் அழகாக இருந்தாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டு பின்னர் அதே ஒளியமைப்பில் அவரைப் படமாக்கினார்.

‘மீரா’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி தெய்வீக அழகுடன் ஒளிர்ந்ததற்குக் அதுவே காரணம்.

‘மீரா’ படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் ராஜஸ்தான், துவாரகா போன்ற பல இடங்களில் நடைபெற்றது.

மீராவாக நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியபடி நடந்து வரும் காட்சி துவாரகாவில் படமாக்கப்ட்டபோது எம்.எஸ்.சுப்புலட்சுமியை பக்த மீராவாகவே பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரது காலில் பயபக்தியோடு விழுந்து வணங்கினர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அந்த பாத்திரத்தில் நடித்தபோது பக்த மீராவாகவே மாறினார். அதன் விளைவாக துவாரகையில் உள்ள கண்ணன் கோவிலில் மீராவாக அடி எடுத்து வைத்த சுப்புலட்சுமியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதைத் தொடர்ந்து அங்கேயே மயங்கி சரிந்தார் அவர்.

தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது ‘மீரா’. பண்டிட் ஜவஹர்லால் நேரு, மவுண்ட்பேட்டன் பிரபு, ‘கவிக்குயில்’ சரோஜினி தேவி ஆகியோருக்காக ‘மீரா’வின் சிறப்புக் காட்சி ஒன்று, தலைநகர் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எம.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெருமையை சர்வதேச அளவிலே எடுத்துச் சென்ற படமாக ‘மீரா’ படம் அமைந்தது. ‘மீரா’ படத்தின் இந்தி பதிப்பையும் சேர்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நடித்தது மொத்தம் ஐந்து படங்கள் மட்டுமே. அதில் மூன்று படங்களை இயக்குகின்ற வாய்ப்பைப் பெற்றவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.

‘மீரா’ படத்திலே ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களையும் நடிக்க வைத்திருந்தார் டங்கன்.1936-ம் ஆண்டில் ‘சதி லீலாவதி’ படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களை ஓர் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகப்படுத்திய எல்லிஸ் ஆர்.டங்கன் 1950-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கதாநயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தை இயக்கினார்.

‘மந்திரி குமாரி’ படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்திருந்த நிலையில் தனது மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக தனது மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்க தாய் நாடு திரும்பினார் டங்கன். ஆனால், எந்த மண வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள டங்கன் இந்தியாவை விட்டு கிளம்பினாரோ அந்த மண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. 1951-ம் ஆண்டு தனது மனைவி எலைனைப் பிரிந்தார் டங்கன்.

எல்லிஸ்.ஆர்.டங்கன் அமேரிக்கா திரும்பிய பிறகு ’மந்திரி குமாரி’ படத்தில் படமாக்கப்பட வேண்டியிருந்த மீதி காட்சிகளை இயக்கும் பொறுப்பை ஏற்று படத்தை முடித்தார் அப்படத்தின் தயாரிப்பாளரான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம். அதனால், படத்தின் டைட்டிலில் டங்கனுடைய பெயருடன் சுந்தரம் அவர்களின் பெயரும் இடம் பெற்றது.

அதற்குப் பின்னர் பல டாக்குமெண்டரி படங்களை இயக்க இந்தியா வந்த எல்லிஸ்.ஆர்.டங்கன் இறுதியாக இந்தியா வந்தது 1993-ம் ஆண்டில். அப்போது தமிழ்த் திரையுலகம் சார்பில் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

கமல்ஹாசன், ஏவி.எம்.சரவணன், ‘மந்திரி குமாரி’ படத்தில் நடித்த ஜி.சகுந்தலா உட்பட எண்ணற்ற திரையுலக பிரமுகர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அந்த விழாவிலே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய ‘மீரா’ படத்திலிருந்து ஒரு பாடலை அந்த நிகழ்ச்சியில் பாடினார். அப்போது அந்த அரங்கில் கண்ணில் ஈரம் கசியாமல் இருந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் என்று தமிழ்த் திரையுலகின் தூண்களாக இருந்த பல சாதனையாளர்களை அறிமுகம் செய்த எல்லிஸ் ஆர்.டங்கன் 2001-ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று மறைந்தார்.

தமிழ்த் திரையுலக வரலாற்றை எப்போது யார் எழுதினாலும் டங்கன் அவர்களுடைய பெயர் இன்றி அது நிறைவடையாது.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News