Saturday, April 13, 2024

சினிமா வரலாறு-32 எம்.ஜி.ஆரையும், எம்.ஜி.சக்ரபாணியையும் அறிமுகம் செய்த இயக்குநர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சதி லீலாவதி’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரையும், ‘இரு சகோதரர்கள்’ படத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் அறிமுகம் செய்த எல்லிஸ்.ஆர்.டங்கன் தமிழில் பேச அறிந்திருந்த மூன்று வார்த்தைகள் ‘சாராயம் கொண்டு வா’ என்பதுதான்.

அப்படிப்பட்ட அவர் எப்படிப்பட்ட தமிழ் இலக்கியவாதிகளுடன் பணியாற்றி இருக்கிறார் எனபதைப் பார்க்கும்போது பிரம்மிப்பு ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், சுத்தானந்த யோகியார், கல்கி, இளங்கோவன், கலைஞர் கருணாநிதி என்று அவர் பணியாற்றிய இலக்கியவாதிகளின் பட்டியல் மிகவும் நீளமானது.

1935-ம் ஆண்டு முதல் 1950-வரை இந்தியாவில் தங்கிய எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கிய தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 13.

அமெரிக்காவில் ஓகையா மாநிலத்தில் அமைந்துள்ள பார்டன் என்ற சிற்றூரில் பிறந்தவர் டங்கன். சிறுவயது முதலே புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம்  கொண்டவராக இருந்த அவர் தனது பள்ளிப் படிப்பு முடிவடைந்தவுடன் தெற்கு கலிபோர்னியாவில் அமைந்திருந்த பல்கலைக்கழகத்தில் திரைப்படத் துறைக்கான படிப்பில் ஒளிப்பதிவுப் பிரிவில் சேர்ந்தார்.

அப்போது அதே பல்கலைக்கழகத்தில் மானக்லால் தாண்டன் என்ற இந்திய மாணவர் திரைப்படத் துறை சம்பந்தமாக படித்துக் கொண்டிருந்தார். மானக்லால் தாண்டன் அப்போது பம்பாயில் இருந்த மிகப் பெரிய செல்வந்தரின் பிள்ளை. திரைப்படம் சம்பந்தமாக படித்துவிட்டு வரப் போகும் தனது மகனுக்காக பம்பாயில் மிகப் பெரிய ஸ்டுடியோ ஒன்றை  நிர்மாணித்துக் கொண்டிருந்தார் அவரது தந்தை.

தனது சொந்த ஸ்டுடியோவில் படத் தயாரிப்புகளைத் தொடங்குவதற்காக இந்தியா சென்றபோது தனது நண்பர்களான எல்லிஸ்.ஆர்.டங்கனையும், மைக்கேல் ஒமலேவையும் தன்னுடன் இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார் தாண்டன்.

அவரது அழைப்பை ஏற்று  1935-ம் ஆண்டு இந்தியாவிற்கு புறப்பட்டார் டங்கன். ஆறு மாதங்கள் இந்தியாவில் தங்குவதற்காக அன்று அவர் மேற்கொண்ட அந்தப்  பயணம் பதினைந்து வருடங்கள் அவரை இந்தியாவில் தங்க வைக்கப் போகிறது என்று அப்போது டங்கனுக்குத் தெரியாது.

சில காரணங்களால் திட்டமிட்டபடி படத் தயாரிப்பு பணிகளை மானக்லால்  தாண்டனால் தொடங்க முடியவில்லை.  அந்த சந்தர்ப்பத்தில்தான் கே.பி.சுந்தராம்பாள் நந்தனாராக நடித்த ‘பக்த நந்தனார்’ திரைப்படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அவருக்கு வழங்கினார் அசன் தாஸ் என்னும் தயாரிப்பாளர்.

அதுதான் கே.பி.சுந்தராம்பாள் நடித்த முதல் திரைப்படம். அந்தத் திரைப்படத்தில் மானக்லால் தாண்டனோடு இனிந்து பணியாற்றிய டங்கன் அந்த படத்தின் சில காட்சிகளை ஒளிப்பதிவு செய்தது மட்டுமின்றி இயக்கவும் செய்தார். எல்லிஸ் ஆர்.டங்கன் பணியாற்றிய முதல் படமாக ‘பக்த நந்தனார்’ அமைந்தது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எல்லிஸ்.ஆர்.டங்கனும்  ஒமேலேயும் அமெரிக்காவிற்குத் திரும்பினார்கள். படப்பிடிப்பு முடிந்து ‘பக்த நந்தனார்’ படம் வெளியீட்டுக்கு தயாரானபோது அந்தப் படத்தின் பிரீமியர் கட்சி பம்பாயில் நடைபெற்றது.

