Friday, April 12, 2024

பீஸ்ட் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த படம் இது என்பதால் ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. அடுத்த நான்கு நாட்களுக்கு முன் பதிவுகூட தமிழகம் முழுவதும் நிரம்பியுள்ளது.

நெல்சனின் முதல் இரண்டு படங்களுமே ஹிட் அடித்துள்ளதால் இந்தப் படத்தில் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருப்பதாலும் இந்தப் படத்திற்கு இன்னொரு பக்கம் பொதுவான ரசிகர்களிடத்திலும் எதிர்பார்ப்புகள் காத்திருந்தன. ஆனால், படமோ கலவையான ஒரு அனுபவத்தைத்தான் நமக்குத் தந்திருக்கிறது.

ரா உளவுத் துறை அதிகாரியான வீரராகவன் என்ற விஜய் இந்திய நாட்டுக்காக பல்வேறு உளவு, மற்றும் ராணுவத் துறை ஆபரேஷன்களில் கலந்து கொண்டவர். பல தீவிரவாதிகளைப் பிடித்துக் கொடுத்திருப்பவர். தற்போது ஒரு மனக் கசப்பின் காரணமாக வேலையில் இருந்து விலகி சென்னையில் குடியேறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். சேர்ந்த முதல் நாளே செக்யூரிட்டி நிறுவன உரிமையாளருடன் ஒரு மால் காம்ப்ளக்ஸிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்படுகிறது.

அன்றைக்கு பார்த்து அந்த மால் காம்ப்ளக்ஸிற்குள் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, தில்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களது அமைப்பைச் சேர்ந்த தலைவரான உமர் பரூக் என்பவரை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் விஜய் அங்கே இருப்பதை அறிந்த உளவுத் துறை உயரதிகாரிகள் அவரிடம் மக்களைக் காப்பாற்றச் சொல்கிறார்கள். அவரும் அதைச் செய்யத் துவங்குகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்தப் பிணைக் கைதிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரின் மனைவியும், மகளும் இருப்பதையறிந்த மத்திய அரசு உமர் பரூக்கை விடுவிக்க முடிவெடுக்கிறது.

தான் பிடித்துக் கொடுத்த தீவிரவாதியான உமர் பரூக்கை மத்திய அரசு விடுவிக்கும் முயற்சியை விஜய் எதிர்க்கிறார். இதனால் அதே மால் காம்ப்ளக்ஸூக்குள் விஜய் டீமுக்கும், தீவிரவாதக் கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட.. உமர் பரூக்கின் விடுதலை தாமதமாகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தையும் தடைபடுகிறது.

அடுத்து என்ன நடக்கிறது.. விஜய் வெற்றி பெற்றாரா.. அல்லது தீவிரவாதிகள் வெற்றி பெற்றார்களா.. அல்லது மத்திய அரசு வென்றதா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

விஜய் வழக்கம்போல தனது ரசிகர்களுக்கு எப்படிப் பிடிக்குமோ அப்படியே நடித்திருக்கிறார். அதே நடனம், நடன த்தில் வேகம்.. ஸ்டைலான நடனம்.. ஒற்றை வரி வசனம், மாஸ் வசனங்கள், பஞ்ச் டயலாக்குகள் என்று அவரது ரசிகர்களை முடிந்த அளவுக்குத் திருப்தியடைய வைத்திருக்கிறார்.

சண்டை காட்சிகளில் தொழில் நுட்பத்தின் உதவியோடும், இயக்குநரின் சிறப்பான இயக்கத் திறமையினாலும் காட்சிக்குக் காட்சி ஹீரோயிஸத்தை அப்படியே கடைசிவரையிலும் மெயின்டெயின் செய்திருக்கிறார் விஜய். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா நானே என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்பதுதான் இந்தப் படத்தில் விஜய் பேசியிருக்கும் கடைசி வசனம். இதுவே அவரது ரசிகர்களுக்கு பூஸ்ட்டாகவுள்ளது.

நாயகிகளில் பூஜா ஹெக்டே குழந்தைத்தனமான முகம். விஜய்க்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத நாயகி. ஆனால் நடனமும், நடிப்பும் சிறப்பாக இருப்பதால் நாமும் பொறுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு நாயகியான அபர்ணா தாஸூம் தனது கேரக்டரை மட்டும் ஸ்டெடி செய்து நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு வைக்கப்பட்டிருக்கும் குளோஸப் ஷாட்டுகள் அனைத்தும் இவரது அழகை கிளீன் போல்டாக்கிவிட்டன என்பதுதான் வருத்தமான விஷயம்.

இயக்குநர் செல்வராகவன் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் ஒரு உதவி அலுவலராக தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்தே கொஞ்சம்கூட சீரியஸே இல்லாமல் வசனங்களே அள்ளி வீசுகிறார். சில இடங்களில் வசனங்கள் வெடிகுண்டாக வெடிக்கின்றன. பல இடங்களில் லேசாக புன்னகைக்க வைத்திருக்கிறது.

