Friday, April 12, 2024

அரண்மனை-3 – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பேயை வைத்து எத்தனைப் படம் வேண்டுமானாலும் எடுக்க முடியும். ஒரே பேயை, ஒரே கதையை வைத்துகூட இத்தனைப் படங்களை எடுக்க முடியுமா..? என்ற கேள்விக்கான வெற்றி சாட்சிதான் இயக்குநர் சுந்தர் சி.-யின் ‘அரண்மனை’ சீரீஸ் படங்கள்.

‘அரண்மனை-1’-ல் துவங்கிய அவரது பேயாட்டம் இப்போது ‘அரண்மனை-3’-ல் வந்து நிற்கிறது. இன்னும் இது தொடரும் என்பதற்கு இப்படத்தில் அவர் செய்திருக்கும் கமர்சியல் வித்தை சான்றாக இருக்கிறது.

ஜமீனாக இருக்கும் சம்பத்தின் அரண்மனையில் சில, பல அமானுஷ்யங்கள் நடக்கின்றன. இதைச் சுட்டிக் காட்டும் தன் குழந்தையை சம்பத் அதட்டி ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்த்துவிடுகிறார்.

22 வருடங்கள் கழித்தும் அதே அமானுஷ்யங்கள் அரண்மனையில் நடக்க… சம்பத்தின் மைத்துனராக வரும் சுந்தர்.சி அமானுஷ்யங்களுக்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றை தீர்ப்பதற்கான காரியங்களைச் செய்கிறார். வழக்கம் போல் முடிவில் இறையருளால் தீமை அவுட்டாகிறது.

இந்தப் படத்தில் ஆர்யாவை ஹீரோ என்று சொன்னால் இந்த உலகில் உள்ள எல்லாப் பேய்களும் நம்மை அடிக்க வந்துவிடும். படத்தின் ஹீரோ சுந்தர்.சி.தான். தான் ஏற்ற கதாப்பாத்திரத்திற்கு ஏற்றம் கொடுத்திருக்கிறார். அரண்மனையில் குடியிருக்கும் இரண்டு பேய்களை கருவறுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் படத்தை சுறுசுறுப்பாக்குகின்றன.

நடிப்பு என்று பார்த்தால் ஆண்ட்ரியாவுக்குத்தான் அதிக ஸ்கோப் கதையில் கிடைத்துள்ளது. வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார். திரைக்கதையும் ஜெட் வேகத்தில் நகர்வதால் அதற்கேற்றாற்போல தனது நடிப்பினை காட்சிக்குக் காட்சி வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார் ஆண்ட்ரியா.

பிள்ளை பாசத்தில் தன் குழந்தையைக் கொன்றுவிட வேண்டாம் என்று துடிக்கும் அந்தக் காட்சியில் ஆண்ட்ரியாவின் நடிப்புத் திறமைக்கு மிகப் பெரிய வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குநர். ஆண்ட்ரியாவும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

அடுத்துப் பாராட்டை பெறுபவர்கள் விவேக், யோகிபாபு, மனோபாலா கூட்டணி. தனது கடைசி படமான இதில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் விவேக். கல்யாணமாகி 15 வருடங்களாகியும் கன்னி கழியாமல் இருக்கும் தனது சோகத்தைச் சொல்லும் காட்சியிலும். அடுத்தடுத்து தான் இருக்கும் காட்சிகளிலெல்லாம் சிரிப்பலையை உண்டு செய்கிறார் விவேக்.

இதேபோல திருடர்களான யோகிபாபுவும், மனோபாலாவும் சேர்ந்து செய்யும் சேட்டைகளும், மனோபாலாவின் முட்டாள்தனமான செயல்களால் வெறுப்பாகும் யோகிபாபுவின் கதையும் படத்தின் விறுவிறுப்பான ஓட்டத்திற்கு உறுதுணையாய் நிற்கின்றன.

படத்தின் நாயகன் ஆர்யாதான் என்று சொன்னாலும், இடைவேளைக்கு பின்பு மிக முக்கியமான காட்சிகளில் அவர் காணாமல் போவது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், ஆர்யா எங்கே…? என்ற கேள்வி படம் பார்ப்பவர்கள் மனதில் தோன்றாத வகையில், மற்ற நட்சத்திரங்கள் படத்தை நகர்த்தி செல்கிறார்கள்.

நளினியின் டிக் டாக் அலப்பறையும், விவேக்-மைனா தம்பதியரின் சண்டையும், மைனா-ஆர்யாவின் இல்லீகல் காதலும் இன்னொரு பக்கம் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது.

ஜமீன்தாரான சம்பத்ராஜ் தனது கம்பீர நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மேலும், வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், வின்செண்ட் அசோகன், விச்சு விஸ்வநாதன் என்று அத்தனை பேருமே அவரவர் கேரக்டர்களுக்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். கோவில் பூசாரியாக நடித்திருப்பவருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். அதிலும் ஷங்கர் மகாதேவனும், ஹரிஹரனும் திரையிலும் தோன்றிப் பாடியிருக்கும் முருகன் பாடல் அசத்தல்.. அதைக் காட்சிப்படுத்தியிருப்பதும், மிகச் சரியாக திரைக்கதையில்  அதனை சேர்த்திருப்பதும் சுந்தர்.சி-யின் எழுத்துத் திறமைக்கு சான்று.

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் அரண்மனையும், காடுகளும், இறுதிக் காட்சியின் செட் அமைப்பும், துர்கா தேவி சிலையின் பிரம்மாண்டமும் அழகுற காண்பிக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் சி.ஜி.யும், கேமிராமேனும் ஒன்றாக இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். படத்தின் இறுதிக் காட்சியின் காட்சியமைப்பினாலும், இயக்கத்தினாலும் லப் டப்’ என்று நம்மை பதட்டத்திலேயே இருக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

எத்தனை நடிகர்கள் நடிப்பதாக இருந்தாலும், அவர்களை சரியான முறையில் பயன்படுத்துவதோடு, திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு காட்சிகளை வடிவமைக்கும் திறன் படைத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. இதனை அவருடைய முந்தைய பல படங்களில் செய்து காட்டியிருக்கிறார். இதிலும் அந்தத் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பம் முதல் முடியும்வரை, நகைச்சுவையையும், திகிலையும், மிரட்டலையும், சஸ்பென்ஸையும் ஒரு சேர கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார். சஸ்பென்ஸ் கதையை சொல்ல வேண்டிய இடத்தில் அவர் சொல்லியிருப்பதும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.

இருந்தாலும் சில இடங்களில் காட்சிகளை நீக்கி, படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். ஆனாலும், படத்தில் இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள்  அந்தக் குறையை போக்கிவிட்டன.

ஏற்கெனவே வந்த அரண்மனை’ பாகங்களில் இருந்து இந்தப் பாகத்தை வேறுபடுத்திக் காட்ட கடும் முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. இதனால்தான் வழக்கமான ஒரு பேய்க்கு பதிலாக இரண்டு பேய்களை உலாவவிட்டிருக்கிறார். எப்படியிருந்தாலும் முதல் இரண்டு பாகங்களைவிடவும் நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் அமைந்திருக்கிறது இந்த மூன்றாம் பாகம்.

RATINGS : 4 / 5

- Advertisement -

Read more

Local News