அந்தக் காட்சிக்கு வரும்படி  தனது  நண்பரான  எல்லிஸ் ஆர்.டங்கனுக்கு மானக்லால் தாண்டன் விடுத்திருந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு மீண்டும் இந்தியா வந்தார் டங்கன்.

‘பக்த நந்தனார்’ படத்தைத் தொடர்ந்து  பல திரைப்பட நிறுவனங்களில் இருந்து  மானக்லால் தாண்டனுக்கு அழைப்புகள் வந்தன. அதில் ஒரு அழைப்புதான் ‘சதி லீலாவதி’ படத்தை இயக்க அவருக்கு வந்த வாய்ப்பு. தனக்கு வந்த பல வாய்ப்புகளில் ‘தலித் குசும்’ என்ற இந்திப் படத்தை இயக்கும் வாய்ப்பை அப்போது தாண்டன் ஏற்றுக் கொண்டிருந்ததால் அவரால் ‘சதி லீலாவதி’ படத்தை இயக்க முடியவில்லை.

ஆகவே தனது நண்பரான எல்லிஸ் ஆர்.டங்கனை தயாரிப்பாளர் மருதாசலம் செட்டியாருக்கு பரிந்துரை செய்தார் தாண்டன். அப்போது டங்கனுக்கு சுத்தமாக ஒரு தமிழ் வார்த்தை கூட தெரியாது. ஆகவே, அந்த 27 வயது இளைஞனை நம்பி படத்தை இயக்கும் வாய்ப்பை எப்படித் தருவது என்று மருதாசலம் செட்டியார் யோசித்தபோது என்ன  சொன்னால் மருதாசலம் செட்டியாரை வீழ்த்த முடியுமோ அதைச்  சொன்னார் தாண்டன்.

டங்கன்  அமெரிக்காவில் திரைப்படக் கலை பற்றி படித்தவர் என்று தாண்டன் சொன்னதும் மறு பேச்சின்றி அவரை இயக்குநராக ஏற்றுக் கொண்டார் மருதாசலம் செட்டியார்.

தமிழ் சினிமா உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை ‘சதி லீலாவதி’ படத்தின் மூலம் எல்லிஸ் ஆர்.டங்கனுக்குக் கிடைத்தது.  அந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். மட்டுமின்றி என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா போன்ற பல கலைஞர்களும் அறிமுகமானார்கள்.

முதல் படத்திலேயே தனது வித்தியாசமான கேமிரா கோணங்களால் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார் டங்கன். ஒரே இடத்தில் கேமிராவை நிலையாக நிறுத்தி வைத்துப் படம் எடுக்காமல் காட்சிகளைப் படமாக்க முதன்முதலாக டிராலியை அந்தப் படத்திலே பயன்படுத்தியிருந்தார் டங்கன். அதனால் நீண்ட காலத்திற்கு டிராலி மூவ்மெண்டுகளை ‘டங்கன் டிராலி’ என்ற பெயரிலே பல ஒளிப்பதிவாளர்கள் அழைத்து வந்தனர்.

‘சதி லீலாவதி’ படத்தில் நடிக்க எம்ஜி.சக்ரபாணியும் முயற்சி செய்தார் என்றாலும் சரியான பாத்திரம்  அமையாததால் அவரை அந்தப் படத்தில் டங்கன்  பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன் பின்னர் தான் இயக்கிய ‘இரு சகோதரர்கள்’ என்ற திரைப்படத்தில் எம்.ஜி.சக்ரபாணியை அறிமுகம் செய்தார் அவர்.

எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய ஐந்தாவது படமாக எம்.கே.தியாகராஜ பாகவதரும், எம்.ஆர்.சந்தானலட்சுமியும் ஜோடியாக நடித்த ‘அம்பிகாபதி’ திரைப்படம் அமைந்தது. ‘அம்பிகாபதி’ படத்தின் கதையைக் கேட்ட டங்கனுக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துப் போனது. அந்த ‘அம்பிகாபதி’ படத்திற்கு வசனம் எழுதியவர் தமிழ்த் திரை உலகின் வசனப் போக்கை மாற்றியமைத்த பிரபல எழுத்தாளரான இளங்கோவன்.