மிஷ்கினின் ஆஸ்தான நடிகரான ஷாஜி இந்தப் படத்தில் வில்லங்கமான உள்துறை அமைச்சராக நடித்திருக்கிறார். இவருக்கும் செல்வராகவனுக்கும் இடையிலான பஞ்சாயத்துகள், பேச்சுவார்த்தைகள் மட்டும் கலகல..!

மால் காம்பளக்ஸூக்குள் விஜய்யுடன் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களில் விடிவி கணேஷ் வழக்கம்போல வார்த்தைகளுடன் விளையாடியிருக்கிறார். இவரும் பூஜா ஹெக்டேவுக்கு நிச்சயித்த மாப்பிள்ளையும் பேசும் பேச்சுக்கள் அவ்வப்போது கலகலக்க வைக்கின்றன.

யோகிபாபுவும், ரெடின் கிங்ஸ்லியும் இன்னொரு பக்கம் நம்மை சிரிக்க வைக்க முயன்றுள்ளார்கள்.  வில்லன் கதாபாத்திர நடிகரின் பெர்பார்மென்ஸ் சொல்லிக் கொள்ளும்படியில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இதனாலேயே விஜய்யின் ஹீரோயிஸம் இதில் பேசப்படாமலேயே போய்விட்டது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், சண்டை இயக்குநரின் சிறப்பான பயிற்சியும்தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். சண்டை காட்சிகளில் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனாலும் சிலவைகளில் லாஜிக் எல்லை மீறல்கள் அநியாயத்திற்கு இருக்கின்றன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

அனிருத்தின் இசையில் இரண்டு பாடல்களுமே பட ரிலீஸூக்கு முன்பேயே செம ஹிட். படத்திலும் சிறப்பாகவே படமாக்கப்பட்டுள்ளன. நடன இயக்குநருக்கு ஒரு பாராட்டு. பின்னணி இசையிலும் அனிருத் கவனிக்கப்பட்டிருக்கிறார். எங்கிருந்து சுட்டது என்பதை இனிமேல் யாராவது கண்டுபிடித்துச் சொல்வார்கள் என்று நினைக்கிறோம்.

கலை இயக்குநரின் பங்களிப்பு மிகப் பெரியது. மால் காம்ப்ளக்ஸில் என்னென்ன இருக்கும் என்பதையெல்லாம் துல்லியமாக அறிந்து அதுபோலவே செய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

நெல்சனின் இயக்கத்தில் குறையில்லை. விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து இயக்கும்போது ஹீரோயிஸத்துக்காகக் கொஞ்சம் இறங்கித்தான் செல்வார்கள். ஆனால் இதில் ரொம்பவே சறுக்கியிருக்கிறார் இயக்குநர்.

அதிலும் கடைசி காட்சிகள் முழுக்க, முழுக்க சிரிப்பை வரவழைத்தது. இந்திய விமானப் படையின் போர் விமானத்தை பாகிஸ்தானுக்குக் கடத்திச் சென்று அங்கேயே ஒரு மாத காலம் காத்திருந்து உமர் பரூக்கை திரும்பவும் அங்கேயிருந்து தூக்கி வரும் காட்சிகளெல்லாம் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத திரைக்கதை. முட்டாள்தனமான திரைக்கதை என்றும் சொல்லலாம்.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றிப் பேசியே கல்லா கட்டுவார்கள் சினிமாக்காரர்கள். இது ஒருவகையில் இஸ்லாமியர்கள் மீதான எதிர்ப்பு, அவநம்பிக்கை, சக மனிதர்களிடையே பிளவு, சகோதரத்துவ இழப்பு போன்றவைகளை நாட்டில் ஏற்படுத்துகிறது. இனியாவது இயக்குநர்கள் இது போன்ற கதைகளை விட்டொழித்தால் அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது. தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லது.

விஜய்யின் அரசியல் பிரவேசம், மற்றும் அரசியல் ஆசைக்காக ஹிந்தி எதிர்ப்பு வசனம் ஒன்றையும் வைத்து அவரது ரசிகர்களையும் திருப்திப்படுத்தி, படத்திற்கு திரையுலகத்தையும் தாண்டி வெளியுலகத்திலும் பரபரப்பை உண்டாக்க முனைந்திருக்கிறார் இயக்குநர். அவருடைய முயற்சி பலித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் “நான் ஹிந்தி பேச முடியாது. நீ வேண்ணா தமிழ் கத்துக்கோ…” என்று சொல்லும் விஜய்தான் சென்னையில் இருக்கும் தீவிரவாதிகளிடத்தில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலுமாக பேசுகிறார். இதென்ன முரண்பாடான திரைக்கதை என்று தெரியவில்லை.

ரோஜா, கூர்க்கா உள்ளிட்ட பல தமிழ்ப் படங்கள் மற்றும், ஹாலிவுட்டின் டை ஹார்டு சீரீஸ் படங்கள், மணி ஹெய்ஸ்ட் என்ற புகழ் பெற்ற நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸின் கதைகளை உள்ளடக்கிய இந்தப் படம் அதில் இருந்து மேம்பட்ட திரைக்கதையைக் கொண்டிருந்தால் நிச்சயமாக அனைவராலும் இதைவிட அதிகமாகவே பேசப்பட்டிருக்கும் என்பது உண்மை.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News