Friday, April 12, 2024

நடிகர் விவேக்கின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்று காலை மருத்துவமனையில் காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தமிழ்த் திரையுலகத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் நேற்றைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சையளித்த நிலையிலும் அவர் இன்று விடியற்காலை 4.35 மணிக்குக் காலமானார்.

இதையடுத்து அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் திரையுலகத்தின் மூத்தக் கலைஞர்களும், நடிகர், நடிகைகளும், பத்திரிகையாளர்களும், பல்வேறு சமூகத்தினரும், பொதுமக்களும் திரளாக வந்திருந்து நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் கவுண்டமணி, நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் விக்ரம், நடிகர் நாசர், நடிகர் மயில்சாமி, நடிகர் வையாபுரி, நடிகர் ஆடுகளம் நரேன், கவிஞர் சினேகன், நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் விச்சு, நடிகர் சூரி, நடிகர் கணேஷ். நடிகை ஆர்த்தி கணேஷ், நடிகர் தம்பி ராமையா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் அருண் விஜய், நடிகர் லொள்ளு சபா சாமிநாதன், நடிகை மதுமிதா, நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகை குஷ்பூ, நடிகை கீர்த்தி சுரேஷ், சஞ்சனா சிங், இயக்குநர் சீமான், நடிகர் ரோபோ சங்கர், நடிகர் கொட்டாச்சி, கிளிமூக்கு சுப்ரமணி, இயக்குநர் எழில், வீ.சேகர், தயாரிப்பாளர் மோகன், பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி, நடிகர் போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் சரண், லிங்குசாமி, சுசீந்திரன், சரவணன், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் மனோபாலா, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், வைகோ, பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் என்று திரையுலகத்தின் முக்கியப் பிரபலங்கள் பலரும் வந்து விவேக்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பெருந்திரளானா பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட கியூவில் நின்று காத்திருந்து விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதற்கிடையே நடிகர் விவேக்கின் பொது நல சேவையைப் பாராட்டி அவருக்கு போலீஸ் மரியாதை தரவிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

அஞ்சலி செலுத்த வந்தக் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2.30 மணிவரையிலும்தான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்பு அவரது இறுதிச் சடங்கிற்கான வேலைகள் நடந்தன.

மாலை 4 மணிக்கு அவரது வீட்டில் இருந்து ஊர்வலம் கிளம்பியது. முன்னும், பின்னும் நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள் படை சூழ விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மின் மயானத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

அங்கே தமிழக அரசு அறிவித்திருந்தபடி போலீஸார் 78 முறை துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்க வைத்து நடிகர் விவேக்கிற்கு தங்களது மரியாதையை செலுத்தினார்கள்.

அதன் பிறகு விவேக்கின் இளைய மகள் அஸ்வினி அவருக்கு இறுதிக் காரியங்களைச் செய்ய..  6 மணியளவில் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

- Advertisement -

Read more

Local News