தமிழ்த் திரைப்படங்களில் ‘நாதா’, ‘ஸ்வாமி’ என்று பேசிக் கொண்டிருந்த கதாபாத்திரங்கள் இயல்பாக பேசத் தொடங்கியது இவரது வருகைக்குப் பிறகுதான் நிகழ்ந்தது.

‘அம்பிகாபதி’, ‘ரோமியோ ஜுலியட்’டைப் போன்ற ஒரு காதல் கதை என்பதால்  அந்தத் திரைப்படத்தை இயக்குவதற்கு ரோமியோ ஜூலியட்டை முன் மாதிரியாக வைத்துக் கொண்ட டங்கன் ரோமியோ ஜுலியட்டிலிருந்து சில காட்சிகளை இளங்கோவனிடம் கொடுத்து தமிழில் மொழி பெயர்த்துத் தரச் சொல்லி அந்தப் படத்திலே பயன்படுத்திக் கொண்டார்.

அம்பிகாபதி படுக்கையறைக்கு அமராவதியை தூக்கிச் செல்வது போல பல நெருக்கமான காட்சிகளை அந்தப் படத்துக்காக படமாக்கி இருந்தார் டங்கன். அதற்கு முன்பு தமிழ்ப் படங்களில் அத்தனை நெருக்கமான காதல் காட்சிகள் இடம் பெற்றதில்லை. ஆகவே அப்ப்டிப்பட்ட காட்சிகள் மூலம் டங்கன் அமெரிக்க கலாச்சாரத்தை தமிழ்ப் படங்களில் புகுத்துவதாகக்கூட அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.  

‘சதி லீலாவதி’ படத்தில் தான் அறிமுகப்படுத்திய டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரை ‘அம்பிகாபதி’ படத்தில் பயன்படுத்திக் கொண்டார் டங்கன். தியாகராஜா பாகவதரின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்த ‘அம்பிகாபதி’ ஒரு வருடம் ஒடி மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

‘அம்பிகாபதி’ படத்தைத் தொடர்ந்து இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ படத்தை இயக்கினார் டங்கன். அந்த வாய்ப்பை இவருக்கு வழங்கியவர் ‘தமிழ்த் திரையுலகின் பிதாமகன்’ என்று எல்லோராலும் போற்றப்படும்  பிரபல இயக்குநரான கே.சுப்ரமணியம் அவர்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் அவரது கணவரான சதாசிவமும் இணைந்து ‘சந்திரபிரபா சினிடோன்’ என்ற பெயரில் ஒரு திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினர்.

அந்த நிறுவனத்தின் சார்பில் ‘சகுந்தலை’ படத்தை இயக்குவதற்காக இயக்குநர் கே.சுப்ரமணியத்தை சதாசிவம் அணுகியபோது ஏற்கனவே பல பட வேலைகள் இருப்பதால் அந்த படத்தை ஒப்புக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் கே.சுப்ரமணியம்.

அருடைய அந்த பதிலால் மிகுந்த ஏமாற்றமடைந்த சதாசிவம் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சுப்ரமணியம் அவர்களை சந்தித்து ‘சகுந்தலை’ படத்தை இயக்கப் பொருத்தமான ஒரு இயக்குநரை  பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்ள சுப்ரமணியம் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களின் பெயரை சொன்னார்.

இப்படி கே.சுப்ரமணியம் அவர்கள் பரிந்துரைத்த டங்கன் ‘சகுந்தலை’ படப்பிடிப்பில் “நீங்கள் எல்லாம் ஒரு நடிகையா..? நடிக்கத் தெரியவில்லை என்றால் ஏன் நடிக்க வருகிறீர்கள்?” என்றெல்லாம் மனம் போனபடி எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பார்த்துப் பேச… இடைவிடாமல் கண்ணீர் விட்டு அழுதார் அந்தக் கலையரசி.

அதற்குப் பிறகும் டங்கன் இயக்கத்திலே தொடர்ந்து நடிக்க அவர் எவ்வாறு ஒப்புக் கொண்டார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News